சென்னை: தமிழக சட்டப் பேரவையின் கூட்டம் இன்று காலை ஆளுநர் உரையுடன் துவங்கியது. இதில் ஆளுநர் கே.ரோசய்யா உரையாற்றினார். அவரது உரையின் முழுவடிவம் : மாண்புமிகு சட்டப்பேரவை உறுப்பினர்களே, வணக்கம்.
- இந்த பதினான்காவது சட்டமன்றப் பேரவையில் தொடர்ந்து நான்காவது முறையாக தொடக்க உரையாற்றும் அரிய வாய்ப்பு பெற்றதை, நான் பெரும்பேறாகக் கருதுகிறேன். தமிழ்நாட்டின் வளர்ச்சியும், வளமும் 2015 ஆம் ஆண்டிலும் தொடர்ந்து பெருக வேண்டும் என விரும்புகிறேன். முழுமையான வளர்ச்சியை உருவாக்க பல முயற்சிகளை மேற்கொண்டுள்ள இந்த அரசின் மீது, தாம் வைத்துள்ள பெரும் நம்பிக்கையை மீண்டும் உறுதிப்படுத்தும் வகையில், கடந்த பாராளுமன்றத் தேர்தலிலும், ஸ்ரீரங்கம் சட்டமன்றத் தொகுதிக்கான இடைத் தேர்தலிலும் வரலாற்றுச் சிறப்பு மிக்க வெற்றியை தமிழ்நாட்டு மக்கள் வழங்கியுள்ளனர். மக்களின் எதிர்பார்ப்புகளை இந்த அரசு தொடர்ந்து நிறைவு செய்யும் என நான் நம்புகிறேன்.
- அனைவருக்கும் பயனளிக்கக்கூடிய வளர்ச்சியை ஏற்படுத்தி, அனைத்து மக்களின் நலனையும், குறிப்பாக ஏழை எளியோரின் நலனையும் காக்கக்கூடிய வகையில், இந்த அரசு மேற்கொண்டு வரும் பெரும் முயற்சிகளை நான் மிகவும் பாராட்டுகிறேன். இக்குறிக்கோளை எய்திடத் தேவையான வளர்ச்சி இலக்குகளை எட்டுவது மட்டுமன்றி, பரிவுணர்வோடு வடிவமைக்கப்பட்ட பல்வேறு நலத்திட்டங்களையும் இந்த அரசு செயல்படுத்தி வருகிறது.
- சிறப்பாக பராமரிக்கப்படும் சட்டம் ஒழுங்கு, ஒரு மாநிலத்தின் வளர்ச்சிக்கு அடித்தளமாக அமையும். கட்டுப்பாடும், ஊக்கமும் நிறைந்த காவல்துறை மூலமாக, இந்த அரசு எப்போதும் பாகுபாடற்ற முறையில் சட்டத்தை நிலைநிறுத்தி, மாநிலத்தில் பொது அமைதியையும், மத நல்லிணக்கத்தையும் பேணுவதை உறுதிசெய்துள்ளது. கடந்த நான்கு ஆண்டுகளாக, சரியான காலத்தில் எடுக்கப்பட்ட திறன்மிக்க நடவடிக்கைகள் மூலமாக, மாநிலத்தில் அமைதியை நிலைநாட்டி, மக்களுக்கு முழுப் பாதுகாப்பான உணர்வை காவல்துறை ஏற்படுத்தியுள்ளது. விழிப்புணர்வோடு எடுக்கப்பட்ட சரியான தடுப்பு நடவடிக்கைககள் மூலமாக, தமிழகத்தில் ஊடுருவ முயன்ற தீவிரவாத சக்திகளின் முயற்சிகள் முறியடிக்கப்பட்டுள்ளன.
- தமிழ்மொழியை வளர்க்க பல திட்டங்களை இந்த அரசு செயல்படுத்தி வருகிறது. தமிழ்மொழிப் பயன்பாட்டை ஊக்கப்படுத்தி வளர்த்திட, தமிழ்ப் பல்கலைக்கழகத்திற்கு 42.23 கோடி ரூபாய் நிதியுதவி வழங்கப்பட்டுள்ளது. இத்துடன், ஆந்திராவில் உள்ள திராவிடப் பல்கலைக்கழகம், கேரளாவில் உள்ள பன்னாட்டு திராவிட மொழியியல் பள்ளி ஆகியவற்றிற்கும் தாராளமான நிதியுதவி வழங்கப்பட்டுள்ளது. சென்னையில் உள்ள உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவனம், மதுரையில் உள்ள உலகத் தமிழ்ச் சங்கம் மற்றும் தஞ்சாவூரில் உள்ள தமிழ்ப் பல்கலைக்கழகம் ஆகியவற்றிற்கு 43.98 கோடி ரூபாய் செலவில் கட்டடங்கள் கட்டி, கட்டமைப்பை மேம்படுத்த இந்த அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. தமிழ்ச் சான்றோர்களையும், மொழி ஆர்வலர்களையும் பெருமைப்படுத்திட ஒவ்வொரு மாவட்டத்திற்கும் வழங்கப்படும் தமிழ்ச் செம்மல் விருது உள்ளிட்ட பத்து புதிய விருதுகளை கடந்த நான்கு ஆண்டுகளில் இந்த அரசு ஏற்படுத்தியுள்ளது.
- அண்மையில், இலங்கைத் தமிழ் அகதிகள் விருப்பத்தின் அடிப்படையில் நாடு திரும்புவது குறித்து, இருதரப்பு பேச்சு வார்த்தைகளைத் தொடங்க மத்திய அரசு நடவடிக்கைகளை எடுத்துள்ளது. இலங்கையில் அண்மையில் ஏற்பட்டுள்ள அரசியல் மாற்றங்கள், இன நல்லிணக்கம் குறித்த எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ள போதிலும், தற்போது அங்கு நிலவிவரும் பயம் மற்றும் மிரட்டல் நிறைந்த சூழல்; தமிழர் வாழும் பகுதிகளில் இலங்கை இராணுவத்தினர் தொடர்ந்து தங்கிவரும் நிலை; உள்நாட்டிலேயே இடம் பெயர்ந்து வாழும் தமிழர்கள் இன்னும் மறுகுடியமர்த்தப்படாதிருப்பது; புதிய இலங்கை அரசால் திட்டவட்டமான நம்பத்தகுந்த நடவடிக்கைகள் எதுவும் இதுவரை எடுக்கப்படாதது போன்ற நிகழ்வுகளைக் கருத்தில் கொள்ளும்போது, இலங்கைத் தமிழர்கள் தாயகம் திரும்புவது குறித்து விவாதிப்பதற்கான கூட்டத்தை நடத்துவதற்கு உகந்த தருணம் இன்னும் ஏற்படவில்லை என்பது தெளிவாகிறது. அதனால், இத்தகைய கூட்டம் தள்ளிவைக்கப்பட வேண்டும் என இந்த அரசு உறுதிபடத் தெரிவித்துள்ளது. இலங்கைத் தமிழ் அகதிகள் அமைதியான, நியாயமான முறையில் உரிய மரியாதையுடன் மறுகுடியமர்த்தப்பட வேண்டும் என்பதில் இந்த அரசு உறுதிகொண்டுள்ளது. அகதிகள் தாயகம் திரும்புவதற்கான உகந்த சூழலை உருவாக்கத் தேவையான, போதிய பொருளாதார மற்றும் அரசியல் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு, சிறுபான்மைத் தமிழர்களின் சுயாட்சி மற்றும் ஜனநாயக உரிமைகள் முழுமையாக மீட்கப்பட்டு உள்நாட்டிலேயே இடம் பெயர்ந்து வாழும் இலங்கைத் தமிழர்களுக்கு மறுவாழ்வு அளிக்கப்பட்ட பின்னரே, இங்கு வாழும் அகதிகள் தாயகம் திரும்புவது குறித்து சிந்திக்க வாய்ப்பு ஏற்படும் என்பதே இந்த அரசின் கருத்தாகும்.
