அட்சய திருதியை தினமான இன்று வாங்கும் புதிய பொருட்கள் வீடுகளில் தங்கி குடும்பத்தில் மங்கலம் நிகழும் அஎன்ற நம்பிக்கை மக்களிடம் நிலவிவரும் நிலையில் இன்று தங்கம் வாங்குவதில் மக்கள் அதிக ஆர்வம் காட்டினர்.தமிழகத்தில் அனைத்து நகரங்களிலும் தங்கநகை கடைகளில் மக்கள் கூட்டம் அதிகளவில் இருந்தது.இன்று தங்கம் விலை குறைந்ததும் தங்கம் வாங்கிய மக்களுக்கு லாபகரமாக இருந்தது.
கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா கட்டுப்பாடு காரணமாக அட்சய திருதியை களையிழந்து போன நிலையில் இந்த ஆண்டு வழக்கமான உற்சாகத்தோடு மக்கள் தங்கம் வாங்கினார்கள். நகை கடைகளில் கூட்டம் களை கட்டியது. ஏற்கனவே வாடிக்கையாளர்களை கவரும் வகையில் முன்னணி நகை கடைகள் அனைத்தும் கடந்த சில தினங்களுக்கு முன்பே முன்பதிவை தொடங்கி விட்டன.கிராமுக்கு இவ்வளவு குறைவு, தங்கத்துக்கு வெள்ளி இலவசம் போன்ற கவர்ச்சிகரமான பரிசுகளை அறிவித்தனர்.
இன்று அதிகாலையிலேயே பெரும்பாலான நகரங்களில் நகை கடைகள் திறக்கப்பட்டன. சென்னையில் தி.நகர், உஸ்மான் ரோடு, புரசைவாக்கம், தாம்பரம் மதுரை கோவை நகை கடை பஜார், திருநெல்வேலி நாகர்கோவில் உட்பட முக்கிய நகரங்களில் நகை கடைகள் உள்ள பஜார்களிலும் நகை கடைகளில் திருவிழா கூட்டம் போல் மக்கள் திரண்டனர். பெரிய அளவில் நகைகள் வாங்க இயலாதவர்களும் ஒரு கிராம், இரண்டு கிராம் வகையிலான தங்க நகைகளை வாங்கினார்கள்.தமிழகம் முழுவதும் 35 ஆயிரம் நகை கடைகளில் வியாபாரம் அதிகமாக நடந்தது.
தங்கம் வாங்கும் மக்களுக்கு வசதியாக
அட்சய திருதியை தினமான இன்று தங்கத்தின் விலையும் குறைந்தது. நேற்று ஒரு கிராம் ரூ. 4,816க்கு விற்றது. இன்று ரூ. 39 குறைந்து கிராம் ரூ.4,777க்கு விற்பனையானது. இதனால் பொதுமக்கள் உற்சாகம் அடைந்தனர்.
தங்கம் வாங்க வசதியில்லாதவர்கள் உப்பு மஞ்சள் அரிசி முதல் மளிகை பொருட்கள், பித்தளை, எலக்ட்ரானிக் பொருட்கள் போன்ற அனைத்துவிதமான பொருட்களையும் வாங்கி பூஜை அறையில் வைத்து அட்சயதிரிதியை கொண்டாடி மகிழ்ந்தனர் .





