
மதுரை மாவட்ட பாஜக., தலைவர் பதவியில் இருந்தும், கட்சியிலிருந்தும் டாக்டர் சரவணன் நீக்கப் பட்டுள்ளதாக தமிழக பாஜக., தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.
ஆக.13 நேற்று மதுரையில் ராணுவ வீரருக்கு நடந்த இறுதி அஞ்சலியில் அமைச்சர் பழனிவேல் தியாகராஜன், அங்கே கூடியிருந்த பாஜக.,வினரை தகாத வார்த்தைகளால் திட்டியதால் ஆத்திரமடைந்த பாஜக.,வைச் சேர்ந்த ஒருவர், அவரது கார் மீது செருப்பை வீசியுள்ளார்.
இந்தச் சம்பவத்தை அடுத்து டாக்டர் சரவணன் அமைச்சரை அவரது வீட்டில் சந்தித்து மன்னிப்பு கோரினார். இது பாஜக.,வில் சலசலப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் சரவணன் பாஜக.,வில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.
இது குறித்து பாஜக., மாநிலத் தலைவர் அண்ணாமலை வெளியிட்ட அறிக்கையில், மதுரை மாவட்ட பாஜக., தலைவர் சரவணன் கட்சியின் கட்டுப்பாட்டை மீறியும், கட்சிக்கு களங்கம் விளைவிக்கும் செயல்களிலும் ஈடுபட்டு வருவதாலும் கட்சியின் அடிப்படை உறுப்பினரிலிருந்து நிரந்தரமாக நீக்கப்படுகிறார். ஆகவே கட்சியின் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் அவரிடம் கட்சி சார்பாக எவ்வித தொடர்பும் வைத்துக் கொள்ள வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறது என்று குறிப்பிட்டுள்ளார்.
முன்னதாக நேற்று இரவு செய்தியாளர்களிடம் பேசிய டாக்டர் சரவணன் தான் பாஜகவில் இருந்து விலகுவதாக தெரிவித்திருந்தார். இன்று காலை ராஜினாமா கடிதத்தை கட்சித் தலைவருக்கு அனுப்புகிறேன் என்று குறிப்பிட்டு இருந்தார்.