
ஆம்னி பஸ்களில் ஆயுதபூஜை மற்றும் தீபாவளி பண்டிகை காலங்களில் விமான கட்டணத்திற்கு இணையாக ஆம்னி பஸ்களின் கட்டணம் தாறுமாறாக கட்டணம் வசூலிப்பதாக தொடர்ந்து புகார்கள் வந்ததால்
ஆம்னி பஸ்களில் பண்டிகை காலங்களில் தாறுமாறாக கட்டணம் வசூலிப்பதாக தொடர்ந்து புகார்கள் வந்தன. இதனால் பொதுமக்கள் பாதிக்கப்படுவதால் போக்கு வரத்து துறை அமைச்சர் சிவசங்கர் நேரடியாக தலையிட்டு ஆம்னி பஸ் உரிமைாளர்கள் சங்கத்திடம் பேச்சுவார்த்தை நடத்தினார்.
பண்டிகை காலங்களில் கட்டணத்தை திடீரென உயர்த்துவதை தவிர்க்க வேண்டும். நிலையான கட்டணத்தை பொதுமக்கள் பாதிக்காத வகையில் நிர்ணயிக்குமாறு வலியுறுத்தினார். அதன் அடிப்படையில் ஆம்னி பஸ் உரிமையாளர்கள் புதிய கட்டணத்தை நிர்ணயித்து அறிவித்துள்ளனர். 6 வகையாக வசதிகளை பிரித்து கட்டணம் வகைபடுத்தப்பட்டுள்ளது. ஏ.சி. இல்லாத இருக்கை, ஏ.சி. இல்லாத படுக்கை வசதி, ஏ.சி.யுடன் இருக்கை வசதி, ஏ.சி.யுடன் படுக்கை வசதி மற்றும் வால்வோ பஸ் இருக்கை, வால்வோ பஸ் படுக்கை என கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 10 முதல் 20 சதவீதம் வரை கட்டணம் குறைத்து இருப்பதாக தமிழ்நாடு ஆம்னி பஸ் உரிமையாளர்கள் சங்க தலைவர் அப்சல், பொருளாளர் மாறன் ஆகியோர் தெரிவித்தனர்.
இந்த கட்டணத்திற்கு மேல் வசூலிக்க கூடாது என அனைத்து ஆம்னி பஸ் ஆபரேட்டர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. புதிய கட்டணம் குறித்து பொதுமக்கள் சிலர் கூறுகையில், “சாதாரண மக்கள் ஆம்னி பஸ்களில் பயணம் செய்ய முடியாத நிலையில் கட்டணம் உள்ளது. சாதாரண இருக்கை கட்டணமே ரூ.1,800 முதல் ரூ.2,500 வரை உள்ளது. நீண்ட தூரம் செல்லக்கூடிய மக்கள் ஆம்னி பஸ்களை நாடமாட்டார்கள். விமான கட்டணத்திற்கு இணையாக ஆம்னி பஸ்களின் கட்டணம் உள்ளது” என்று அதிருப்தியுடன் தெரிவித்தனர்.