
அமைச்சர் பிடிஆர் கார் மீது காலணி வீசிய சம்பவத்தில் பாஜக மகளிர் அணியை சேர்ந்த 3 பெண்களை தனிப்படை போலீசாரால் இன்று அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளனர்.
காஷ்மீரில் வீரமரணமடைந்த லட்சுமணன் உடலுக்கு அஞ்சலி செலுத்திவிட்டு திரும்பிய அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் கார் மீது காலணி வீசப்பட்டது. மதுரை, காஷ்மீரில் வீரமரணமடைந்த மதுரை டி. புதுப்பட்டி லட்சுமணனின் பூத உடலுக்கு கடந்த 13-ம் தேதி அஞ்சலி செலுத்திவிட்டு வந்த தமிழ்நாடு நிதி அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜனின் கார் மீது பாஜகவினர் காலணியை வீசிய சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
இந்த சம்பவம் தொடர்பாக பாஜக மாவட்ட துணைத்தலைவர் உள்பட 7 பேர் ஏற்கனவே கைது செய்யப்பட்டனர். கைது செய்யப்பட்ட குமார், பாலா, கோபிநாத், ஜெயகிருஷ்ணன், கோபிநாத், முகமது யாகூப், ஜெயவேல் ஆகிய 7 பேரும் 15 நாட்கள் நீதிமன்ற காவலில் மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், அமைச்சர் பிடிஆர் கார் மீது காலணி வீசிய சம்பவத்தில் பாஜக மகளிர் அணியை சேர்ந்த 3 பெண்களை தனிப்படை போலீசார் இன்று அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட சரண்யா, தனலெட்சுமி, தெய்வானை ஆகிய 3 பேரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட உள்ளனர். இதன் மூலம் அமைச்சர் கார் மீது காலணி வீசிய சம்பவத்தில் இதுவரை கைது செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 10 ஆக அதிகரித்துள்ளது.