

சென்னை முகலிவாக்கம் பகுதியில் மழை வெள்ள பாதிப்புகளை ஆய்வு செய்த எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி சென்னையில் மழைநீர் தேங்கவில்லை என பொய் சொல்கின்றனர் என தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளது. தலைநகர் சென்னை தொடங்கி குமரி வரை பரவலாக மழை கொட்டி வருகிறது. வெளுத்து வாங்கிய மழை சென்னையை பொறுத்தவரை பெருநகர் மற்றும் புறநகர் பகுதியில் தினமும் காலை தொடங்கி இரவு வரை மழை வெளுத்து வாங்கி வருகிறது.

புறநகர் மாவட்டங்களான திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சீபுரம் மாவட்டங்களிலும் விடியவிடிய மழை பெய்து வருகிறது. இதனால் குடியிருப்பு பகுதிகளில் மழைநீர் தேங்கி மக்களின் இயல்புவாழ்க்கை பாதிக்கப்பட்டு உள்ளது. சென்னை மாநகர் பொறுத்தவரை முன்கூட்டியே தடுப்பு நடவடிக்கைகளை பெருநகர சென்னை மாநகராட்சி மேற்கொண்டாலும் சில இடங்களில் இன்னமும் தண்ணீர் தேங்கி நிற்பதை பார்க்க முடிகிறது.
இவற்றை மோட்டார்கள் மூலம் வெளியேற்றும் பணி முடுக்கி விடப்பட்டுள்ளது. இந்த பணிகளை மாநகராட்சி அதிகாரிகளும், ஊழியர்களும் ஈடுபட்டுள்ளனர். இந்த நிலையில் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி மழையால் பாதிக்கப்பட்ட ஆலந்தூர் தொகுதிக்குட்பட்ட முகலிவாக்கம் பகுதியில் மழை வெள்ள பாதிப்புகளை ஆய்வு செய்தார்.பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகளை வழங்கினார்.

இதையடுத்து சென்னை மதனந்தபுரத்தில் எதிர்க்கட்சி தலைவர் செய்தியாளர்களை சந்தித்து அவர் பேசியதாவது:- சென்னையில் மழைநீர் தேங்கவில்லை என பொய் சொல்கின்றனர். சென்னையில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மருத்துவ வசதி உள்ளிட்டவற்றை ஏற்பாடு செய்து தரவில்லை.
பல பகுதிகளில் மழைநீர் வடியாததால் தமிழக அரசு தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டும். சென்னையில் முறையாக மழைநீர் வடிகால் பணிகள் மேற்கொள்ளப்படவில்லை. அவசர கோலத்தில் திட்டமிடாமல் தமிழக அரசு பணிகளை மேற்கொண்டதால்தான் மழைநீர் தேங்குகிறது. சென்னையில் மிதமான மழையே பெய்துள்ளது. பெரிய அளவில் மழை பெய்தால் பாதிப்பு அதிகமாக இருக்கும். இவ்வாறு அவர் கூறினார்.