
பீகார் பட்டாசு வியாபாரி ஒருவரின் வீட்டில் இன்று பயங்கர வெடி விபத்து ஏற்பட்டதில் 6 பேர் உயிரிழந் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பீகார் மாநிலம் சரண் மாவட்டத்தில் உள்ள கைரா காவல் நிலையத்திற்குட்பட்ட பகுதியில் உள்ள குதாய் பாக் கிராமத்தில் பட்டாசு வியாபாரி ஒருவரின் வீட்டில் இன்று பயங்கர வெடி விபத்து ஏற்பட்டது. இதில் 6 பேர் உயிரிழந்தனர். மேலும், 8 பேர் இடிபாடுகளுக்குள் சிக்கினர். படுகாயமடைந்த 8 பேரும் மீட்கப்பட்டு மாவட்ட மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
சம்பந்தப்பட்ட தொழிலதிபர் ஷபீர் உசேன் என அடையாளம் காணப்பட்டார். இந்த வெடிவிபத்தில் வீட்டின் ஒரு பகுதி முழுவதும் வெடித்து சிதறியது. மீதமுள்ள பகுதி தீப்பற்றி எரிந்தது. ஆற்றங்கரையில் அமைந்துள்ள வீட்டின் பெரும் பகுதி இடிந்து விழுந்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து சரண் மாவட்ட போலீஸ் அதிகாரி சந்தோஷ் குமார் கூறியதாவது:- சாப்ராவில் வெடிப்பொருள் வெடித்து வீடு இடிந்து விழுந்ததில் 6 பேர் இறந்தனர். இடிபாடுகளுக்கு அடியில் சிக்கியவர்களை மீட்கப்பட்டனர். வெடிப்புக்கான காரணத்தை நாங்கள் ஆராய்ந்து வருகிறோம். தடயவியல் குழு மற்றும் வெடிகுண்டு செயலிழக்கப் படையும் வரவழைக்கப்பட்டுள்ளது.
வெடி சம்பவம் நடந்த வீட்டிற்குள் தயாரிக்கப்படும் பட்டாசுகள் சுமார் ஒரு மணி நேரம் தொடர்ந்து வெடிக்கும் சத்தம் கேட்டது தெரியவந்துள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.