ராமேஸ்வரம் அருகே கார் மோதி ஏற்பட்ட விபத்தில் சிக்கி 4 பேர் பலி..

Published:

ராமேஸ்வரம் அருகே இன்று கார் நடைபயிற்சி செய்தவர் மீது மோதி கட்டுப்பாட்டை இழந்த கார் பைக்கில் மோதி ஏற்பட்ட விபத்தில் சிக்கி 4 பேர் பலியாகினர்.

கோவை மாவட்டம் காரமடையை சேர்ந்தவர் நாகம்மாள். இவரது கணவர் ஆறுச்சாமி கடந்த ஒரு ஆண்டுக்கு முன்பு இறந்து விட்டார்.
அவருக்கு திதி கொடுப்பதற்காக நாகம்மாள் மற்றும் அவரது குடும்பத்தினர் காரில் ராமேஸ்வரத்துக்கு புறப்பட்டு வந்தனர். காரை காரமடையை சேர்ந்த சம்பத்குமார் என்பவர் ஓட்டி வந்தார்.நாகம்மாளுடன் அவரது அக்காள் விஜயலட்சுமி, மகன் சந்தோஷ்குமார், மகள் மோகனபிரியா ஆகியோரும் வந்தனர். அவர்களது கார் இன்று காலை ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் அருகே உள்ள
மரக்காயர்பட்டினம் பகுதியில் வந்து கொண்டிருந்தபோது கார் ரோட்டோரம் நடை பயிற்சி சென்று கொண்டிருந்த மண்டபம் பகுதியை சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி (64) என்பவரின் மீது மோதியது.

இதையடுத்து கார் தாறுமாறாக ஓடி எதிரே வந்த மோட்டார் சைக்கிள் மீது மோதி ரோட்டோரம் இருந்த பள்ளத்தில் கவிழ்ந்தது.கார் மோதியதில் நடைபயிற்சி சென்ற கிருஷ்ணமூர்த்தி, மோட்டார் சைக்கிளில் வந்த மண்டபம் யாதவர் தெருவை சேர்ந்த உமாமகேஸ்வரன் (45), முனீஸ்வரன் (41), ஜெகதீஸ்வரன் (19) ஆகிய 4 பேரும் தூக்கிவீசப்பட்டனர்.இதில் உமாமகேஸ்வரன், முனீஸ்வரன், ஜெகதீஸ்வரன் ஆகிய 3 பேரும் சம்பவ இடத்திேலயே பலியாகினர்.

ALSO READ:  தென்காசி வழியே ஓணம் சிறப்பு ரயில்கள் தேவை!

கிருஷ்ணமூர்த்தி படுகாயத்துடன் உயிருக்கு போராடியபடி கிடந்தார். காருக்குள் இருந்தவர்கள் படுகாயம் அடைந்து காரில் இருந்து வெளியே வரமுடியாமல் தவித்தப்படி இருந்தனர்.இந்த கோர விபத்து குறித்து தகவல் அறிந்த மண்டபம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர்.படுகாயம் அடைந்து உயிருக்கு போராடியபடி கிடந்த கிருஷ்ணமூர்த்தி, காரில் இருந்த நாகம்மாள், விஜயலட்சுமி, சந்தோஷ்குமார், மோகனபிரியா, டிரைவர் சம்பத்குமார் ஆகியோரை மீட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

அங்கு சிகிச்சை பலனின்றி கிருஷ்ணமூர்த்தி இறந்தார். இதனால் பலி எண்ணிக்கை 4 ஆக உயர்ந்தது.விபத்தில் பலியான 4 பேரின் உடலையும் போலீசார் மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் இப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது .

Tamil News large 3025237 - 2026
Sakthi Paramasivan.k
Sakthi Paramasivan.k
Media News Reporter, Rajapalayam

Related articles

Recent articles

spot_img