
புதுவையில் ஏலச்சீட்டு கட்டி சுயேச்சை எம்.எல்.ஏ உட்பட பலர் ஏமாந்துள்ளனர்.ஏழ்மை நிலையில் சீட்டு கட்டியவர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். திருபுவனை போலீசில் புகார் செய்துள்ளதாக புதுவை சட்டசபையில் எம்.எல்.ஏ. ஒருவர் பேசியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
புதுவை சட்டசபையில் பூஜ்யநேரத்தில் சுயேச்சை எம்.எல்.ஏ. அங்காளன் பேசியதாவது:- என் தொகுதியில் ரூ.10 லட்சம் வரை 7 பிரிவுகளில் ஏலச்சீட்டு நடத்தியவர் குடும்பத்தோடு தலைமறைவாகிவிட்டார். சுமார் ரூ.1.50 கோடி பணத்தை கொண்டுசென்றுவிட்டார். அவர் பெங்களூருவில் வசிப்பதாக தகவல்கள் கிடைத்துள்ளது.
அவர் தனது பெயரில் இல்லாமல் மகள்கள் பெயரில் சொத்துக்களையும் வாங்கியுள்ளார். இதனால் நூற்றுக்கணக்கானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். ஏமாந்தவர்களில் நானும் ஒருவன். பலரும் திருபுவனை போலீசில் புகார் செய்துள்ளனர். ஆனால் இதுவரை எந்த நடவடிக்கையும் இல்லை. நாள்தோறும் பாதிக்கப்பட்ட மக்கள், போலீசில் கூறி நடவடிக்கை எடுக்கும் படி தெரிவிக்கின்றனர். ஏழ்மை நிலையில் சீட்டு கட்டியவர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
எனவே பாதிக்கப்பட்ட மக்களுக்கு பணம் திரும்பக்கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.