- பாரம்பரிய மீன்பிடிப்புப் பகுதிகளில் தமது வாழ்வாதாரத்திற்காக அமைதியாக மீன்பிடித் தொழிலை மேற்கொள்ளும் தமிழக மீனவர்கள் தொடர்ந்து இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்படும் நிகழ்வுகள் உடனடியாக முடிவுக்கு வரவேண்டும். இலங்கையில் தூக்கு தண்டனையை எதிர்கொண்டிருந்த ஐந்து மீனவர்களை விடுவித்து, அவர்கள் பாதுகாப்பாக 5தாயகம் திரும்புவதை உறுதிசெய்திட அம்மீனவர்களின் வழக்குச் செலவுகள், அவர்கள் சிறையில் இருந்த காலத்தில் அவர்களது குடும்பத்திற்கான வாழ்வாதார உதவி வழங்கிந்துடன் அவர்கள் புதிய வாழ்வைத் தொடங்குவதற்கான நிதியுதவியையும் வழங்கி இந்த அரசு மேற்கொண்ட முயற்சிகளை நான் மனமார பாராட்டுகின்றேன். கச்சத் தீவு மீதான இந்தியாவின் உரிமையை மீண்டும் நிலைநாட்டி, பாரம்பரிய மீன்பிடிப்புப் பகுதிகளில் மீன் பிடிக்கும் உரிமையை நிலைநிறுத்துவதன் மூலமாக மட்டுமே, நமது மீனவர்கள் தொடர்ந்து சந்தித்துவரும் இப்பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வு ஏற்படும் என்ற தனது நிலைப்பாட்டினை இந்த அரசு மீண்டும் வலியுறுத்துகிறது.
- மாநிலங்களுக்கு இடையேயான பல்வேறு நதிநீர்ப் பிரச்சினைகளில் நமது மாநிலத்தின் சட்டப்பூர்வ உரிமைகளை பாதுகாப்பதில், தளரா முயற்சிகளையும் அயரா போராட்டங்களையும் மேற்கொண்ட செல்வி ஜெ ஜெயலலிதா அவர்களுக்கு எனது மனமார்ந்த பாராட்டுகளைத் தெரிவிக்கக் கடமைப்பட்டுள்ளேன். அவரது தொடர் முயற்சி மற்றும் மனோதிடத்தால் மட்டுமே, முல்லைப் பெரியாறு அணை, நீரியல் அடிப்படையிலும், கட்டுமான அடிப்படையிலும், நிலநடுக்க சாத்தியக்கூறு அடிப்படையிலும், பாதுகாப்பாக உள்ளது என உச்சநீதிமன்றத்தின் வரலாற்றுச் 6சிறப்பு மிக்கத் தீர்ப்பை நமது மாநிலம் பெற்று அணையின் நீர்மட்டத்தை 142 அடி அளவிற்கு உயர்த்த முடிந்தது. சட்டப்பூர்வமான அனுமதிக்கப்பட்ட அளவாகிய 142 அடி உயரத்திற்கு முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டம் தற்போது உயர்ந்து, தென்மாவட்ட மக்களுக்கு புதிய நம்பிக்கையை தந்துள்ளது குறித்து நான் மிக்க மகிழ்ச்சி கொள்கிறேன்.
- முல்லைப் பெரியாறில் கேரள அரசு புதிய அணை அமைப்பதற்கான சுற்றுச் சூழல் தாக்கம் குறித்த ஆய்வு மேற்கொள்வதற்கு தேசிய வன விலங்கு வாரியத்தின் நிலைக் குழு ஒப்புதல் அளித்துள்ளது குறித்து தனது கடும் எதிர்ப்பை இந்த அரசு மத்திய அரசுக்கு தெரிவித்துள்ளது. இதுபோன்றே, காவேரி நடுவர் மன்றத்தின் இறுதி ஆணையை மீறி பாம்பாறு உப வடிநிலப் பகுதியில் புதிய நீர்தேக்கத் திட்டங்களைச் செயல்படுத்த உத்தேசித்துள்ள கேரள அரசின் நடவடிக்கை குறித்த தமிழகத்தின் நியாயமான கவலைகளும் மத்திய அரசுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளன. இத்தகைய எந்த ஒரு புதிய திட்டமும் காவேரி மேலாண்மை வாரியத்தின் ஒப்புதலையும், பாசன உரிமை பெற்ற அனைத்து மாநிலங்களின் ஒப்புதலையும் பெற்ற பிறகே மேற்கொள்ளப்பட வேண்டும்.
- குடிநீர்த் தேவை என்ற போர்வையில் தமிழ்நாட்டின் ஒப்புதலின்றி மேகதாது என்ற இடத்திற்கு அருகில் காவேரி ஆற்றின் குறுக்கே புதிய அணைகளைக் கட்டுவதற்கு கர்நாடக அரசு திட்டமிட்டுள்ளது. இந்த புதிய திட்டத்தை கர்நாடக அரசு செயல்படுத்துவதைத் தடுக்கும் பொருட்டு உச்சநீதிமன்றத்தில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் ஓர் இடைக்கால (ஐவேநசடடிஉரவடிசல) மனுவை தமிழ்நாடு அரசு தாக்கல் செய்துள்ளது. மேலும், ஒரு நிரந்தரக் கண்காணிப்பு அமைப்பாக காவேரி மேலாண்மை வாரியம் அமைக்கப்படும்வரையில் காவேரி ஆற்றின் குறுக்கே இத்தகைய திட்டங்களைச் செயல்படுத்துவதற்கான அனுமதியை மத்திய வனம் மற்றும் சுற்றுச்சூழல் அமைச்சகம் வழங்கக்கூடாது என மத்திய அரசை இந்த அரசு வலியுறுத்தியுள்ளது.
- காவேரி நடுவர் மன்றத்தின் இறுதி ஆணையை செவ்வனே செயல்படுத்திட காவேரி மேலாண்மை வாரியத்தையும், காவேரி நீர் முறைப்படுத்தும் குழுவையும் அமைத்திட மத்திய அரசு உடனடியாக நடவடிக்கைகள் எடுக்கவேண்டும் என்றும் கோரப்பட்டுள்ளது. மாநிலங்களுக்கு இடையிலான நதிநீர்ப் பிரச்சினைகள் இந்தியாவின் இறையாண்மைக்கே ஊறு விளைவிப்பதாக உள்ளன. தேசிய நதிநீர் இணைப்புத் திட்டத்தின் ஒரு பகுதியாக, தீபகற்ப நதிகளை இணைக்கும் திட்டத்தை செயல்படுத்துவதே 8இப்பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வாக அமைந்து தேசிய ஒருமைப்பாட்டையும், வளர்ச்சியையும் ஊக்குவிக்கும் என இந்த அரசு உறுதியாக நம்புகிறது.
