
மதுரையில் நிதியமைச்சர் தியாகராஜன் அளித்த விருந்தை பத்திரப்பதிவுத் துறை அமைச்சர் மூர்த்தி, நகர செயலாளர் தளபதி எம்.எல்.ஏ உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் புறக்கணித்ததால் மதுரை தி.மு.க.வில் கோஷ்டி பூசல் வெடித்து வெளிச்சமாகி தலைமைக்கு தர்மசங்கடத்தை ஏற்படுத்தியுள்ளது.
முதல்வர் ஸ்டாலின் இரண்டாவது முறையாக கட்சி தலைவராக தேர்வு செய்யப்பட்டதற்காக மதுரையில் தியாகராஜன் சார்பில் கட்சியினருக்கு பிரியாணி விருந்து அளிக்கப்பட்டது. இதை அமைச்சர் மூர்த்தி, நகர செயலாளர் தளபதி, 9 பகுதி செயலாளர்கள், 52 வட்ட செயலாளர்கள் உட்பட நிர்வாகிகள் புறக்கணித்தனர். அமைச்சர் சார்ந்த மத்திய தொகுதிக்கு உட்பட்ட நிர்வாகிகள், கவுன்சிலர்கள் பெரும்பாலும் பங்கேற்றனர்.
இதனால் அதிருப்தியான தியாகராஜன் பேசுகையில் அதை வெளிப்படுத்தி கொந்தளித்துள்ளார்.
அவர் பேசுகையில் “தி.மு.க., தலைவர் ஸ்டாலின் பேச்சை மீறி சிலர் செய்நன்றி மறந்து செயல்படுகின்றனர். ஸ்டாலினுக்காக நடத்தப்பட்ட இந்த விருந்திலும் அவர்கள் புறக்கணித்து, யாரும் வரக்கூடாது என நிர்வாகிகளுக்கும் மிரட்டல் விடுத்தது வேதனையளிக்கிறது. சிறிய மனிதராக நடந்துகொள்ள கூடாது. சுயமரியாதைக்காக எதையும் விட்டுக்கொடுக்க மாட்டேன். நான் பொருளாதாரத்தில் சுதந்திரத்துடன் உள்ளேன். ஆனால் சிலருக்கு பொருளாதாரத்தை விட பேராசைப்படுகின்றனர். நான் யாருக்கும் அடிமையாக இருக்க தேவையில்லை. நான் பெரிய மனிதன். எனக்காக போஸ்டர் ஒட்ட சொல்ல மாட்டேன். என் பெயரை போட சொல்ல மாட்டேன். என்ன நடக்குமோ அது விரைவில் நடக்கும்.
திறமையற்றவர்களை திறமையானவர்களாக தலைமைக்கு காட்ட முடியாது. சிலர் கட்சிப் பொறுப்பு தருவதாக கூறி என் ஆதரவாளர்களை அலைபேசியில் அழைத்துள்ளனர். அவர்கள் மறுத்துவிட்டனர். செய்நன்றி மறந்தவர்களுக்கு ஒருநாள் வீழ்ச்சி வரும்” என பேசினார்.அமைச்சர் பேச்சின் பின்னணி குறித்து நிர்வாகிகள் கூறியது: நகர செயலாளர் தேர்தலில் தளபதிக்கு எதிராக தியாகராஜன் செயல்பட்டார். அமைச்சர் மூர்த்தி உட்பட மூத்த அமைச்சர்கள் பலரின் ஆதரவில் தளபதி வெற்றி பெற்றார். இதில் தியாகராஜனுக்கு பின்னடைவு ஏற்பட்டது.
இந்நிலையில் அவர் அளித்த விருந்தில் கட்சியின் முக்கிய நிர்வாகிகள் புறக்கணித்து தங்கள் நிலைப்பாட்டை வெளிப்படையாக காண்பித்ததால் தியாகராஜன் விரக்தியாக பேசியுள்ளார்” என்றனர்.
தளபதி ஆதரவாளர்கள் கூறும்போது, “விருந்துக்கு அமைச்சர் மூர்த்தி, நகர செயலாளர் தளபதி உட்பட யாரையும் தியாகராஜன் அழைக்கவில்லை. கட்சி தலைமைக்கும் தெரிவித்து விட்டோம்” என்றனர்.
நகர செயலாளர் தேர்தல் நேரத்தில் புகைந்த கோஷ்டி பூசல் அமைச்சர் பிரியாணி விருந்தில் வெளிப்படையாக வெடித்துள்ளது.
விருந்து நடந்த மடீட்சியா அரங்கில் சாப்பிட சென்றவர்கள் பிரியாணிக்கு முந்தியடித்ததால் தள்ளுமுள்ளு ஏற்பட்டு அங்கிருந்த கண்ணாடி கதவு உடைந்தது. அதில் பெண் ஒருவர் காலில் காயம் ஏற்பட்டு ரத்தம் வழிந்தது. அவரை சிலர் மீட்டு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர்.




