சென்னை: இ.எஸ்.ஐ. மருத்துவக் கல்லூரிகளை தமிழக அரசே ஏற்று நடத்த வேண்டும் என்று பா.ம.க. நிறுவுனர் ராமதாஸ் அறிக்கை ஒன்றில் கேட்டுக் கொண்டுள்ளார். இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில்…. தொழிலாளர் அரசு ஈட்டுறுதிக் கழகத்தின் சார்பில் தமிழகத்தில் நடத்தப்பட்டு வரும் மருத்துவக் கல்லூரிகளில் இனி மாணவர்கள் சேர்க்கப்பட மாட்டார்கள் என்றும், இப்போதுள்ள மாணவர்கள் படிப்பை முடித்த பின் இந்த மருத்துவக் கல்லூரிகள் மூடப்படும் என்றும் மத்திய தொழிலாளர் நலத்துறை அறிவித்துள்ளது. இம்முடிவை எதிர்த்து இக்கல்லூரிகளில் பயிலும் மாணவர்கள் போராடி வருகின்றனர். அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் பணியாற்றும் தொழிலாளர்களுக்கு மருத்துவ சேவையும், காப்பீடும் வழங்குவதற்காக தொடங்கப்பட்ட தொழிலாளர் அரசு ஈட்டுறுதிக் கழகத்தின் (இ.எஸ்.ஐ) சார்பில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன் நாடு முழுவதும் 21 மருத்துவக் கல்லூரிகளுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டு, அவற்றில் 11 மருத்துவக் கல்லூரிகள் செயல்பட்டு வருகின்றன. இவற்றில் ஒரு கல்லூரி சென்னையில் செயல்படுகிறது. கோவையில் மருத்துவக் கல்லூரி அமைக்கப்பட்டு விட்ட நிலையில் இன்னும் திறக்கப்படவில்லை. ஒருசில ஆண்டுகள் மட்டுமே நடத்தப்பட்ட நிலையில், நிதி நெருக்கடி காரணமாக மருத்துவக் கல்லூரிகளை மூட தொழிலாளர் அரசு ஈட்டுறுதிக் கழகம் முடிவு செய்திருக்கிறது. இதனால், அதில் பயிலும் மாணவ,மாணவிகளுக்கு மோசமான பாதிப்புகள் ஏற்படும். சென்னையில் உள்ள மருத்துவக் கல்லூரியில் இளநிலை மருத்துவப்படிப்பில் 200 மாணவ, மாணவியரும், மருத்துவ மேற்படிப்பில் 38 பேரும் படித்து வருகின்றனர். இவர்கள் படிப்பை முடிக்கும் வரை மருத்துவக் கல்லூரி தொடர்ந்து செயல்படும் என அறிவிக்கப்பட்டிருப்பதால் இவர்கள் பட்டம் பெறும் வாய்ப்பு பாதிக்கப்படாது. ஆனால், இம்மருத்துவக்கல்லூரி மூடப்பட்டால் இவர்களின் பட்டத்திற்கு உள்ள மரியாதை குறைந்து விடும். மேலும், இவர்களால் பட்ட மேற்படிப்பு படிக்க முடியாத நிலை ஏற்பட்டு விடும். இதற்கெல்லாம் மேலாக இந்த மருத்துவக் கல்லூரி தொழிலாளர் அரசு ஈட்டுறுதிக் கழகத்தால் நடத்தப்படும் போதிலும், தமிழக அரசின் விதிகளுக்கு உட்பட்டு இதில் உள்ள மாணவர் சேர்க்கை இடங்களில் 65% தமிழக அரசு ஒதுக்கீட்டிற்கு வழங்கப்படுகிறது. கோவை மருத்துவக்கல்லூரி திறக்கப்பட்டால் மேலும் 65 இடங்கள் தமிழக அரசு ஒதுக்கீட்டிற்கு கிடைக்கும். இத்தகைய சூழலில் இந்த கல்லூரிகள் மூடப்பட்டால் 130 மாணவர் சேர்க்கை இடங்களை தமிழ்நாடு இழக்க நேரிடும். மருத்துவக் கல்லூரிகளைத் தொடர்ந்து நடத்த நிதி இல்லை என்று தொழிலாளர் அரசு ஈட்டுறுதிக் கழகம் கைவிரித்து விட்ட நிலையில், இக்கல்லூரிகளை தமிழக அரசு ஏற்று நடத்துவதே சரியானதாக இருக்கும். இதுபற்றி தமிழக அரசுக்கு மத்திய அரசு கடந்த ஆண்டே கடிதம் எழுதி ஜனவரி 31&ஆம் தேதிக்குள் முடிவை தெரிவிக்கும்படி கோரியிருந்தது. ஆனால், தமிழக அரசு இதுவரை எந்த முடிவும் எடுக்கவில்லை. தமிழ்நாட்டில் நடப்பாண்டில் சுமார் 9 லட்சம் மாணவர்கள் 12 ஆம் வகுப்பு தேர்ச்சி பெறுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இவர்களில் குறைந்தது 6 லட்சம் பேர் மருத்துவப் படிப்பில் சேருவதற்கான பாடப்பிரிவை படிப்பவர்கள் ஆவர். ஆனால், தமிழகத்தில் அரசு கல்லூரிகள் உள்ள இடங்கள் மற்றும் அரசு ஒதுக்கீட்டுக்கு தனியார் கல்லூரிகள் ஒப்படைக்கும் இடங்களின் எண்ணிக்கை 2,900 மட்டுமே. அதாவது ஒரு மருத்துவ இடத்திற்கு 206 மாணவர்கள் போட்டியிட வேண்டியிருக்கும். இன்னும் தெளிவாக கூற வேண்டுமானால் மருத்துவக் கல்லூரியில் சேரத் தகுதியுடைய மாணவர்களில் 0.48 விழுக்காட்டினருக்கு மட்டும் தான் மருத்துவக் கல்லூரிகளில் இடம் கிடைக்கும். இத்தகைய சூழலில் 130 மருத்துவ இடங்களை இழப்பது தமிழகத்திற்கு மிகப்பெரிய பின்னடைவை ஏற்படுத்தும். தமிழ்நாட்டில் அ.தி.மு.க. ஆட்சிக்கு வந்த பின்னர் சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி, திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி ஆகிய இரு கல்லூரிகள் மட்டுமே திறக்கப்பட்டுள்ளன. இவைகூட பா.ம.க. போன்ற கட்சிகளின் வலியுறுத்தலால் முந்தைய தி.மு.க. ஆட்சியில் அறிவிக்கப்பட்டு பணிகள் தொடங்கப்பட்டவை. அவ்வாறு இருக்கும்போது தொழிலாளர் அரசு ஈட்டுறுதிக் கழகம் தானாக முன்வந்து ஒப்படைக்கும் இரு மருத்துவக் கல்லூரிகளை அரசு ஏற்க மறுப்பது தமிழ்நாட்டு மக்களுக்கு செய்யும் துரோகமாக அமையும். எனவே, இல்லாத காரணங்களைக் கூறி தட்டிக்கழிப்பதை விடுத்து இந்த இரு மருத்துவக் கல்லூரிகளையும் ஏற்று நடத்த தமிழக அரசு முன்வர வேண்டும்.
- என்று கோரிக்கை விடுத்துள்ளார்.