documents - 2026

சான்றிதழ் காணாமல் போனால் தடையில்லா சான்று பெற செல்போன் டவர் லொக்கேஷன் கட்டாயம் ..

சற்றுமுன்

சான்றிதழ்கள் காணாமல் போனால் தடையில்லா சான்று பெற செல்போன் டவர் லொக்கேஷன் கட்டாயம் என தமிழக காவல்துறையில் புதிய நடைமுறை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

அண்மைக் காலமாக பலர், ஆவணங்கள் காணாமல் போகாத நிலையில் அல்லது பிறரின் சொத்துகளை அபகரிக்கும் நோக்கத்தில், சென்னை குற்ற ஆவணக் காப்பக போலீஸாரிடம் விண்ணப்பித்து, தடையில்லா சான்று பெற முயற்சிப்பதாகக் குற்றச்சாட்டுகள் எழுந்தன.

இத்தகைய மோசடிகளை முற்றிலும் தடுக்க சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால் புதிதாக நடைமுறையை உத்தரவிட்டுள்ளார்.

அதைத்தொடர்ந்து, காணாமல் போன ஆவணங்கள் தொடர்பான புகார்கள் மீதான விசாரணைக்கான புதிய வழிகாட்டுதல்களை சென்னை குற்ற ஆவண காப்பக போலீஸார் வெளியிட்டுள்ளனர்.

அதன்படி, ஆவணம், வாகனம்,சான்றிதழ்கள் காணாமல் போனதாக குறிப்பிட்டு, அதை புதிதாக பெறுவதற்காக தடையில்லா சான்று பெற விண்ணப்பித்தால், புகார் அளித்தவர் கூறுவது உண்மையா? என குற்ற ஆவண காப்பக போலீஸார் விசாரணை மேற்கொள்வார்கள்.

குறிப்பாக புகார்தாரர் ஆவணங்களைத் தவற விட்டதாக குறிப்பிடப்பட்ட இடத்துக்கு அப்பகுதி காவல் நிலைய போலீஸாருடன் சென்று, அங்குள்ள கண்காணிப்பு கேமராக் காட்சிகளை ஆராய்வார்கள். அதைத் தொடர்ந்து, தவற விட்டவரின் செல்போன் எண்ணைப் பெற்று, சம்பவத்தன்று சம்பவ இடத்தில் அவர் இருந்தாரா? அல்லது வேறு எங்காவது இருந்தாரா? என்பதை சைபர் க்ரைம் போலீஸார் உதவியுடன் செல்போன் டவர் லோக்கேஷன் எடுப்பார்கள்.

மேலும், ஆவணம் தொலைந்து போன புகாரை உறுதிப்படுத்தும் வகையில் குறைந்தபட்சம் 3 சாட்சிகளின் வாக்குமூலம் பெறப்படும். இவைகளில் ஏதேனும் முரண்பாடு இருந்தால், அதுகுறித்த தொடர் விசாரணையில் உண்மைத் தன்மை வெளியாகி விடும் என போலீஸ் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

பொருட்கள், வாகனங்கள், ஆவணங்கள் திருடப்பட்டால் அல்லது தவறவிட்டால் மற்றும் தொலைந்து போனால் அந்தந்த எல்லைக்கு உட்பட்ட குற்றப்பிரிவு போலீஸார் முதல்கட்டமாக புகார் மனுவை பெற்று விசாரணை மேற்கொள்வார்கள். அவர்களுக்கு 19 வழிகாட்டுதல்களை காவல் ஆணையர் வழங்கி யுள்ளார்.

அதன்படி, காணாமல் போன ஆவணங்கள் தொடர்பாக காவல்நிலைய போலீஸாரின் விசாரணை நடைபெறும். அதைத் தொடர்ந்து குற்ற ஆவணக் காப்பக போலீஸார் தடையில்லா சான்று வழங்குவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

documents - 2026

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.