இலங்கை மக்களின் கடும் போராட்டம் காரணமாக தனது பிரதமர் பதவியை ரணில் ராஜினாமா செய்தார். தலைமறைவாக உள்ள அதிபர் கோத்தபய ராஜபக்சே, வரும் 13ம் தேதி பதவி விலக உள்ளதாக சபாநாயகர் நேற்றிரவு அறிவித்தார். இதற்கிடையே அமைச்சர்கள் இருவர் தங்களது பதவியை ராஜினாமா செய்தனர். ஜனாதிபதி மாளிகை போராட்டக்காரர்களின் கட்டுப்பாட்டுக்குள் உள்ளது. இலங்கையில் மக்கள் போராட்டம் விடிய விடிய தொடர்ந்து வருவதால் பதற்றம் அதிகரித்துள்ளது.
வரலாறு காணாத பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவித்துவரும் இலங்கையில், கடந்த மூன்று மாதமாக மக்கள் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். தொடர் போராட்டம் காரணமாக இலங்கை பிரதமர் பதவியை மகிந்த ராஜபக்சே ராஜினாமா செய்தார். அதன்பின் அதிபர் கோத்தபய ராஜபக்சேவால் நியமிக்கப்பட்ட ரணில் விக்ரமசிங்கே புதிய பிரதமராக கடந்த இரு மாதங்களுக்கு முன்பு பதவியேற்றார். ஆனால், அவரும் பொருளாதார நெருக்கடியில் சிக்கியிருக்கும் நாட்டை மீட்க போதிய நடவடிக்கைகளை எடுக்கவில்லை என குற்றம் சாட்டப்படுகிறது.
இதனால், சில மாதங்கள் இடைவெளிக்கு பிறகு நேற்று அரசுக்கு எதிராக மீண்டும் போராட்டத்தில் மக்கள் இறங்கினர். அதிபர் கோத்தபய ராஜபக்சே மற்றும் பிரதமர் ரணில் விக்ரமசிங்கே ஆகியோர் பதவி விலக வேண்டும் என்று வலியுறுத்தி போராட்டம் நடந்து வருகிறது. போராட்டக்காரர்களுடன் எதிர்க்கட்சியை சேர்ந்தவர்களும், மாணவர் அமைப்புகளும், பொதுமக்களும், விளையாட்டு வீரர்களும், பல்வேறு அமைப்பை சேர்ந்தவர்களும் கைகோர்த்தனர். அவர்களுடன் ராணுவத்தினரும், போலீசாரும் இணைந்ததாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
நேற்று மதியம் அதிபர் மாளிகைக்குள் நுழைந்த போராட்டக்காரர்களை பாதுகாப்பு படையினரால் கட்டுப்படுத்த முடியவில்லை. மேலும், பிரதமர் ரணில் விக்ரமசிங்கேவின் வீட்டையும் போராட்டக்காரர்கள் தீக்கிரையாக்கினர். போராட்டம் தீவிரமடைந்துள்ளதால் இலங்கை முழுவதுமே பதற்றமாக காணப்படுகிறது. இதனிடையே, பிரதமர் ரணில் விக்ரமசிங்கே அழைப்பின் பேரில், சபாநாயகர் தலைமையில் நாடாளுமன்ற அனைத்து கட்சியின் அவசர கூட்டம் நடைபெற்றது. அதில், அதிபர் கோத்தபய ராஜபக்சே, பிரதமர் ரணில் விக்கிரமசிங்கே உடனே பதவி விலக வேண்டும்; தற்காலிக அதிபராக சபாநாயகர் பொறுப்பேற்க வேண்டும்; அனைத்துக்கட்சி அடங்கிய இடைக்கால அரசு அமைய வேண்டும்; விரைவில் தேர்தலை எதிர்கொள்ள வேண்டும் ஆகிய அம்சங்கள் வலியுறுத்தப்பட்டது.
இதையடுத்து, பிரதமர் பதவியில் இருந்து விலகுவதாக ரணில் விக்ரமசிங்கே அறிவித்தார். சர்வகட்சி ஆட்சி பொறுப்பேற்க வழிவகை செய்யும் பொருட்டும், மக்களின் பாதுகாப்பு கருதியும் தனது பதவியை ராஜினாமா செய்வதாக அவர் அறிவித்துள்ளார். இந்நிலையில், அதிபர் கோத்தபய ராஜபக்சே வரும் 13ம் தேதி பதவி விலக முடிவு செய்துள்ளதாக இலங்கை பாராளுமன்ற சபாநாயகர் மகிந்த அபேவர்தா அறிவிப்பு ஒன்றை நேற்றிரவு வெளியிட்டார். அதில், ‘பொதுமக்கள் அமைதியை கடைபிடிக்க வேண்டும். இயல்பு வாழ்க்கைக்கு திரும்ப வேண்டும். சுமூகமான மாற்றத்திற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன’ என்று கூறியுள்ளார். முன்னதாக, போராட்டக்காரர்கள் அதிபர் மாளிகைக்குள் நுழைந்ததையடுத்து, அங்கிருந்து தப்பியோடிய கோத்தபய ராஜபக்சே ரகசிய இடத்தில் பதுங்கியுள்ளதாக கூறப்படுகிறது.