
திருப்பூரில் பா.ஜ.க. பிரமுகர் வீடு என நினைத்து மில் உரிமையாளர் வீட்டில் மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டுவீசிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பா.ஜனதா மற்றும் ஆர்.எஸ்.எஸ்., இந்து முன்னணி உள்ளிட்ட இந்து அமைப்புகளின் நிர்வாகிகள் வீடு , அலுவலகங்களை குறிவைத்து மர்மநபர்கள் பெட்ரோல் குண்டுகள் வீசி வருகின்றனர்.
இதனை தடுக்க தமிழகம் முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. திருப்பூரில் அசம்பாவித சம்பவங்களை தடுக்க வெளி மாவட்ட போலீசார் பாதுகாப்பு பணிக்காக குவிக்கப்பட்டுள்ளனர். இந்தநிலையில் திருப்பூரில் பா.ஜ.க. பிரமுகர் வீடு என நினைத்து பஞ்சு மில் உரிமையாளர் வீட்டில் மர்மநபர்கள் பெட்ரோல் குண்டு வீசிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பூர் அங்கேரிபாளையம் ரோடு ஏ.வி.பி. லே அவுட் பகுதியை சேர்ந்தவர் லட்சுமணன். இவர் காங்கயத்தில் பஞ்சு மில் வைத்துள்ளார். இவருக்கு சொந்தமான வீட்டில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு பா.ஜ.க. கோட்ட பொறுப்பாளர் புதுக்கோட்டை பாலு என்பவர் வாடகைக்கு குடியிருந்து வந்தார். பின்னர் அவர் வீட்டை காலி செய்து சென்று விட்டார். அதன்பிறகு அந்த வீட்டில் லட்சுமணன் வசித்து வந்தார். இந்தநிலையில் நேற்றிரவு அங்கு மோட்டார் சைக்கிளில் வந்த மர்மநபர்கள் அந்த வீட்டில் புதுக்கோட்டை பாலு குடியிருப்பதாக நினைத்து பாட்டிலில் அடைக்கப்பட்ட பெட்ரோல் குண்டை வீசி சென்று விட்டனர். பெட்ரோல் குண்டை பற்ற வைக்காமல் வீசியதால் பெரும் அசம்பாவிதம் நிகழவில்லை.
பாட்டில் உடைந்த சத்தம் கேட்டு வீட்டில் இருந்து லட்சுமணன் வெளியே வந்தார். அதற்குள் அந்த கும்பல் அங்கிருந்து தப்பி சென்று விட்டது. இது குறித்து லட்சுமணன் அனுப்பர்பாளையம் போலீசில் புகார் செய்தார். போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்டனர்.
மேலும் அப்பகுதியில் உள்ள சி.சி.டி.வி. கேமராக்களை ஆய்வு செய்து வருகின்றனர். இந்த பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவமானது லட்சுமணன் மீதான தொழில் போட்டியில் வீசப்பட்டதா அல்லது பா.ஜ.க. அமைப்பு பொறுப்பாளர் வீடு மாறியது தெரியாமல் அவரை குறி வைத்து செய்யப்பட்ட தாக்குதல் சம்பவமா என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் இந்த பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவம் நடந்த பகுதியில் பா.ஜ.க. சார்பில் ரத்ததான முகாம் இன்று நடத்த ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. இதனை தடுக்கும் வகையில் இந்த பெட்ரோல் குண்டு சம்பவம் நிகழ்ந்துள்ளதா என்பது குறித்தும் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் திருப்பூரில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.