
சட்டசபை கூட்டத்தை எடப்பாடி பழனிசாமி தரப்பு அதிமுக எம்.எல்.ஏ.க்கள் புறக்கணித்தனர்.தமிழக சட்டசபை கூட்டத்தொடர் 19ம் தேதி வரை நடைபெறும் .முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் மறைவுக்கு சட்டசபையில் இரங்கல் தெரிவிக்கப்பட்டது. சபாநாயகர் அப்பாவு தலைமையில் சட்டசபை அலுவல் ஆய்வுக்குழு கூட்டம் நடைபெற்றது.
தமிழக சட்டசபையின் மழைக்கால கூட்டத்தொடர் இன்று தொடங்கியது. கூட்டம் தொடங்கியதும் மறைந்த முன்னாள் சபாநாயகர் சேடப்பட்டி முத்தையா, இங்கிலாந்து ராணி எலிசபெத், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது. சபாநாயகர் அப்பாவு இரங்கல் குறிப்பை வாசித்தார். அதன்பின்னர் இன்றைய அவை நடவடிக்கைகள் ஒத்திவைக்கப்பட்டன.
நாளை காலை 10 மணிக்கு சட்டசபை கூடும் என சபாநாயகர் அறிவித்தார். இதையடுத்து சட்டசபை அலுவல் ஆய்வுக்குழு கூட்டம் நடைபெற்றது. சபாநாயகர் அப்பாவு தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் சட்டசபைக் கூட்டத்தொடரை எத்தனை நாட்கள் நடத்துவது? என்பது குறித்து ஆலோசிக்கப்பட்டது. இந்த ஆலோசனையின் முடிவில் வரும் 19ம் தேதி வரை சட்டசபை கூட்டத்தொடரை நடத்த முடிவு செய்யப்பட்டது.
நாளை மற்றும் நாளை மறுதினம் (அக்டோபர் 18,19) ஆகிய 2 நாட்களுக்கு கூட்டத்தொடர் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 2 நாட்கள் நடைபெற உள்ள இந்த மழைக்கால கூட்டத்தொடரில் நாளை ஜெயலலிதா மரணம் தொடர்பான ஆறுமுகசாமி ஆணைய அறிக்கை, தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு தொடர்பான அருணா ஜெகதீசன் அறிக்கை சமர்ப்பிக்கப்பட உள்ளது.
தமிழக சட்டசபை மழைக்கால கூட்டத்தொடர் இன்று கூடியது.இந்நிலையில், சட்டசபை கூட்டத்தை இன்று அதிமுக புறக்கணித்துள்ளது.
எதிர்க்கட்சி துணைத்தலைவர் இருக்கை தொடர்பாக எடப்பாடி பழனிசாமி தரப்பு விடுத்த கோரிக்கையை சபாநாயகர் நிராகரித்தார். இதனை தொடர்ந்து இன்றைய கூட்டத்தை எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக எம்.எல்.ஏ.க்கள் புறக்கணித்தனர்.ஓபிஎஸ் தரப்பினர் கூட்டத்தில் பங்கேற்றனர்.




