தமிழகத்தில் மொத்தமுள்ள 6 ராஜ்யசபா உறுப்பினர் பதவிக்கு வேட்புமனு தாக்கல் செய்த திமுக 3, அதிமுக, 2, காங்கிரஸ் 1 என 6 பேரின் வேட்பு மனுக்கள் ஏற்கப்பட்டது.
தமிழ்நாட்டில் ஆர்.எஸ்.பாரதி, டி.கே.எஸ்.இளங்கோவன், ராஜேஸ்குமார், எஸ்.ஆர்.பாலசுப்பிரமணியம், நவநீதகிருஷ்ணன், விஜயகுமார் ஆகிய 6 மாநிலங்களவை உறுப்பினர்களின் பதவிக்காலம் ஜூன் 29ல் முடிவடைகிறது. இதையடுத்து, 6 மாநிலங்களவை எம்பிக்களை தேர்ந்தெடுக்க ஜூன் 10ம் தேதி தேர்தல் நடைபெறும் என்றும், தேர்தலில் போட்டியிடுபவர்கள் கடந்த 24ம் தேதி முதல் மே 31ம் வரை வேட்புமனு தாக்கல் செய்யலாம் என்றும் இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்தது.
மாநிலங்களவை எம்பிக்களை அந்தந்த மாநில எம்எல்ஏக்களே வாக்களித்து தேர்ந்தெடுக்க வேண்டும். ஒரு எம்பியை தேர்ந்தெடுக்க 34 எம்எல்ஏக்கள் ஆதரவு தேவை. தமிழக சட்டமன்ற உறுப்பினர்கள் எண்ணிக்கையின் அடிப்படையில் திமுகவிற்கு 4 இடங்களும், அதிமுகவிற்கு 2 இடங்களும் கிடைக்க வாய்ப்பு இருந்தது. அதன்படி, திமுக 3 இடங்களில் போட்டியிடும் என்றும், ஒரு இடத்தை கூட்டணி கட்சியான காங்கிரசுக்கு ஒதுக்கியும் திமுக தலைவரும் முதல்வருமான மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.
அதன்படி, மாநிலங்களவை உறுப்பினர் தேர்தலில் போட்டியிடும் திமுக வேட்பாளர்கள் தஞ்சை சு.கல்யாணசுந்தரம், கே.ஆர்.என்.ராஜேஸ்குமார், கிரிராஜன் ஆகியோர் கடந்த 25ம் தேதி தேர்தல் நடத்தும் அதிகாரியும் சட்டப்பேரவை செயலாளருமான சீனிவாசனிடம் வேட்புமனு தாக்கல் செய்தனர். அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம், ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் ஒன்றிய அதிமுக செயலாளர் ஆர்.தர்மர் ஆகியோரும், காங்கிரஸ் சார்பில் ஒரு மாநிலங்களவை எம்பி பதவிக்கு ப.சிதம்பரமும் நேற்று முன்தினம் மனு தாக்கல் செய்தனர். இதுதவிர 7 சுயேட்சை வேட்பாளர்களும் மனு தாக்கல் செய்துள்ளனர்.
வேட்புமனு தாக்கல் நேற்று மாலை 3 மணியுடன் முடிவடைந்தது. இன்று ஜூன் 1ல் காலை 11 மணிக்கு வேட்புமனுக்கள் மீது பரிசீலனை நடைபெற்றது. அப்போது, ஒரு வேட்பாளருக்கு 10 எம்எல்ஏக்கள் முன்மொழியாவிட்டால் வேட்புமனு தள்ளுபடி செய்யப்பட்டு விடும். அதன்படி, 7 சுயேட்சை வேட்பாளர்கள் மனுக்கள் இன்று தள்ளுபடி செய்யப்பட்டன. இறுதியாக மொத்தமுள்ள 6 இடத்துக்கு திமுக 3, அதிமுக, 2, காங்கிரஸ் 1 என 6 பேரின் வேட்பு மனுக்கள் ஏற்கப்பட்டது. ஜூன் 3ம் தேதி மாலை 3 மணி வரை வேட்புமனுக்களை வாபஸ் பெறலாம் என்றும் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
கட்சிகள் சார்பில் போட்டியிடுபவர்கள் வேட்புமனுவை வாபஸ் பெற வாய்ப்பு இல்லை. இதையடுத்து, ஜூன் 3ம் தேதி மாலை 3 மணிக்கு இறுதியாக களத்தில் இருக்கும் வேட்பாளர்கள் வெற்றிபெற்றதாக இந்திய தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கும். அதன்படி, தமிழகத்தில் 6 பதவிக்கு, கட்சிகள் சார்பில் 6 பேர் மட்டுமே களத்தில் நிற்கும் நிலை ஏற்பட்டுள்ளதால் அந்த 6 பேரும் வெற்றிபெற்றதாக ஜூன் 3ம் தேதி மாலை 3 மணிக்கு அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டு, தேர்தல் நடத்தும் அதிகாரியால் சான்றிதழ் வழங்கப்படும்.
