
செஸ் ஒலிம்பியாட் போட்டி நடைபெறும் மாமல்லபுரத்தில் வெளிநாட்டு வீரர்கள் வருகை தந்துள்ளதால் போட்டி நடைபெறும் இடம் மற்றும் அதனை சுற்றியுள்ள இடங்களில் சுமார் 4 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
செஸ் ஒலிம்பியாட் போட்டி தொடக்க விழா சென்னை நேரு ஸ்டேடியத்தில் நாளை மாலை நடைபெறுகிறது. 29-ந்தேதி முதல் மாமல்லபுரத்தில் செஸ் போட்டிகள் தொடங்குகின்றன. இந்த போட்டிகளில் பங்கேற்பதற்காக 187 வெளிநாடுகளில் இருந்து 2500-க்கும் மேற்பட்ட செஸ் வீரர்கள் பங்கேற்கின்றனர். இதற்காக பிரமாண்டமான அரங்கம் உருவாக்கப்பட்டு தயார் நிலையில் உள்ளது. வெளிநாட்டு வீரர்கள் வருகை தந்துள்ளதால் அவர்கள் தங்கியுள்ள இடங்களில் உச்சகட்ட பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது. போட்டி நடைபெறும் இடம் மற்றும் அதனை சுற்றியுள்ள இடங்களில் சுமார் 4 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். 14 நாட்கள் தொடர்ச்சியாக செஸ் போட்டிகள் நடைபெறுவதையொட்டி சுழற்சி முறையில் பாதுகாப்பு பணிகளை மேற்கொள்ள போலீசார் அறிவுறுத்தப்பட்டுள்ளனர். மத்திய போலீஸ் படையுடன் உள்ளூர் போலீசாரும் இணைந்து பாதுகாப்பு ஏற்பாடுகளை மேற்கொண்டு உள்ளனர். மாமல்லபுரம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகள் அனைத்தும் பாதுகாப்பு வளையத்துக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. பாதுகாப்பு பணிக்காக திருவாரூர், தஞ்சை, சேலம், நாகர்கோவில், கோவை உள்ளிட்ட இடங்களில் இருந்து கூடுதல் போலீசாரும் வரவழைக்கப்பட்டு உள்ளனர்.
காவலர்கள் தங்குவதற்கு வசதியாக 20 திருமண மண்டபங்கள் ஏற்பாடு செய்து கொடுக்கப்பட்டு உள்ளது. அங்கு அவர்களுக்கு தேவையான உணவு உள்ளிட்ட வசதிகளை செய்து கொடுப்பதற்கும் ஆட்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர். செஸ் ஒலிம்பியாட் போட்டி நடைபெறும் இடம் அருகே 6 ஏக்கரில் வாகன நிறுத்துமிடமும் தயார் செய்யப்பட்டு உள்ளது. அங்கு தற்காலிக கழிவறைகளும், 10 நடமாடும் கழிவறை வாகனங்களும் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.
டெல்லியில் இருந்து வந்துள்ள மத்திய பாதுகாப்பு படையினர் மாமல்லபுரம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகள் அனைத்தையும் தங்களது முழு கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர். வெளிநாட்டு வீரர்கள் தங்கும் சொகுசு விடுதிகளை சுற்றி வரலாறு காணாத வகையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன. மாமல்லபுரம் பகுதியில் உள்ள அனைத்து தங்கும் விடுதிகளிலும் தினமும் சோதனை நடைபெற்று வருகிறது. சந்தேக நபர்கள் யாராவது தங்கி இருக்கிறார்களா? என்பதை உள்ளூர் போலீசார் கண்காணித்து வருகிறார்கள்.
அடுத்த 2 வாரங்களும் இதுபோன்ற பாதுகாப்பு ஏற்பாடுகள் தொடரும் என்று போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. செங்கல்பட்டு போலீஸ் சூப்பிரண்டு சுகுணாசிங் தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணிகளை மேற்கொண்டுள்ளனர்.

செஸ் ஒலிம்பியாட் போட்டியில் விளையாடும் இந்திய அணிகள் மிகவும் பலம் பெற்றதாக இருக்கிறது செஸ் ஒலிம்பியாட் மூலம் இதை சொல்லலாம் என உலக செஸ் சாம்பியனான மாக்னஸ் கார்ல்சென் மாமல்லபுரத்தில் தெரிவித்துள்ளார்.
மாமல்லபுரத்தில் நடைபெறும் செஸ் ஒலிம்பியாட்டில் பங்கேற்கிறார். அவர் தலைமையிலான நார்வே அணி 3-வது தரவரிசையில் இருக்கிறது. செஸ் ஒலிம்பியாட் போட்டியில் விளையாடும் இந்திய அணிகள் மிகவும் பலம் பெற்றதாக இருக்கிறது. வியக்கத்தக்க வீரர்கள் இருக்கின்றனர். இந்தியாவின் இரண்டு அணிகளும் பதக்கம் வெல்ல வாய்ப்பு இருப்பதாக நான் நினைக்கிறேன். உலக செஸ்சின் முக்கிய மையமாக தற்போது தமிழ்நாடு அல்லது சென்னை திகழ்கிறது. செஸ் ஒலிம்பியாட் மூலம் இதை சொல்லலாம். இதனால் தான் நானும் இங்கு இருக்கிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.