தெலுங்கானாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், காமரெட்டி மாவட்ட ஆட்சியரிடம் ரேஷன் அரிசிக்கு மத்திய அரசு வழங்கும் மானியம் எவ்வளவு என கேள்வி எழுப்பினார். அதற்கு பதில் தெரியாத கலெக்டரிடம் கண்டிப்பு காட்டிய அவர், மத்திய அரசு வழங்கும் மானியம், மாநில அரசு வழங்கும் மானியம் குறித்து விளக்கி கூறினார்.
மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், தெலுங்கானாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். பா.ஜ.,வின் லோக்சபா பிரவாஸ் யோஜனா திட்டத்தின் ஒரு பகுதியாக ஜகீராபாத் லோக்சபா தொகுதிக்கு உட்பட்ட காமரெட்டி மாவட்டம், பன்ஸ்வாடா நகரருகே உள்ள பிர்கூர் கிராம ரேஷன் கடை ஒன்றில் ஆய்வு மேற்கொண்டார். அப்போது உடன், மாவட்ட ஆட்சியர் ஜித்தேஷ் பாட்டீல் உடன் இருந்தார். அவரிடம், ரேஷன் கடையில் இருந்த பேனரில் பிரதமர் நரேந்திர மோடியின் படம் ஏன் இல்லை எனக்கேள்வி எழுப்பினார். மேலும் நிர்மலா சீதாராமனின் பல கேள்விகளுக்கு கலெக்டரிடம் பதில் ஏதும் இல்லை.
ரேஷன் அரிசியில் மத்திய அரசு வழங்கும் மானியம் எவ்வளவு எனவும் கேள்வி எழுப்பினார். அதற்கும் அவரிடம் சரியான பதில் சொல்லாமல் தடுமாறினார்.
இதனால், கோபமடைந்த நிர்மலா சீதாராமன், தெலுங்கானா கேடரில் பணியாற்றும் ஐ.ஏ.எஸ்., அதிகாரி நீங்கள். உங்களது பதிலை நீங்கள் சிந்தித்து பார்க்க வேண்டும். இன்னும் அரைமணி நேரத்தில் சரியான பதிலை தெரிந்து கொண்டு சொல்ல வேண்டும் என்றார்.
பின்னர் நிர்மலா சீதாராமன் கூறுகையில், ரேஷன் கடைகளில் வழங்கப்படும் அரிசி, கோதுமை போன்றவற்றிற்கான நிதியில் பெரும்பங்கை மத்திய அரசு வழங்குகிறது. அரிசியின் மொத்த விலையான ரூ.35ல் மத்திய அரசு ரூ.28 மானியமாகவும், மாநில அரசு ரூ.6 மானியமாகவும் வழங்குகிறது. மக்கள் 1ரூபாய்க்கு பெற்று கொள்கின்றனர்.
போக்குவரத்து செலவையும் மத்திய அரசு ஏற்றுக்கொள்கிறது. ஆனால், தெலுங்கானாவில் இந்த அரிசியை மாநில அரசே வழங்குவதாக கூறுகிறது. 2020 மார்ச் – ஏப்ரல் மாதம் முதல் கோவிட் காலத்தில் இருந்து மாநில அரசு மற்றும் பயனாளிகளின் பங்களிப்பு ஏதும் இல்லாமல், அரிசியை மத்திய அரசு இலவசமாக வழங்கி வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.
இந்த வீடியோவை பா.ஜ., தலைவர் ஒருவர் சமூக வலைதளத்தில் வெளியிட்டதை தொடர்ந்து, அது வைரலாக பரவி வருகிறது.