- பொருட்கள் மற்றும் சேவைகள் வரி முறையின் முக்கிய அம்சங்களான, சம வருவாய் அளவிற்கான வரி விகிதங்கள் (சுநஎநரேந சூநரவசயட சுயவநள), வருவாய் இழப்பீட்டினை ஈடுசெய்வதற்கான முறை மற்றும் வரி விதிப்பதற்கான குறைந்தபட்ச விற்று முதல் அளவு போன்றவை குறித்து ஒருமித்த கருத்து எட்டப்படாத நிலையிலேயே இந்த வரி குறித்த அரசியலமைப்புச் சட்டத் திருத்த முன்வடிவை மத்திய அரசு மக்களவையில் கொண்டுவந்துள்ளது. இந்த நடவடிக்கை மாநிலங்களின் நிதிநிலை சுயாட்சியை நீண்டகால அடிப்படையில் பாதிப்பதோடு மட்டுமின்றி, நமது கூட்டாட்சி அமைப்பு முறையையும் பெருமளவு பாதிக்கும். தமிழக அரசு இது குறித்த தனது கவலைகளை தெரிவித்ததோடு, பொருட்கள் மற்றும் சேவைகள் வரி குறித்த அரசியலமைப்புச் சட்டத் திருத்தத்திற்கு முன்னதாக ஒருமித்த கருத்தை மத்திய அரசு உருவாக்கிட வேண்டும் எனவும் இத்தகைய முக்கியமான சட்டத்தை அவசரமாக நிறைவேற்றிடக் கூடாது எனவும் வலியுறுத்தியுள்ளது.
- தகவல் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி, மக்களுக்கு சேவைகளை வேகமாகவும், வெளிப்படையாகவும் வழங்கி நிர்வாகத்தை மேம்படுத்திட இந்த அரசு பல முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. இவற்றுள் ஒரு முக்கிய திட்டமாக மாநிலமெங்கும் பொதுச் சேவை மையங்கள் அமைக்கப்பட்டு வருகின்றன. தகவல் தொழில்நுட்பவியல் துறை மூலமாக அமைக்கப்பட்டுள்ள 2500‐க்கும் மேற்பட்ட இத்தகைய மையங்கள் தற்போது செயல்பட்டு வருகின்றன. வருவாய்த் துறை மூலம் வழங்கப்படும் சான்றிதழ்கள், வரிகள் மற்றும் சேவைக் கட்டணங்கள் செலுத்துதல், பல்வேறு அரசுத் திட்டங்களின் கீழ் பயன்களைப் பெறுவதற்கான படிவங்களை அளித்தல் உள்ளிட்ட பல சேவைகளை இணையம் மூலமாக பொதுச் சேவை மையங்களில் மக்கள் எளிதாக பெற்று வருகின்றனர். இந்த ஆண்டு இறுதிக்குள் மாநிலத்தில் உள்ள அனைத்து மாவட்ட ஆட்சியர் அலுவலகங்கள், வட்டாட்சியர் அலுவலகங்கள், வட்டார வளர்ச்சி அலுவலகங்கள் மற்றும் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி மற்றும் ஊராட்சி அலுவலகங்களில் இந்த மையங்கள் செயல்படத் தொடங்கும். இந்த மையங்களின் மூலமாக நூற்றுக்கும் மேற்பட்ட சேவைகள் வழங்கப்படும். இந்த அரசு தொடர்ந்து எடுத்துவரும் முயற்சிகளின் காரணமாக மக்களுக்கு மின்னணு சேவைகளை வழங்குவதில் நமது நாட்டிலேயே முதல் மூன்று மாநிலங்களில் ஒன்றாகத் தமிழகம் தொடர்ந்து திகழ்ந்து வருகிறது என்பதை இந்த அவையில் தெரிவிப்பதில் 10பெருமகிழ்ச்சி அடைகிறேன். முதலிடத்தை நமது மாநிலம் விரைவில் அடையும் என நம்புகிறேன்.
- ஏழைகளுக்கும், மத்திய வருவாய்ப் பிரிவினருக்கும் கம்பிவடத் தொலைக்காட்சி சேவைகளை குறைந்த விலையில் அளிப்பதற்காக தொடங்கப்பட்டு முடங்கியிருந்த மாநில அரசு நிறுவனமாகிய தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனத்திற்கு புத்துயிரூட்டும் இந்த அரசின் முயற்சி பெரும் வெற்றியடைந்துள்ளது. தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனத்திற்கு டிஜிட்டல் உரிமம் பெறுவதற்கான தீவிர முயற்சிகளை தொடர்ந்து இந்த அரசு எடுத்து வருகிறது. தமிழக மக்களுக்கு குறைந்த விலையில் தரமான தொலைக்காட்சிச் சேவைகளை வழங்கிட இது வகைசெய்யும். மக்களுக்கு பொதுச் சேவைகளை வழங்கும் 200 பொதுச் சேவை மையங்களையும் தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனம் அமைத்துள்ளது. கிராம மற்றும் நகர்ப்புரப் பகுதிகளில் கூடுதல் பொதுச் சேவை மையங்களை அமைத்து, மேலும் பல பகுதிகளிலும் இச்சேவைகளை இயநிறுவனம் விரிவுபடுத்தும்.
- தற்போதைய காலச் சூழலுக்கு ஒவ்வாத மத்திய திட்டக்குழுவை கலைத்து, இந்தியாவை மாற்றி அமைப்பதற்கான தேசிய அமைப்பை ஏற்படுத்தும் மத்திய அரசின் முடிவை இந்த அரசு வரவேற்கிறது. 11தேசிய வளர்ச்சியிலும், முன்னேற்றத்திலும் மாநிலங்களுக்கு கூடுதல் பங்கு அளிக்கப்பட வேண்டும் எனவும், கூடுதலான நிதி நிலைச் சுயாட்சி வழங்கப்பட வேண்டும் எனவும் இந்த அரசு எப்போதும் வலியுறுத்தி வந்துள்ளது. இந்த புதிய அமைப்பின் ஆட்சி மன்றத்தில் இடம்பெற்றுள்ள மாநிலங்கள் மற்றும் மத்திய ஆட்சிப் பகுதிகளின் முதலமைச்சர்களின் சீரிய பங்களிப்போடு, கூட்டுறவுக் கூட்டாட்சி தத்துவ உணர்வை இந்த அமைப்பு தழைத்திடச் செய்யும் என நான் நம்புகிறேன். பல்வேறு மாநிலங்களின் தனிப்பட்ட தேவைகளுக்கு முக்கியத்துவம் அளித்து மத்திய, மாநில அரசுகளின் பொருளாதார மற்றும் வளர்ச்சிக் கொள்கைகளை மேலும் சிறப்பாக வகுத்திட இது உதவும் என நான் கருதுகிறேன்.
