கௌரவக் கொலைகளைத் தடுக்க வேறு சட்டம் தேவையில்லை: ஓ.பன்னீர்செல்வம்

Published:

panneerselvam சென்னை: தமிழகத்தில் கெளரவக் கொலைகள் நடைபெறவில்லை. அப்படி நடந்தால், அதைத் தடுக்க வேறு புதிய சட்டங்கள் தேவையில்லை, தற்போதுள்ள சட்டங்களே போதுமானவை என்று தமிழக சட்டப்பேரவையில் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கூறி உள்ளார். தமிழக சட்டப் பேரவையில் ஆளுநர் உரை மீதான விவாதத்தில் புதிய தமிழகம் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி பேசும்போது, ”சமூக நீதி கருத்துக்கு முக்கியத்துவம் கொடுத்து வரும் திராவிட கட்சிகளின் ஆட்சிகளில் தமிழகத்தில் 2 சதவீதம் மட்டுமே ஜாதி மறுப்பு திருமணங்கள் நடைபெறுகின்றன. ஹரியாணாவில் 25 சதவீதமும், கேரளத்தில் 19 சதவீதமும் சாதி மறுப்பு திருமணங்கள் நடைபெறுகின்றன. ஆனால், அந்த 2 சதவீதத் திருமணங்களுக்கும் எதிர்ப்பு தெரிவித்து, தமிழகத்தில் கெளரவக் கொலைகள் நடைபெறுகின்றன. 1991 ஆம் ஆண்டு அ.தி.மு.க. ஆட்சியில் பெண் சிசுக் கொலை தடுப்புச் சட்டம் கொண்டு வந்ததுபோல, கெளரவக் கொலைக்கு எதிராக வலுவான சட்டம் இயற்ற வேண்டும்” என்றார். இதற்கு பதிலளிக்கும் வகையில், குறுக்கிட்டுப் பேசிய முதல்வர் பன்னீர்செல்வம், ”சாதி, சமயப் பூசல்கள் ஏதுமின்றி அமைதியும், நல்லுறவும் தமிழகத்தில் பேணப்பட்டு வருகிறது. ஜாதி மோதல்கள் ஏற்பட வாய்ப்பு இருந்த திருவிழாக்கள், முக்கிய நினைவு நாள்கள், குறிப்பிட்ட சமுதாயத்தினரிடையே கோயில் வழிபாட்டில் உரிமை கோரும் பிரச்னை, ஒரு சமூகத்தைச் சேர்ந்த வாலிபர் ஒருவர், மற்றொரு சமூகத்தைச் சேர்ந்த பெண்ணைக் காதலித்து திருமணம் செய்ததன் காரணமாக ஏற்பட்ட சம்பவங்களிலும் காவல் துறையினர் தக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு ஜாதி மோதல்கள் ஏற்படாமல் தவிர்த்தனர். மாநிலத்தில் உள்ள அனைத்து ஜாதி அமைப்புகள், அதன் தலைவர்கள், ஜாதி பிரச்னைகளைத் தூண்டுவோரின் நடவடிக்கைகள் தொடர்ந்து கண்காணிக்கப்படுகின்றன. ஆயுதங்கள், வெடிமருந்துகள் சேகரித்தல் தொடர்பாக நுண்ணறிவுத் தகவல்கள் சேகரித்தும் உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்படுகின்றன. மேலும், ஜாதி ரீதியான பூசல்கள் ஏற்படும்போதும், இருவேறு சமூகத்தினருக்கும் இடையே காதல் தொடர்பாக ஏற்படும் பிரச்னைகளின்போதும், காவல் துறையினர் தற்போதுள்ள சட்டங்களின்படி வழக்குப் பதிவு செய்து, தக்க நடவடிக்கை எடுத்து வருகின்றனர். ஆதிதிராவிட மக்கள் பாதிக்கப்பட்டால், குடியுரிமைப் பாதுகாப்புச் சட்டம் 1955ன்படியும், தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினர் வன்கொடுமைத் தடுப்புச் சட்டம் 1989ன்படியும் கடும் நடவடிக்கை எடுக்கப்படுகிறது. அவர்களுக்கு சட்டப்படியான நஷ்ட ஈடும் அளிக்கப்பட்டு வருகிறது. அதனால், மாநிலத்தில் கெளரவக் கொலைகள் எதுவும் நடைபெறவில்லை. அவ்வாறு ஏதேனும் சம்பவங்கள் நிகழ்ந்தால், காவல் துறையினர் சட்டப்படி அதற்கு காரணமானவர்கள் மீது தற்போது நடைமுறையில் உள்ள இந்திய தண்டனைச் சட்டப் பிரிவுகளின்படி கடும் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். அதனால், சாதி மோதல்கள், கெளரவக் கொலைகளைத் தடுக்க தற்போதுள்ள சட்டங்களே போதுமானவையாகும். புதிதாகச் சட்டம் இயற்றுவதற்கான தேவை எழவில்லை” என்றார்.

ALSO READ:  ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் ஆடிப்பூர உத்ஸவ நான்காம் நாளில்..!

Related articles

Recent articles

spot_img