
காஞ்சிபுரம் பரந்தூர் விமான நிலையத்துக்கு எதிர்ப்பு: 12 கிராம மக்களை நேரில் சந்தித்து சீமான் கலந்துரையாடிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பரந்தூர் விமான நிலையத்துக்கு 30-க்கும் மேற்பட்ட நீர் நிலைகள், ஆயிரக்கணக்கான குடியிருப்புகள் கையகப்படுத்தப்பட உள்ளது. கிராம மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள்.
சென்னையின் 2-வது விமான நிலையம் பரந்தூரில் சுமார் 4500 ஏக்கர் பரப்பளவில் அமைய உள்ளது. இதற்காக ஏகனாபுரம், பரந்தூர், நெல்வாய் உள்ளிட்ட 12 கிராமங்களில் இருந்து 3 ஆயிரம் ஏக்கர் விளை நிலங்கள், 30-க்கும் மேற்பட்ட நீர் நிலைகள், ஆயிரக்கணக்கான குடியிருப்புகள் கையகப்படுத்தப்பட உள்ளது. இதற்கு அப்பகுதி கிராம மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள். விவசாய நிலங்கள் கையகப் படுத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தை தொடங்கி உள்ளனர். இந்த நிலையில் பரந்தூரில் விமான நிலையத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து வாழ்விடத்தையும், விவசாய நிலங்களையும் காப்பாற்ற போராடி வரும் 12 கிராம மக்களை சந்தித்து அவர்களது கோரிக்கைகளை கேட்டறியவும், அவர்களுக்கு ஆதரவு தெரிவிக்கவும் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் இன்று மதியம் ஏகனாபுரம் கிராமத்துக்கு சென்றார். முன்னதாக அங்குள்ள காலி இடத்தில் கிராம மக்கள் சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் ஒன்றாக குவிந்து இருந்தனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. அவர்கள் விமான நிலையத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து கையில் பதாகைகள் வைத்து இருந்தனர். கிராம மக்களுடன் சீமான் கலந்துரையாடினார். அப்போது விமான நிலையத்துக்கு நிலத்தை கையகப்படுத்துவதால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து அவர் கேட்டறிந்தார். கிராம மக்கள் கண்ணீருடன் நிலத்தை கையகப்படுத்த விடமாட்டோம் என்று தெரிவித்தனர். இதே போல் பரந்தூரை சுற்றி உள்ள மற்ற கிராமங்களுக்கும் சீமான் சென்று அவர்களின் கருத்துக்களையும் கேட்டறிந்து ஆதரவு தெரிவித்தார். இந்த நிகழ்ச்சியில், மாநில ஒருங்கிணைப்பாளர் அன்பு தென்னரசன், காஞ்சிபுரம் நாடாளுமன்ற பொறுப்பாளர் சால்டின், ஸ்ரீபெரும்புதூர் தொகுதி நாடாளுமன்ற செயலாளர் ஈ.ரா. மகேந்திரன், மத்திய சென்னை நாடாளுமன்ற பொறுப்பாளர் வக்கீல் ஸ்ரீதர், மாவட்ட செயலாளர்கள் புகழேந்தி, நாகநாதன், ஆனந்தன், சந்திர சேகர் மற்றும் இளைஞர் அணி நிர்வாகி காசிம் உள்பட முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.