- நாற்பது புதிய வருவாய் வட்டங்களை அமைத்து, வருவாய் வட்டங்களின் எண்ணிக்கையை 260 ஆக இந்த அரசு உயர்த்தியுள்ளது. ஒருங்கிணைந்த நில ஆவண மேலாண்மையைச் செயல்படுத்த வருவாய் நிர்வாகம் தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது. நில ஆவணங்களை கணினிமயமாக்க இந்த அரசு மேற்கொண்ட முயற்சிகளின் பலனாக, சென்னை நகர மக்கள் கணினிமயமாக்கப்பட்ட பட்டாக்களை இணையம் மூலமாக பொதுச் சேவை மையங்களில் பெறலாம் என்பதை அறிந்து நீங்கள் மகிழ்ச்சி அடைவீர்கள் என நம்புகிறேன். தற்போது நடைபெற்றுவரும் நத்தம் மற்றும் நகர்ப்புர நில அளவைப் பணிகள் முடிவுற்ற பின்னர் இத்தகைய பலன்கள் மற்ற நகரங்களில் வசிக்கும் மக்களுக்கும் கிடைக்கும்.
- கிராமப்புற பொருளாதாரத்தின் உயிர் நாடியாக விளங்கக்கூடிய முதன்மைத் துறை (ஞசiஅயசல ளுநஉவடிச), தமிழக மக்கள் தொகையில் 40 சதவீதம் பேருக்கு வாழ்வாதாரம் அளிக்கிறது. ஏழு வேளாண் பருவநிலை மண்டலங்களைக் கொண்ட நமது மாநிலம், பாரம்பரிய வேளாண் பயிர்கள் தவிர, பணப் பயிர்கள், தோட்டப் பயிர்கள் போன்றவற்றையும் பயிர் செய்திட உகந்த மாநிலமாக விளங்குகிறது. பயிர் சார்ந்த உத்திகளையும், பண்ணை அளவிலான நடவடிக்கைகளையும் மேற்கொண்டு பயிர் உற்பத்தித் திறனை உயர்த்துவதில் இந்த அரசு குறிப்பிடத்தக்க முன்னேற்றம் கண்டுள்ளது. மக்காச்சோளம், நிலக்கடலை, எண்ணெய் வித்துக்கள், கரும்பு மற்றும் மரவள்ளிக் கிழங்கு பயிர்களில், நமது நாட்டிலேயே அதிக உற்பத்தித் திறனை நமது மாநிலம் எட்டியுள்ளது என்பது மன நிறைவளிக்கிறது. இந்த அரசு எடுத்த ஒருங்கிணைந்த முயற்சிகளின் பலனாக 2013‐2014 ஆம் ஆண்டில் நமது மாநிலத்தின் வரலாற்றில் 110.02 இலட்சம் மெட்ரிக் டன் அளவு உணவு தானிய உற்பத்தி என்ற மிக உயரளவை எட்டிந்து குறித்து நான் பெருமிதப்படுகிறேன். 2013‐2014 ஆம் ஆண்டில் 6.14 இலட்சம் மெட்ரிக் டன் என்ற சாதனை அளவிற்கு பயறுகள் உற்பத்தி செய்ததற்காக மத்திய அரசின் கிருஷி கர்மான் விருதை நமது மாநிலம் பெற்றுள்ளது.
- சிறு, குறு விவசாயிகளுக்கு நிலையான கூடுதல் வருவாய் கால்நடை வளர்ப்பதன் மூலம் கிடைக்கிறது. விலையில்லா கறவை பசுக்கள், செம்மறி ஆடுகள், வெள்ளாடுகள் வழங்கும் முன்னோடித் திட்டத்தின் கீழ் இதுவரை 47,735 கறவைப் பசுக்களும், 21.91 இலட்சம் வெள்ளாடுகளும், செம்மறி ஆடுகளும் கிராமப்புறப் பகுதிகளில் வாழும் ஏழை எளியோருக்கு வழங்கப்பட்டுள்ளன. முன்னெப்போதும் மேற்கொள்ளப்படாத அளவிற்கு கால்நடை பராமரிப்புத் துறையின் கட்டமைப்பை வலுப்படுத்திட எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகளையும் நான் பாராட்ட விரும்புகிறேன். தீவன உற்பத்தி மேம்பாடும், கோழி வளர்ப்புத் திட்டங்களும் கிராமப் பகுதிகளின் வளத்தை உயர்த்த இந்த அரசு மேற்கொண்டுள்ள பிற முயற்சிகளாகும். பால் கொள்முதல் விலையை லிட்டர் ஒன்றிற்கு ஐந்து ரூபாய் அளவிற்கு உயர்த்திந்து, இந்த அரசு எடுத்த பாராட்டத்தக்க நடவடிக்கைகளில் ஒன்றாகும். இதன் விளைவாக ஆவின் நிறுவனத்தின் பால் கொள்முதல் குறிப்பிடத்தக்க அளவிற்கு உயர்ந்துள்ளது.
- விலைவாசி உயர்வு ஏற்படும்போது ஏழை எளியோர் கடுமையாக பாதிக்கப்படுகின்றனர். விலைவாசி உயர்வின் பாதிப்பிலிருந்து இவர்களைப் பாதுகாப்பதற்கு இந்த அரசு உயர் முன்னுரிமை அளித்து 14வருகிறது. பொது விநியோகத் திட்டத்தின் மூலமாக விலையில்லா அரிசியையும், குறைந்த விலையில் பருப்பு, சமையல் எண்ணெய், சர்க்கரை, கோதுமை மற்றும் மண்ணெண்ணெய் ஆகியவற்றையும் தொடர்ந்து வழங்கப்படுவதை உறுதி செய்துள்ளதோடு, பண்ணைப் பசுமை காய்கறிக் கடைகள், அம்மா மருந்தகங்கள், அம்மா உணவகங்கள், அம்மா குடிநீர் மற்றும் அம்மா உப்பு ஆகிய புதுமையான விலைக் கட்டுப்பாட்டுத் திட்டங்களையும் செயல்படுத்தி இந்த அரசு கூடுதல் முயற்சிகளையும் மேற்கொண்டுள்ளது. வெளிச் சந்தையில் சிமெண்ட் விலை உயர்வினால் பாதிக்கப்பட்டுள்ள குறைந்த, நடுத்தர வருவாய்ப் பிரிவுகளைச் சார்ந்த குடும்பங்களுக்கு உதவும் வகையில், 5.1.2015 முதல், மூட்டை ஒன்றிற்கு 190 ரூபாய் என்ற சலுகை விலையில் சிமெண்ட் வழங்கும் அம்மா சிமெண்ட் திட்டத்தை தொடங்கியிருப்பது இந்த அரசின் மேலும் ஒரு சாதனையாகும்.
