மோடி பெயரில் அதிகாரப் பகிர்வு அரசியல்: ஓபிஎஸ்-ஈபிஎஸ்; பொய் சொல்வது யார்?

சற்றுமுன் தமிழகம்

சென்னை:
தனி ஆளாகச் சென்று தர்ம யுத்தம் நடத்தி வந்த தன்னை மோடிதான் அழைத்து, அதிமுக.,வில் மீண்டும் இணையுங்கள் என்றும், அமைச்சரவையில் சேருங்கள் என்றும் சொன்னதாக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தேனியில் தடாலடியாக அறிவித்தார்.

அவரது இந்தப் பேச்சு மோடி பெயரைப் பயன்படுத்தி தமிழகத்தில் அரசியல் களத்தில் தங்கள் இருப்பைக் காட்டிக் கொண்டிருக்கும் மோடி வெறுப்பாளர்களுக்கு அல்வா சாப்பிடக் கொடுத்தது போல் அமைந்தது. தர்மயுத்தம் நடத்தியவரின் இந்தப் பேச்சு மோடிக்கு மட்டுமல்ல, முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கும் தர்மசங்கடத்தைக் கொடுத்துள்ளது.

இதனிடையே, இந்த விவகாரத்தில் ஓபிஎஸ் பொய் சொல்வதாக முதல்வர் எடப்பாடி பளிச்செனக் கூறியுள்ளார். அதிமுக இணைப்பில் பிரதமர் நரேந்திர மோடி தலையீடு இல்லை என்றும் ஓபிஎஸ் கூறியதில் உண்மையில்லை என்று கூறினார் எடப்பாடி பழனிசாமி.

தேனி கூட்டத்தில் ஓபிஎஸ் பேசுகையில், பிரதமர் மோடி கட்டாயப்படுத்தியதன் பேரில்தான் அதிமுகவின் இரு அணிகளும் இணைந்தது. மேலும் நான் அமைச்சரவையில் இணைய மாட்டேன் என்று கூறியபோதும், தன்னை கட்டாயப்படுத்தி, நீங்கள் கட்டாயம் இணைய வேண்டும் என்று கூறியதால்தான் நான் துணை முதல்வராக உள்ளேன். பெரும்பாலும் எல்லா பதவிகளையும் நான் வகித்து விட்டேன். ஜெயலலிதா எனக்கு எல்லாவற்றையும் கொடுத்துவிட்டார் என்று பேசினார்.

அவரது இந்தப் பேச்சு பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், சேலத்தில் நலத்திட்ட விழாவில் கலந்து கொண்ட முதல்வரிடம் இது குறித்து கருத்து கேட்கப் பட்டது. அதற்கு, ஓபிஎஸ் பேசியது குறித்து தனக்கு எதுவும் தெரியாது என்று கூறினார். ஆனால் அதன் பின்னர் என்ன நினைத்தாரோ, இன்று கோவையில் நடந்த விழாவில் கலந்து கொண்டவர், ஓபிஎஸ் விவகாரம் குறித்து வெளிப்படையாக வாய் திறந்து பேசினார்.

ALSO READ:  கர்கடக மாத பூஜைக்காக ஜூலை 16ல் சபரிமலை நடை திறப்பு!

இது குறித்து முதல்வர் எடப்பாடி கூறுகையில், எனக்கும் ஓபிஎஸ்ஸுக்கும் இடையில் எந்தக் கருத்து வேறுபாடும் இல்லை. நாங்கள் இருவரும் சேர்ந்துதான் கட்சியை வளர்க்கிறோம். ஆனால் ஒரு சிறிய வார்த்தை கூறினாலும் அது பெரிதாக்கப்படுகிறது. அதுபோல்தான் ஓபிஎஸ் கூறிய கருத்தும்! அதிமுக உள்கட்சி விவகாரத்தில் பிரதமர் மோடி தலையீடு இல்லை. எனவே அவ்வாறு இருந்ததாக ஓபிஎஸ் கூறியதில் உண்மையில்லை என்றார்.

எடப்பாடி பழனிச்சாமி இப்படி ஒரு கருத்தைக் கூறியிருக்க, இன்று மீண்டும் தனது நிலைக்கு பலம் சேர்க்கும் விதமாக, கட்டாயத்தின் பேரிலேயே முதல்வராக பதவியேற்றேன். கட்டாயத்தின் பேரிலேயே பதவியும் விலகினேன்… என்று பட்டும் படாமலும் சொன்னார். மதுரையில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார் ஓபிஎஸ்.

அப்போது அவர், ஜெயலலிதா மீது உள்ள நல்லெண்ணத்தின் அடிப்படையிலேயே அணிகள் இணைப்பு குறித்து பிரதமர் யோசனை கூறினார்.

பிரதமர் கூறியது நல்ல யோசனை என்பதால் ஏற்றுக் கொண்டேன். அதிமுக அணியில் இணைய வேண்டும் என பிரதமர் மோடி வலியுறுத்தியதால்தான் அமைச்சரவையில் இணைந்தேன்.

ALSO READ:  சதுரகிரி ஆடி அமாவாசை முன்னேற்பாட்டுப் பணிகள்; அதிகாரிகள் ஆய்வு!

ஆட்சியை கவிழ்க்க 18 எம்.எல்.ஏக்களுடன் இணைந்து தினகரன் முயற்சிக்கிறாரா என பிரதமர் மோடி என்னிடம் கேட்டார் என்றும் புதிய குண்டைத் தூக்கிப் போட்டிருக்கிறார் துணை முதல்வர் ஓ.பி.எஸ்.

திமுக அனைத்துக்கட்சி கூட்டம் குறித்த கேள்விக்கு பதிலளித்த பன்னீர்செல்வம், எதிர்க்கட்சி தலைவர் தான் என்பதை ஸ்டாலின் நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும்.

அனைத்துக் கட்சி கூட்டம் கூட்டும் உரிமை ஆளுங்கட்சிக்கு தான் உள்ளது, காவிரி விவகாரத்தை ஸ்டாலின் அரசியலாக்குகிறார் என்று கூறினார் ஓபிஎஸ்.

எப்படியோ, தான் முதலில் ஒன்று சொல்லி, தன் மனம் ஒப்பாமல் கட்டாயத்தின் பேரில் தான் மீண்டும் அதிமுக.,வில் சேர்ந்ததாக மீண்டும் கூறினாலும், தான் கூறிய கருத்தின் அடிநாதம் கிளப்பிய புயலை உணர்ந்து கொண்டு பேசியிருக்கிறார் ஓபிஎஸ் என்றே கருத வேண்டியுள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.