சிதம்பரம் நடராஜ பெருமானையும், தில்லை காளியையும் அவதூறாக பேசிய யுடியூப் மைனர் விஜயை கைது செய்ய வலியுறுத்தி சிவனடியார்கள் இன்று சிதம்பரத்தில் போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது
கடலூர் சிதம்பரம் நடராஜப் பெருமானையும், தில்லைகாளியையும் அவதூறாக பேசிய யுடியூப் மைனர் விஜயை கைது செய்ய வலியுறுத்தி அனைத்து சிவனடியார்கள் ஒன்றினைப்பு குழு சார்பில் சிதம்பரத்தில் இன்று மதியம் 3.30 மணி அளவில் கண்டன போராட்டம் சிவதாமோதரன் சுவாமிகள் தலைமையில் துவங்கியது.
இந்த போராட்டத்தில் நடராஜன் சுவாமிகள், வாதவூரடிகள் சுவாமிகள், விஸ்வ ஹிந்து பரிஷத் மாநில செயலாளர் ஞானகுரு, இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜூன்சம்பத், இந்து மக்கள் தமிழர் கட்சி ராம.ரவிக்குமார், விஸ்வ ஹிந்து பரிஷத் மாவட்டச் செயலாளர் ஜோதி குருவாயூரப்பன் உள்ளிட்ட ஆயிரக்கணக்கான சிவனடியார்கள் பங்கேற்று உள்ளனர் முன்னதாக போராட்டத்தில் பங்கேற்க வந்துள்ள சிவனடியார்கள் 15-க்கும் மேற்பட்ட சிதம்பரம் பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபங்களில் தங்கியிருந்தனர். சிதம்பரத்தில் எங்கு பார்த்தாலும் சிவனடியார்கள் கூட்டம் அலைமோதியது.
இன்று காலை முதலே நடராஜர் கோவில் வளாகத்தில் ஆயிரக்கணக்கான சிவனடியார்கள் குவிந்து தேவாரம், திருவாசகம் பாடி சிவதாண்டவம் ஆட்டம் ஆடி, போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அப்போது பாதுகாப்பு பணியில் விழுப்புரம் சரக டிஐஜி பாண்டியன், கடலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்ட் சக்தி கணேசன் தலைமையில் 400-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