- நாட்டின் பல பகுதிகளில் புயல், வெள்ளம் போன்ற இயற்கைச் சீற்றங்கள் ஏற்பட்டு எண்ணற்ற மக்கள் வீடுகளை இழந்துள்ளனர். மனிதாபிமான அடிப்படையில் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை சீரமைப்பதற்காக இந்த அரசு உடனடியாக 5 கோடி ரூபாய் வழங்கியுள்ளது. மேலும், ஹுட்ஹுட் புயலால் 15பாதிக்கப்பட்ட விசாகப்பட்டிணத்தில் உடனடி மீட்புப் பணிகள், நிவாரண உதவி மற்றும் மறு சீரமைப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக, ஆந்திர அரசிற்கு 5 கோடி ரூபாயும், இதர நிவாரணப் பொருட்களையும் இந்த அரசு அளித்துள்ளது. இந்த மனிதாபிமானமிக்க உதவிகளை மேற்கொண்டதற்காக இந்த அரசை நான் பாராட்டுகிறேன்.
- கிராமப்புற பகுதிகளின் அடிப்படை வசதிகளை மேம்படுத்துவதற்காக தமிழ்நாடு குக்கிராமங்கள் மேம்பாட்டுத் திட்டத்தை இந்த அரசு தொடங்கிந்து. 2011 ஆம் ஆண்டு மே மாதத்திலிருந்து இதுவரை 2,930 கோடி ரூபாய் இதற்காக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. கிராமப்புற ஏழை எளியோருக்கு சுற்றுச் சூழலுக்கு உகந்த வீடுகளை கட்டித் தருவதற்காக மாண்புமிகு முதலமைச்சரின் சூரிய மின்சக்தியுடன் கூடிய பசுமை வீடு திட்டம் என்ற புதுமையான திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின் கீழ், கடந்த நான்கு ஆண்டுகளில் 4,680 கோடி ரூபாய் செலவில் 2.4 இலட்சம் வீடுகள் கட்டப்பட்டுள்ளன. மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்ட செயலாக்கத்தில் தேசிய அளவில் சிறப்பாகச் செயல்பட்டு, வேலை நாட்களை உருவாக்குதல், ஊதியச் செலவு, அதிக எண்ணிக்கையில் பெண் பயனாளிகள் பங்கேற்பு மற்றும் ஒரு குடும்பத்திற்கு வழங்கப்பட்ட சராசரி வேலை நாட்கள் போன்ற பல்வேறு முக்கிய குறியீடுகளில் தமிழகம் தொடர்ந்து முன்னிலை வகிக்கிறது.
- அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சியை எட்ட, அனைவருக்கும் வங்கிச் சேவையை அளிப்பது முக்கியமானதாகும். இக்குறிக்கோளை எட்டுவதில் சுய உதவிக்குழுக்கள் மிகப் பயனுள்ள கருவியாக விளங்குகின்றன. கடந்த நான்கு ஆண்டுகளில், மாநிலத்தில் உள்ள சுய உதவிக்குழுக்கள் 18,302 கோடி ரூபாய் அளவிற்கு வங்கிக் கடன் பெறுவதற்கு இந்த அரசு உறுதுணையாக இருந்துள்ளதை நான் மிகவும் பாராட்டுகிறேன். சுய உதவிக்குழு உறுப்பினர்கள் மற்றும் கிராம ஊராட்சி அளவிலான கூட்டமைப்பு உறுப்பினர்களிலிருந்து தேர்வு செய்யப்பட்டு 3,000 வங்கி முகவர்கள் நியமிக்கப்பட்டதன் மூலமாக, குழுக்களுக்கும், வங்கிகளுக்கும் இடையேயான தொடர்பை வலுப்படுத்தி எளிதாக கடன் பெற வழிவகுக்கப்பட்டுள்ளது. உலக வங்கியின் தலைவர் நமது மாநிலத்திற்கு வருகை தந்தபோது புதுவாழ்வுத் திட்டம் மிகச் சிறந்த முறையில் செயல்படுத்தப்பட்டுள்ளதாக பாராட்டுத் தெரிவித்துள்ளது மனநிறைவு அளிக்கிறது. இந்தியா மட்டுமின்றி உலகம் முழுவதும் செயல்படுத்தப்பட்டு வரும் இத்தகைய திட்டங்களுக்கு பல வழிகாட்டுதல்களை இத்திட்டம் வழங்கியுள்ளது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
- விரைவான நகர்மயமாதல், நகர்ப்புர கட்டமைப்பு மேலாண்மைக்கு பெரும் சவாலாக அமைந்துள்ளது. அதனால் மாநிலத்தில் 17உள்ள நகர்ப்புர பகுதிகளில் சமச்சீரான வளர்ச்சியை உறுதி செய்திட, ஆண்டுதோறும் 750 கோடி ரூபாய் ஒதுக்கீட்டில் செயல்படுத்தப்பட்டு வரும் ஒருங்கிணைந்த நகர்ப்புர வளர்ச்சித் திட்டம் உள்ளிட்ட பல திட்டங்களை இந்த அரசு தொடங்கி செயல்படுத்தி வருகிறது. மாநிலத்தின் மொத்த நகர்ப்புர மக்கள் தொகையில் 25 சதவீதம் பேர் சென்னை மாநகரம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் வசிக்கின்றனர். எனவே, சென்னை மாநகரத்தின் குறிப்பிட்டத் தேவைகளை நிறைவு செய்ய ஆண்டுதோறும் 500 கோடி ரூபாய் ஒதுக்கீட்டில் சென்னை பெருநகர் மேம்பாட்டுத் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. மழைநீர் வடிகால்கள், கழிவுநீர் கால்வாய்கள், திடக்கழிவு மேலாண்மை மற்றும் சாலைகள் போன்ற நகர்ப்புர கட்டமைப்பு வசதிகளை வலுப்படுத்துவதில் இத்திட்டங்கள் பெரும் பங்காற்றி வருகின்றன என்பதை மகிழ்ச்சியுடன் குறிப்பிட விரும்புகிறேன். நமது மாநிலத்தில் உள்ள 12 மாநகராட்சிகளை ‘ஸ்மார்ட் நகரங்கள்’ திட்டத்தின் கீழ் சேர்க்கக் கோரியுள்ள இந்த அரசின் கோரிக்கையை மத்திய அரசு விரைவில் ஏற்கும் என நான் நம்புகிறேன்.
- அனைத்து வீடுகளுக்கும் பாதுகாப்பான குடிநீர் வழங்குவது நமது நாட்டில் இன்றும் ஒரு பெரும் சவாலாகவே உள்ளது. தமிழ்நாடு போன்ற நீர்வளம் குறைந்த மாநிலத்தில் 18இது மேலும் கடினமான பணியாக உள்ளது. இருந்தபோதிலும், கிராமப் பகுதிகள் மற்றும் வேகமாக வளர்ந்துவரும் நகர்ப்புர பகுதிகளின் குடிநீர்த் தேவையை நிறைவு செய்வதற்காக, புதுமையான தொழில்நுட்ப தீர்வுகளுடன் கூடிய பல பெரும் முயற்சிகளை இந்த அரசு எடுத்து வருகிறது.
