தமிழ் புத்தாண்டு நாளில் மதுரை மீனாட்சி அம்மன் -சுந்தரேசுவரர் திருக்கல்யாணம் கோலாகோலமாக பக்தி பரவசத்துடன் இன்று மலர்களால் அமைக்கப்பட்ட திருக்கல்யாண மேடையில் நடந்தது.
உலகப்புகழ் பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோவில் சித்திரை திருவிழா கடந்த 5-ந் தேதி தொடங்கியது. விழாவில் முக்கிய நிகழ்ச்சிகளில் ஒன்றான மீனாட்சி அம்மன் பட்டாபிஷேகம் செவ்வாய்கிழமை இரவில் நடந்து முடிந்த நிலையில்
மதுரை சித்திரை திருவிழாவில் முத்திரை பதிக்கும் நிகழ்ச்சியாக மீனாட்சி அம்மன் -சுந்தரேசுவரர் திருக்கல்யாணம் இன்று திரளான பக்தர்கள் முன்னிலையில் நடைபெற்றது.
கோவிலில் உள்ள வடக்கு-மேற்கு ஆடி வீதியில் உள்ள திருக்கல்யாண மண்டபத்தில் திருக்கல்யாணம் நடைபெறும் மண்டபம் சுமார் ரூ.20 லட்சம் மதிப்பில் ஊட்டி, பெங்களூரு மற்றும் வெளிநாடுகளில் இருந்து வரவழைக்கப்பட்ட வண்ண வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தது.மீனாட்சி அம்மனுக்கு பூண் பூட்டும் போது வானில் இருந்து வண்ண மலர்கள் கொட்டும் வகையில் பல்வேறு ஏற்பாடுகள் செய்யப்பட்டுஇருந்தது.
திருக்கல்யாண நிகழ்ச்சியையொட்டி இன்று அதிகாலை 4 மணி அளவில் சுந்தரேசுவரரும், மீனாட்சி அம்மனும் வெள்ளி சிம்மாசனத்தில் எழுந்தருளி சித்திரை வீதிகளை வலம் வந்தனர். பின்னர் சுவாமி முத்துராமய்யர் மண்டபத்தில் கன்னி ஊஞ்சலாகி திருக்கல்யாண மணமேடையில் எழுந்தருளினார்
அதன் பின்னர் விழாவின் முக்கிய நிகழ்ச்சியான மீனாட்சி அம்மன், சுந்தரேசுவரர் திருக்கல்யாணம் காலை 10.35 மணிக்கு மேல் 10.59 மணிக்குள் மிதுன லக்னத்தில் வேதபாராயண முறைப்படி நடைபெற்றது.இரண்டு ஆண்டுகளுக்குப்பின் இத் திருக்கல்யாண வைபோகத்தை பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கண்டு தரிசித்தனர்.
திருக்கல்யாணம் முடிந்தபின் அம்மனும், சுவாமியும் திருக்கல்யாண கோலத்தில் பழைய திருக்கல்யாண மண்டபத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி அளித்தனர்.இரவு 7.30 மணிக்கு சுந்தரேசுவரர் யானை வாகனத்திலும், மீனாட்சி அம்மன் ஆனந்தராயர் பூப்பல்லக்கிலும் எழுந்தருளி நான்கு மாசி வீதிகளை வலம் வருவார்கள்.
மீனாட்சி-சுந்தரேசுவரர் திருக்கல்யாண நிகழ்வையொட்டி மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்துள்ளனர். தமிழ்புத்தாண்டு, சித்திரை திருநாள், திருக்கல்யாண நிகழ்வு என்பதால் மீனாட்சி அம்மன் கோவிலில் பக்தர்கள் கூட்டம் மிக அதிகளவில் இருந்தது..
திருக்கல்யாணம் முடிந்ததும் பெண்களுக்கு மாங்கல்யம் பிரசாதம் வழக்கப்பட்டது.திருக்கல்யாண விருந்து அறுசுவை பதார்த்தங்களுடன் பக்தர்களுக்கு வழங்கப்பட்டது.லட்சக்கணக்கான பக்தர்களுக்கு திருக்கல்யாண விருந்து வழங்கவும் மதுரை நகரில் பல்வேறு இடங்களில் ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது.பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.








