நீலகிரி எம்.பி.யின் பதவி பறிக்கப்பட வேண்டும் என்று இந்து முன்னணி மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் அறிக்கை ஒன்றில் கேட்டுக் கொன்டிருக்கிறார். இன்று அவர் வெளியிட்ட அறிக்கை:
நீலகிரி பாராளுமன்ற உறுப்பினர் ராசா அவர்கள் தொடர்ந்து இந்து மத நம்பிக்கைகளையும் இந்துக்களையும் கொச்சைப் படுத்தி வருகிறார்.
சில நாட்களுக்கு முன்பு சென்னையில் நடைபெற்ற திராவிட கழக தலைவர் வீரமணி அவர்களுக்கான துதிபாடும் விழாவில் பேசிய எம்.பி.ராசா அவர்கள் இந்து என்றால் விபச்சாரியின் மகன் என்று கூறியுள்ளார். ராசா அவர்கள் பாராளுமன்ற உறுப்பினராக பதவி ஏற்கும் போது எந்த மதத்தையும் இழிவுபடுத்த மாட்டேன் என்றும் யாருக்கும் பாரபட்சமாக நடக்க மாட்டேன் என்றும் காப்பு பிரமாணம் செய்துவிட்டு இந்து மதத்தை தொடர்ந்து இழிவுபடுத்தி வருகிறார்.
அம்பேத்கர் அவர்களால் வடிவமைக்கப்பட்ட இந்திய அரசியலமைப்புச் சட்டத்தை மதிக்க மாட்டேன் என்கிறார் ராசா. தான் பாராளுமன்ற உறுப்பினராக இருப்பதாலும் தன்னுடைய கட்சி தமிழகத்தில் ஆட்சியில் இருப்பதாலும் யாரும் கேள்வி கேட்க மாட்டார்கள் என இந்து மதத்தை இழிவுபடுத்தி பேசுகிறாரா?
தனது கட்சியின் அரசியல் லாபத்திற்காக இந்திய அரசியலமைப்புச் சட்டத்தை மீறி பொதுமக்களிடையே பிரிவினையையும் , வெறுப்புணர்வையும் தொடர்ந்து இதுபோன்று பேசி வரும் எம்பி ராசா அவர்கள் தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும்.
மேலும் தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்கள் தேர்தல் பரப்புரையின் போது தனது கட்சியில் 90 சதவீதம் இந்துக்கள் இருப்பதாக கூறினார்.ஆட்சி அமைத்த பிறகு திமுக அரசு எந்த மதத்தையும் சார்ந்து ஆட்சி புரியாது யாரையும் புண்படுத்தாது என்று கூறியதை ஏற்க மறுக்கிறாரா?
தமிழக முதல்வர் உடனடியாக எம்பி அவர்களுக்கு கடிவாளம் போட்டு வைக்க வேண்டும். இந்து முன்னணி பேரியக்கம் இந்திய அரசியலமைப்புச் சட்டத்தையும் காப்புப் பிரமாணத்தையும் காற்றில் பறக்க விட்டு தான்தோன்றித்தனமாக செயல்படும் நீலகிரி எம் பி யின் பதவியை பறிக்க வேண்டி மாண்புமிகு இந்திய குடியரசு தலைவரிடம் முறையிடும் என்பதனை தெரியப்படுத்திக் கொள்கிறேன்.