- அனைவருக்கும் குறைந்த விலையில் வீட்டுவசதியை அளிப்பது, இந்த அரசின் தொலைநோக்குத் திட்டம் 2023‐ல் வரையறுக்கப்பட்டுள்ள இலக்குகளில் ஒன்றாகும். ஜவஹர்லால் நேரு தேசிய நகர்புர மறுசீரமைப்புத் திட்டத்தின் முதல் கட்டத்தின் கீழ், தமிழ்நாடு குடிசை மாற்று வாரியத்தால் கட்டப்பட்டு வரும் 19,928 குடியிருப்புகளை கட்டி முடிப்பதற்காக 2014‐2015 ஆம் ஆண்டில் மாநில அரசு நிதியிலிருந்து கூடுதலாக 406.31 கோடி ரூபாய் நிதியை இந்த அரசு ஒதுக்கியுள்ளது. மத்திய அரசு உறுதி அளித்தவாறு அனைவருக்கும் வீட்டுவசதி அளிக்கும் திட்டம் இன்னும் தொடங்கப்படவில்லை என்ற போதிலும், குடிசைப் பகுதிகளை மேம்படுத்துவதற்கான முயற்சிகளை இந்த அரசு தொடர்ந்து மேற்கொள்ளும்.
- சென்னை மெட்ரோ இரயில் திட்டத்தைச் செயல்படுத்துவதில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது குறித்து நான் மகிழ்ச்சியடைகிறேன். கோயம்பேட்டிலிருந்து ஆலந்தூர் வரையில் 19உயர்மட்ட வழித்தடத்தின் ஒரு பகுதியில் விரைவில் சேவைகள் தொடங்கப்படும். வண்ணாரப்பேட்டையிலிருந்து திருவொற்றியூர் வரை இத்திட்டத்தை விரிவுபடுத்துவதற்கான ஒப்புதலை விரைவில் வழங்குமாறு மத்திய அரசை நான் வலியுறுத்துகிறேன். இத்திட்டத்தின் இரண்டாவது கட்ட வழித்தடங்களுக்கான விரிவான திட்ட அறிக்கைகளை தயாரிக்கும் பணியை மாநில அரசு ஏற்கனவே தொடங்கியுள்ளது. சென்னை மெட்ரோ இரயில் திட்டத்தை விரிவாக்கவும், சென்னை மாநகர மக்களுக்கு மேலும் பயன்தரச் செய்யவும், இந்த கூடுதல் வழித்தடத் திட்டங்களை செயல்படுத்திட மாநில அரசுக்கு மத்திய அரசு உதவும் என நான் நம்புகிறேன்.
- போதிய மின்சாரம் கிடைப்பதைச் சார்ந்தே மாநிலத்தின் சமூகப் பொருளாதார வளர்ச்சி அமையும். இந்த அரசின் தொடர் முயற்சிகளால் மேட்டூர், வடசென்னை மற்றும் வல்லூரில் உள்ள அனல் மின் உற்பத்தித் திட்டப் பணிகள் முடிக்கப்பட்டு மின் உற்பத்தி 2,500 மெகாவாட் அளவிற்கு உயர்ந்துள்ளது. மொத்தமாக, மாநிலத்தின் மின் உற்பத்தித் திறன் கடந்த நான்கு ஆண்டுகளில் 3,358 மெகாவாட் அளவு அதிகரித்துள்ளது. இது மாநிலத்திற்கு பெரும் நிவாரணம் அளித்துள்ளது. வல்லூரில் தமிழ்நாடு மின்சார வாரியம் மற்றும் தேசிய அனல் மின் உற்பத்திக் கழகம் ஆகியவற்றின் கூட்டு முயற்சியில் செயல்படுத்தப்பட்டுவரும் 500 20மெகாவாட் திறன் கொண்ட மூன்றாவது அலகு தற்போது சோதனை ஓட்ட நிலையை எட்டி விரைவில் வர்த்தகரீதியான மின் உற்பத்தியை தொடங்கும் நிலையில் உள்ளது. 660 மெகாவாட் திறன்கொண்ட எண்ணூர் விரிவாக்கத் திட்டம் மற்றும் ஒவ்வொன்றும் 660 மெகாவாட் திறனுடன்கூடிய இரண்டு அலகுகள் கொண்ட எண்ணூர் சிறப்பு பொருளாதார மண்டலத் திட்டம் ஆகியவற்றிற்கான பணிகள் தொடங்கியுள்ளன. மின் விநியோகத்தின் தரத்தை உயர்த்த இந்த அரசு எடுத்துள்ள பெரும் முயற்சிகளில் ஒன்றாக மாநிலத்தின் மின் கடத்தும் கட்டமைப்பை வலுப்படுத்த ஜப்பான் பன்னாட்டு கூட்டுறவு நிதி நிறுவனத்திடமிருந்து 3,572 கோடி ரூபாய் நிதியுதவி பெற்று செயல்படுத்தப்படும் திட்டம் அமைந்துள்ளது. அரசு எடுத்துள்ள இந்த அனைத்து நடவடிக்கைகளும் மாநிலத்தின் மின் விநியோக நிலையை மேம்படுத்தும்.
- புதிய சாலைகளை அமைக்கவும், தற்போதுள்ள சாலைக் கட்டமைப்பை தரம் உயர்த்தவும் முனைந்துள்ள இந்த அரசின் கொள்கையால் தொலைதூரப் பகுதிகளுக்கான சாலை இணைப்பு வசதிகள் மேம்பட்டுள்ளன. நமது நாட்டிலேயே மிக உயர் அளவாக, சதுர கிலோ மீட்டருக்கு 1.77 கிலோ மீட்டர் அளவிற்கு நமது மாநிலத்தின் சாலை அடர்த்தி உயர்ந்துள்ளது. ஒருங்கிணைந்த சாலைக் கட்டமைப்பு மேம்பாட்டுத் 21திட்டத்திற்கு 2011‐2012 ஆம் ஆண்டிலிருந்து இதுவரை மொத்தமாக 10,637 கோடி ரூபாய், ஒதுக்கீடு செய்யப்பட்டு சாலைக் கட்டமைப்பு வலுப்படுத்தப்பட்டுள்ளது. மண்ணிவாக்கத்திலிருந்து நெமிலிச்சேரி வரையிலான சென்னை வெளிவட்டச் சாலையின் முதல் கட்டப் பணிகள் நிறைவுற்று தொடங்கி வைக்கப்பட்டுள்ளதோடு, நெமிலிச்சேரியிலிருந்து தச்சூர் வரையிலான இரண்டாவது கட்டப் பணிகள் நடைபெற்று வருகின்றன என்பதை அறிந்து மகிழ்ச்சி அடைகிறேன்.
