
கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை கோவிலில் பெண்கள் வழிபடும் முறையில் மாற்றம் கொண்டு வர தேவை இல்லை என மார்க்சிஸ்டு மூத்த நிர்வாகி ஜி.சுதாகரன் கூறியுள்ளார்.
மார்க்சிஸ்டு மூத்த நிர்வாகிகள் பலரும் சபரிமலை கோவிலில் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்கலாம் என கருத்து தெரிவித்தனர். சபரிமலை ஐயப்பன் கோவிலில் வழிபட செல்லும் பெண்களின் குறைந்தபட்ச வயது 50-ல் இருந்து இன்னும் குறைக்கப்படவில்லை.
கேரளாவில் உள்ள பிரசித்தி பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவிலில் ஐப்பசி மாத பூஜைக்காக நாளை மறுநாள் (16-ந் தேதி) நடை திறக்கப்படுகிறது. இதையடுத்து சபரிமலையில் ஆண்டுதோறும் நடைபெறும் மண்டல பூஜைக்கான விழா தொடங்குகிறது. இந்த விழாவில் நாடு முழுவதிலும் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பார்கள். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு சபரிமலை ஐயப்பன் கோவிலில் அனைத்து வயது பெண்களும் தரிசனம் செய்யலாம் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.
இந்த உத்தரவை செயல்படுத்த மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு அரசு நடவடிக்கை எடுத்தது. இதனை கண்டித்து ஐயப்ப பக்தர்கள் போராட்டம் நடத்தினர். அப்போது மார்க்சிஸ்டு மூத்த நிர்வாகிகள் பலரும் சபரிமலை கோவிலில் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்கலாம் என கருத்து தெரிவித்தனர். அப்போது மந்திரியாக இருந்த ஜி.சுதாகரனும் இந்த கருத்தை ஆதரித்து கருத்து கூறியிருந்தார்.
இந்த நிலையில் இப்போது மீண்டும் மண்டல பூஜை தொடங்க இருக்கும் நிலையில் மார்க்சிஸ்டு மூத்த தலைவரும், முன்னாள் மந்திரியுமான ஜி.சுதாகரன், நிருபர்களிடம் கூறியதாவது:- சபரிமலை ஐயப்பன் கோவிலில் வழிபட செல்லும் பெண்களின் குறைந்தபட்ச வயது 50-ல் இருந்து இன்னும் குறைக்கப்படவில்லை. சபரிமலை ஐயப்பன் நித்திய பிரமச்சாரி என கருதப்படுவதால் 50 வயதுக்கு குறைவான பெண்கள் இக்கோவிலில் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவதில்லை. இந்த நடைமுறையை அனைவரும் மதித்து ஏற்றுக்கொண்டுள்ளனர். இதில் மாற்றம் கொண்டு வர தேவை இல்லை. இவ்வாறு அவர் கூறினார். மந்திரியாக இருந்தபோது இக்கருத்துக்கு எதிராக பேசிய ஜி.சுதாகரன் இப்போது அந்த கருத்தை மாற்றி பேசியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.