கேரளம்,தமிழகம் உட்பட இந்தியாவில் தென்மேற்கு பருவமழை இந்த ஆண்டு முன் கூட்டியே மே 23 முதல் பொழியும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்த தென் மேற்கு மழைக்காலத்தில் தான் தென் மாநிலங்கள் மட்டுமின்றி வடமாநிலங்களிலும் அதிக மழை பெய்யும் என்பது குறிப்பிடத்தக்கது.
ஒவ்வொரு ஆண்டும் தென்மேற்கு பருவமழை ஜூன் முதல் வாரத்தில் தொடங்குவது வழக்கம். ஆனால் இந்த ஆண்டு அந்தமான் தீவுகளில் பருவமழை தொடங்குவதற்கான அறிகுறிகள் முன்கூட்டியே தெரிந்தன.
இதையடுத்து வருகிற 27ந் தேதி தென்மேற்கு பருவமழை தொடங்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருந்தது. தற்போது சீதோஷ்ண நிலையில் ஏற்பட்ட மாற்றம் காரணமாக 27ந் தேதிக்கு பதில் 23ந் தேதியே தென்மேற்கு பருவமழை தொடங்கி விடும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்து உள்ளது.
தென்மேற்கு பருவமழை தொடங்கிவிட்டால் தமிழகத்தின் தென்மாவட்டங்களிலும் அதிக மழை பெய்யும். மேற்கு தொடர்ச்சி மலையில் பெய்யும் மழையால் குற்றாலம் அருவிகளிலும் வெள்ளம் கொட்டும்.கேரளாவில் கடுமையான வெள்ளப்பெருக்கு ஏற்படும்.