- மாநிலத்தில் குறிப்பிடத்தக்க முதலீடுகளை ஈர்க்கக்கூடிய வகையில் தொழில்களுக்கு உகந்த சூழலை ஏற்படுத்துவதற்காக பல புதுமையான முன் முயற்சிகளை இந்த அரசு மேற்கொண்டுள்ளது. 2014ஆம் ஆண்டில், புதிய தொழில் கொள்கை மற்றும் உயிரி தொழில்நுட்பம், வாகனங்கள் மற்றும் வாகன உதிரி பாகங்கள் போன்றவற்றுக்கான தனிப்பட்ட கொள்கைகள் வெளியிடப்பட்டுள்ளன. 2011 ஆம் ஆண்டு மே மாதம் முதல் 2014 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் வரை மொத்தம் 2,58,382 கோடி ரூபாய் அளவிற்கு கூடுதல் முதலீடுகளை ஈர்த்து, தமிழகம் நமது நாட்டில் இரண்டாவது இடத்தைப் பெற்றுள்ளது. இக்காலகட்டத்தில், 44,402 கோடி ரூபாய் அளவிற்கு வெளிநாட்டு முதலீடுகளை நமது மாநிலம் ஈர்த்துள்ளது. மத்திய அரசின் தொழில் கொள்கை மற்றும் மேம்பாட்டுத் துறையால் வெளியிடப்பட்டுள்ள 22வெளிநாட்டு நேரடி முதலீட்டுப் புள்ளி விவரங்களின்படி, வெளிநாட்டு முதலீடுகளை பெறுவதில் இந்திய மாநிலங்களில் தமிழகம் மூன்றாவது இடத்தை வகிக்கிறது. ஆசியாவில் முதலீடுகளுக்கு உகந்த மூன்று தலைசிறந்த இடங்களில் ஒன்றாகவும், நமது நாட்டில் மிகச் சிறந்ததாகவும் நமது மாநிலத்தை உருவாக்குவதற்கு, 2015 ஆம் ஆண்டு மே மாதம் 23 மற்றும் 24 ஆம் நாட்களில் சென்னையில் நடைபெற இருக்கும் உலகளாவிய முதலீட்டாளர்கள் மாநாடு உதவும் என நான் நம்புகிறேன்.
- நமது மாநிலத்தில் 9.68 இலட்சம் பதிவு செய்யப்பட்ட தொழில் அலகுகளைக் கொண்ட குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை, 63.18 இலட்சம் நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளித்து வருகிறது. இத்தொழில்களுக்கான தனி நிலத் தொகுப்புகளை ஏற்படுத்துதல், புதிய தொழில் முனைவோர் மற்றும் தொழில் நிறுவன மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் தொழில் முனைவோரை ஊக்குவித்தல், தனியார் தொழில் குழுமங்களுக்கு கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்த நிதியுதவி வழங்கி உதவுதல் மற்றும் இளைஞர்களுக்கு பயிற்சி அளித்திட நவீன திறன் மேம்பாட்டுத் திட்டங்கள் போன்ற பல முன் முயற்சிகளை இந்த அரசு எடுத்துள்ளது. குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் சிறப்பாக இயங்குவதன் 23அடிப்படையிலேயே உற்பத்தித் துறையின் வளர்ச்சி இருக்கும் என்பதை நன்கு உணர்ந்துள்ள இந்த அரசு, இத்தொழில் நிறுவனங்களுக்கு தொடர்ந்து உதவும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
- அனைவருக்கும் தரமான கல்வி கிடைப்பதை உறுதி செய்ய கடந்த நான்கு ஆண்டுகளில் 182 புதிய தொடக்கப் பள்ளிகளை தொடங்கியும், 1,317 நடுநிலை மற்றும் உயர்நிலைப் பள்ளிகளை தரம் உயர்த்தியும், இந்த அரசு அனைத்து முயற்சிகளையும் எடுத்துள்ளது. மேலும், இணையவழி வகுப்புகள் (உடிnநேஉவ உடயளளசடிடிஅள), கணினிவழி வகுப்புகள், பள்ளிகளில் தகவல் மற்றும் தொலைத்தொடர்பு தொழில்நுட்பம் போன்ற புதுமையான பல திட்டங்களை அறிமுகப்படுத்தி கல்வித் தரத்திற்கு இந்த அரசு உயர் முன்னுரிமை அளித்துள்ளது. தரமான கல்வி கற்பிக்கப்படுவதை உறுதிசெய்ய 76,338 கூடுதல் ஆசிரியர் பணியிடங்களுக்கு இந்த அரசு ஒப்புதல் அளித்தது மட்டுமல்லாமல், இதுவரை 72,597 ஆசிரியர்கள் பணியமர்த்தப்பட்டுள்ளனர். மடிக்கணினிகள், இடைநிலைக் கல்வியில் இடைநிற்றலைக் குறைப்பதற்கான சிறப்பு ஊக்கத் தொகை, விலையில்லா பாடப் புத்தகங்கள், நோட்டுப் புத்தகங்கள், நான்கு சீருடைத் தொகுப்புகள், காலணிகள், புத்தகப் பைகள், பேருந்து பயணச் சலுகை 24அட்டைகள், மிதி வண்டிகள் மற்றும் போக்குவரத்து வசதிகள் போன்றவற்றை 2011‐2012 ஆம் ஆண்டிலிருந்து 2014‐2015 ஆம் ஆண்டு வரை மொத்தம் 8,748.89 கோடி ரூபாய் செலவில் இந்த அரசு வழங்கியுள்ளது. தமிழக வரலாற்றிலேயே முதல் முறையாக பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் மாநில அளவில் முதல் மூன்று இடங்களை அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவர்கள் பெற்றுள்ளனர் என்பது பாராட்டத்தக்கது.
- கிராமப்புற மற்றும் பொருளாதாரத்தில் பின்தங்கிய பகுதிகளில் வாழும் மாணவர்கள் உயர் கல்வி பயில சம வாய்ப்பு பெறுவதை உறுதி செய்ய கடந்த நான்கு ஆண்டுகளில் 38 கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளையும், 11 பல்தொழில்நுட்பவியல் கல்லூரிகளையும், 4 பொறியியல் கல்லூரிகளையும் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இந்த அரசு தொடங்கியுள்ளது. இதேபோன்று, 2011‐2012 ஆம் ஆண்டிலிருந்து 2013‐2014 ஆம் ஆண்டுவரை 1,800 ஆசிரியர் பணியிடங்கள் உருவாக்கப்பட்டதுடன் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் 796 புதிய பாடப் பிரிவுகளும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. இதனால் 10,204 மாணவர்கள் இதுவரை பயன்பெற்றுள்ளனர். தகவல் தொழில்நுட்பத் துறையில் தமிழகத்தை 25மேலும் முன்னேற்றம் பெறச்செய்ய மத்திய அரசோடும், தொழில் துறையோடும் இணைந்து திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கத்தில் இந்திய தகவல் தொழில்நுட்பவியல் நிறுவனத்தை இந்த அரசு அமைத்துள்ளது. இத்தகைய பல்வேறு முன் முயற்சிகளின் காரணமாக உயர் கல்வி சேர்க்கை விகிதம் தேசிய அளவில் 21 சதவீதமாக உள்ள போதிலும் தமிழ்நாட்டில் 42 சதவீதமாக உயர்ந்துள்ளது.
