cards - 2026

சிறார்களின் மனதில் சூதாட்டத்தை விதைக்கும் பாடத்திட்டம்! கல்வியாளர்கள், பெற்றோர், சமூக ஆர்வலர்கள் காட்டம்!

சற்றுமுன் கல்வி தமிழகம்
cards - 2026

தமிழக அரசின் பள்ளி கல்வித் துறை சார்பில் வெளியிடப்பட்ட, ஆறாம் வகுப்பு, மூன்றாம் பருவத்துக்கான கணிதப் புத்தகத்தில் முழு எண்கள் குறித்த பாடம் இடம் பெற்றுள்ளது.

அதில், சீட்டுக் கட்டு படத்தை வெளியிட்டு, முழு எண்கள் பற்றி விவரிக்கப்பட்டு உள்ளது.

தமிழகத்தில் மதுவையும், சூதாட்டத்தையும் ஒழிக்க வேண்டும் என, போராட்டங்கள் நடந்து வரும் நிலையில், சீட்டுக் கட்டு விளையாட்டை உதாரணமாகக் கூறி பாடம் தயாரித்திருப்பது தவறானது என, கல்வியாளர்கள் கொந்தளிக்கின்றனர்.

இது குறித்து, கல்வியாளர் சங்கரநாராயணன் கூறியதாவது:
தமிழக மாணவர்களை தேசிய அளவில் தகுதிப்படுத்தும் அளவுக்கு, அவர்களுக்கான பாடத்திட்டங்கள் தயாரிக்கப்பட்டு இருப்பதாக, பள்ளி கல்வித் துறை அதிகாரிகள் சொல்கின்றனர்.

முழு எண்கள்அப்படியொரு பாடப் புத்தகமான ஆறாம் வகுப்பு கணிதம் புத்தகத்தில் தான், சீட்டாட்டத்தை மையப்படுத்தி, முழு எண்களை விவரித்துள்ளனர்.

‘பிளஸ்’ எண்கள், ‘மைனஸ்’ எண்கள், ‘ஜீரோ’ என எல்லாவற்றையும் உள்ளடக்கியதை, கணிதத்தில் முழு எண்கள் என்கிறோம். அதை எப்படி வேண்டுமானாலும் விவரிக்கலாம் என முடிவெடுத்து, தமிழகத்தில் ஆறாம் வகுப்பு பாடத்திட்டத்தை தயாரித்துள்ளனர்.

ALSO READ:  விதிமீறல் பட்டாசு ஆலைகளின் உரிமங்களை ரத்து செய்து போலீஸார் நடவடிக்கை!

உதாரணத்துடன் விளக்க வேண்டும் என்பதற்காக, சீட்டுக் கட்டுகளை வைத்து விவரித்துள்ளனர். சீட்டு விளையாடுவதே தவறு எனும்போது, சூதாட்டத்தை வைத்து பாடம் சொல்லி கொடுத்தால், மாணவர்களின் மனம் அதை நோக்கிச் செல்லும்.தேசிய கல்வி திட்ட பாடங்களில், இதே முழு எண்களுக்கு வேறு உதாரணங்களை கூறியுள்ளனர்.

மலை, பள்ளம், நிலம் போன்றவற்றை வைத்து கூறியுள்ளனர். தெலுங்கானா, கர்நாடகா, ஆந்திரா உள்ளிட்ட தென் மாநிலங்களில், நிலங்களையும், மலைகளையும், குளங்களையும் உதாரணம் காட்டி பாடம் தயாரித்துள்ளனர்.

எனவே, அடுத்த கல்வி ஆண்டிலாவது, சூதாட்ட முன்னுதாரணத்தை பாடத்திட்டத்தில் தவிர்க்க வேண்டும். அதேபோல, நான்காம் வகுப்பு பாடம் ஒன்றில், ஐவகை நிலங்கள் என குறிப்பிடுவதற்கு பதிலாக, நான்கு வகை நிலங்கள் என குறிப்பிட்டுள்ளனர்.
இதுவும் தவறு; திருத்தப்பட வேண்டியது. இவ்வாறு அவர் கூறினார்.

கல்வித் துறை உயர் அதிகாரி ஒருவர் கூறியதாவது:
முழு எண்களை சொல்ல, சூதாட்டத்தை எப்படி உதாரணமாக காட்டி பாடம் தயாரித்தனர் என புரியவில்லை. இப்போது தான், இந்த பிரச்னையை சிலர் கிளப்பி உள்ளனர். சூதாட்டம் உதாரணமாகக் காட்டப்படும்போது, அதுவே மாணவர்கள் மனதில் தவறில்லை என பதியலாம்; அந்த ஆபத்து இருக்கிறது.

ALSO READ:  கம்யூனிஸ்ட்கள் நயவஞ்சகர்கள்; தமிழக அரசை எச்சரிக்கும் இந்து முன்னணி!

அதனால், அடுத்த கல்வியாண்டில், முழு எண்கள் பாடத்தில் வேறு உதாரணங்களை கொண்டு விளக்க ஏற்பாடு செய்யப்படும். வேறு பாடத்திட்டங்களில் குறைகள் இருந்தாலும் களையப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.