மேட்டூர் அணையின் நீர்மட்டம் வேகமாக உயரத் தொடங்கி இன்று 11 1.10 அடியாக உயர்ந்துள்ளது.
கடந்த ஒரு வார காலமாக காவிரியில் நீர்ப்பிடிப்பு பகுதிகளிலும் மேட்டூர் அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளிலும் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. மழையின் காரணமாக மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு படிப்படியாக அதிகரித்து வருகிறது. நேற்று காலை வினாடிக்கு 9,546கன அடி வீதம் வந்து கொண்டிருந்த நீர்வரத்து மாலையில் வினாடிக்கு 20,000கன அடியாக அதிகரித்தது.
இன்று காலை அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 29,072கன அடியாக அதிகரித்துள்ளது. அணைக்கு வரும் நீரின் அளவு தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில் அணையிலிருந்து குடிநீர் தேவைக்காக வினாடிக்கு 1,500கன அடி நீர் மட்டுமே திறக்கப்பட்டு வருகிறது. இதனால் நேற்று முன்தினம் காலை 108.98 அடியாக இருந்த மேட்டூர் அணையின் நீர்மட்டம் இன்று காலை 11 1.10 அடியாக உயர்ந்துள்ளது. கடந்த இரண்டு நாட்களில் மேட்டூர் அணை நீர்மட்டம் 2.28 அடி உயர்ந்துள்ளது. அணையின் நீர் இருப்பு 79.98 டி.எம்.சியாக உள்ளது. அணைக்கு வரும் நீரின் அளவு இதே நிலை நீடித்தால் ஒரு வார காலத்தில் மேட்டூர் அணை முழு கொள்ளளவை எட்டும் என்று பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேட்டூர் அணை நீர்மட்டம் கிடுகிடுவென உயர்ந்து வருவதால் காவிரி டெல்டா விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.