- மகப்பேறு மற்றும் குழந்தைகள் நலப் பிரிவுகளில் வழங்கப்பட்டுவரும் தரமான சிகிச்சைகள் மூலமாக ஐக்கிய நாடுகள் அமைப்பால் வரையறுக்கப்பட்ட புத்தாயிரம் ஆண்டிற்கான வளர்ச்சி இலக்குகளை (ஆடைடநnnரைஅ னுநஎநடடியீஅநவே ழுடியடள) நமது மாநிலம் ஏற்கனவே எய்தியுள்ளது. மாண்புமிகு முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டம், டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி மகப்பேறு உதவித் திட்டம், மகளிர் சுகாதாரத் திட்டம் மற்றும் மருத்துவ கட்டமைப்பைச் சிறப்பாக மேம்படுத்துவது போன்ற இந்த அரசின் பல்வேறு நடவடிக்கைகளை, மத்திய அரசும் உலக சுகாதார அமைப்பு மற்றும் ஏனைய நிறுவனங்களும் பெரிதும் பாராட்டியுள்ளன. கடந்த நான்கு ஆண்டுகளில் 172 புதிய ஆரம்ப சுகாதார நிலையங்கள் தொடங்கப்பட்டுள்ளதோடு, 122 ஆரம்ப சுகாதார நிலையங்கள் 30 படுக்கை வசதிகள், சிறப்பு மருத்துவர்கள் மற்றும் நவீன கருவிகளோடு கூடிய மையங்களாக தரம் 26உயர்த்தப்பட்டுள்ளன. மேலும், 42 ஆரம்ப சுகாதார நிலையங்கள் மகப்பேறு மற்றும் குழந்தைகள் நல மையங்களாக தரம் உயர்த்தப்பட்டுள்ளன.
- விளையாட்டு மேம்பாட்டில் தமிழகம் முன்னணி வகிக்கிறது. இந்த அரசு வகுத்த உத்திகளும், மேற்கொண்ட முயற்சிகளும், தேசிய மற்றும் சர்வதேச அரங்குகளில் நமது விளையாட்டு வீரர்கள் சிறப்பான சாதனைகள் புரிவதற்கு வழிவகுத்துள்ளன. அண்மையில் நடந்து முடிந்த 20 ஆவது காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளில் தமிழகத்தைச் சேர்ந்த 7 விளையாட்டு வீரர்கள் 3 தங்கப் பதக்கங்களையும், 4 வெள்ளிப் பதக்கங்களையும் வென்றனர். 17 ஆவது ஆசிய விளையாட்டுப் போட்டிகளிலும் தமிழகத்தைச் சேர்ந்த 12 விளையாட்டு வீரர்கள் 5 தங்கப் பதக்கங்களையும், 5 வெள்ளிப் பதக்கங்களையும், 4 வெண்கலப் பதக்கங்களையும் வென்றனர். இந்த விளையாட்டு வீரர்களின் திறமைகளைப் பாராட்டி ஊக்குவிக்கும் வகையில் அவர்களுக்கு சிறப்பான ஊக்கத் தொகை பரிசுகள் வழங்கப்பட்டுள்ளன.
- பெண்கள் மற்றும் குழந்தைகள் நலனுக்கு இந்த அரசு உயர் முன்னுரிமை அளித்து வருகிறது. புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். சத்துணவுத் திட்டம், பெண் குழந்தைப் பாதுகாப்புத் திட்டம், பெண்கள் கல்வி பயில்வதை 27ஊக்குவிப்பதற்கான திட்டம் மற்றும் திருமண உதவித் திட்டம் போன்ற பல்வேறு நலத் திட்டங்களைச் செயல்படுத்துவதில் தமிழகம் முன்னோடியாக விளங்குகின்றது. இந்த அவையில் ஏற்கனவே அறிவித்தவாறு, சத்துணவுத் திட்டத்தில் வழங்கப்படும் உணவின் சத்துச் செறிவினை மேம்படுத்தும் வகையில், ஆண்டிற்கு 103.28 கோடி ரூபாய் கூடுதல் செலவில் பல்வகை உணவு வகைகள் (எயசநைவல அநயடள) வழங்குவதை இந்த அரசு மாநிலம் முழுவதும் விரிவுபடுத்தியுள்ளது. அங்கன்வாடி மையங்களை எழுச்சிமிகு முன்பருவ குழந்தை வளர்ச்சி மையங்களாக துடிப்புடன் செயல்படும் வகையில் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. முதியோர் மற்றும் ஆதரவற்றோர் கணிசமான எண்ணிக்கையில் பயன்பெறும் வகையில், சமூகப் பாதுகாப்பு ஓய்வூதியத் திட்டத்தின் பயனாளிகளின் எண்ணிக்கை இந்த அரசால் உயர்த்தப்பட்டுள்ளன. இந்த நடவடிக்கைகள் மூலமாக, வறியவர்களுக்கும், பாதிப்புக்கு உள்ளாகக் கூடியவர்களுக்கும் முழுமையான சமூகப் பாதுகாப்பை வழங்கிடும், மக்கள் நலம் பேணும் முன்மாதிரி மாநிலமாக தமிழகம் உருவெடுத்துள்ளது.
- பள்ளிக் கல்வி மற்றும் உயர் கல்வி உதவித் தொகைகள்; மாதாந்திர உணவுக் கட்டணத்தை உயர்த்தி வழங்கிந்து; பள்ளி மற்றும் கல்லூரி மாணவ, மாணவியர் விடுதிகளுக்கான கட்டடங்கள் கட்டிந்து போன்றவை, ஆதிதிராவிடர், பழங்குடியினர், பிற்படுத்தப்பட்டோர், மிகவும் 28பிற்படுத்தப்பட்டோர், சீர்மரபினர் மற்றும் சிறுபான்மையினர் போன்ற சமூகத்தில் பின்தங்கியுள்ள பிரிவு மாணவர்களின் நலன் காக்க இந்த அரசு செயல்படுத்திவரும் திட்டங்களில் குறிப்பிடத்தக்கவையாகும். உயர் கல்விக்கான உதவித் தொகையை தனியார் கல்வி நிறுவனங்களில் பயிலும் ஆதிதிராவிட மற்றும் பழங்குடியின மாணவ மாணவியர்களுக்கும் விரிவுபடுத்தி வழங்கிந்து இந்த அரசின் முக்கிய சாதனைகளுள் ஒன்றாகும். குறிப்பிடத்தக்க எண்ணிக்கையிலான ஆதிதிராவிட மற்றும் பழங்குடியின மாணவ மாணவியர்கள் உயர் கல்வி உதவித்தொகை பயன்களைப் பெற இந்த நடவடிக்கை வழிவகுத்துள்ளது.
- இந்த அரசின் கொள்கைகள் மற்றும் முன்னோடி முயற்சிகளை நான் விரிவாக எடுத்துரைத்துள்ளேன். இந்த அரசின் கீழ் நமது மாநிலம் மென்மேலும் முன்னேறிச் சென்று வெற்றியின் உச்சத்தை தொடும் என நான் முழுமையாக நம்புகிறேன். வரவிருக்கும் கூட்டத் தொடரில் மாநிலத்தின் முக்கியத்துவம் வாய்ந்த பிரச்சினைகள் குறித்து விவாதித்து, தொலைநோக்குத் திட்டம் 2023‐ல் திட்டமிடப்பட்டவாறு உயர் வளர்ச்சியை எட்டத் தேவையான மேலும் பல முன்முயற்சிகளை இந்த பேரவை எடுக்கும் என நான் நம்புகிறேன். மீண்டும் ஒருமுறை எனது கனிவான புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவித்து எனது உரையை நிறைவு செய்கிறேன். நன்றி வணக்கம் ஜெய்ஹிந்த்


