
திருவனந்தபுரத்திலுள்ள நெடுமங்காடு நகராட்சி பகுதிக்குட்பட்ட ஒரு தனியார் உணவகத்தில் வாங்கிய புரோட்டா உணவுப் பொட்டலத்தில் பாம்பின் தோல் இருந்ததாக கண்டுபிடித்ததாக புகார்.
கேரளாவில், காசர்கோடு மாவட்டத்தில் உள்ள ஒரு ஹோட்டலில் சிக்கன் ஷவர்மா சாப்பிட்ட மாணவி ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
கேரளா மாநிலம், திருவனந்தபுரத்திலுள்ள நெடுமங்காடு நகராட்சி பகுதிக்குட்பட்ட ஒரு தனியார் உணவகத்தில் வாங்கிய புரோட்டா உணவுப் பொட்டலத்தில் பாம்பின் தோல் இருந்ததாக கண்டுபிடித்ததாக புகார் எழுந்துள்ளது.
கேரள மாநிலம் திருவனந்தபுரம் அருகே உள்ள நெடுமங்காட்டை அடுத்த பூவத்தூர் பகுதியைச் சேர்ந்தவர் பிரியா. இவர், அந்தப் பகுதியில் உள்ள ஒரு ஹோட்டலில் பார்சலில் பரோட்டா வாங்கினார். வீட்டுக்கு கொண்டு சென்று அதை பிரித்து பார்த்தார்.
அப்போது, பார்சலை கட்டி இருந்த காகிதத்தில் பாம்பு தோல் இருந்ததைக் கண்டார். அதிர்ச்சி அடைந்த அவர், இதுபற்றி நெடுமங்காடு போலீசாருக்கும், உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகளுக்கும் தகவல் கொடுத்தார்.
அவர்கள் விரைந்து சென்று பரோட்டா பார்சலை ஆய்வு செய்தனர். மேலும், ஹோட்டலுக்கு சென்று விசாரணை மேற்கொண்டனர்.
இதையடுத்து, உணவுப் பொருட்களை விநியோகம் செய்வதில் அலட்சியமாக இருந்ததாகவும், பாதுகாப்பு அம்சங்களை முறையாக கடைப்பிடிக்கவில்லை என குற்றம்சாட்டியும் அந்த ஹோட்டலுக்கு சீல் வைத்தனர்.
இதனையடுத்து அந்த ஹோட்டல் முழுவதும் ஆய்வு செய்யப்பட்ட நிலையில் தற்போது அந்த உணவகம் மூடப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் குறித்து உணவு பாதுகாப்பு அதிகாரி அர்ஷிதா பஷீர் கூறுகையில் சமயலறையில் போதிய வெளிச்சம் இல்லை மற்றும் குப்பைகள் வெளியில் கொட்டப்பட்டிருந்தன.
இதனால் ஹோட்டலை மூட உத்தரவிட்டு உள்ளோம். இந்த மோசமான சூழலில் ஹோட்டலை நடத்தி இதற்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது என்றும் அவர் கூறியுள்ளார்.
மேலும் மீதமுள்ள உணவுகள் ஆய்விற்காக ஆய்வகத்திற்கு அனுப்பப்பட்ட நிலையில், அந்த அறிக்கையின்படி அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இதற்கிடையே, பரோட்டா பார்சலில் பாம்பு தோல் இருந்ததை சிலர் செல்போனில் படம் எடுத்து சமூக வலைதளத்தில் பதிவிட்டனர். இந்த காட்சிகள் தற்போது வைரலாகி வருகிறது.




