கன்னியாகுமரியில் 4 நாட்கள் தங்கிய ஷாரிக்குடன் தொடர்பில் இருந்த நபர்கள்-பெண்கள் யார்?: உளவுத்துறை விசாரணை மங்களூரூ போலீசார் நடத்திய விசாரணையில், தமிழகம் மற்றும் கேரளாவுக்கு ஷாரிக் கடந்த செப்டம்பர் மாதம் வந்து சென்றிருப்பது தெரிய வந்தது. தமிழகம், கேரளா உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும் குற்ற சம்பவங்களை நடத்த ஷாரிக் சதி திட்டம் தீட்டி இருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர்.
கர்நாடகா மாநிலம் மங்களூரூ நாகுரி பகுதியில் கடந்த 18-ந் தேதி ஆட்டோவில் குண்டு வெடித்த சம்பவம் நாடு முழுவதும் பரபரப்பை ஏற்டுத்தியது. ஆட்டோவில் வெடித்தது குக்கர் வெடிகுண்டு என போலீசார் விசாரணையில் தகவல் கிடைத்தது. குண்டு வெடித்ததில் ஆட்டோவில் வந்த ஒருவரும், டிரைவரும் பலத்த காயத்துடன் மீட்கப்பட்டு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். ஆட்டோவில் காயத்துடன் மீட்கப்பட்டவன் தான் குக்கர் குண்டு கொண்டு வந்தவன் என போலீஸ் விசாரணையில் தெரிய வந்தது. அவனைப் பற்றி விசாரித்ததில் பயங்கரவாத அமைப்புடன் தொடர்புடைய ஷாரிக் என்ற முகமது ஷாரிக் ( 22) என்பது கண்டறியப்பட்டது. தொடர்ந்து அவனது செல்போனை கைப்பற்றி போலீசார் ஆய்வு செய்தனர். அவன் தனது அடையாளத்தை மறைத்து செல்போனில் பிரேம்ராஜ் என்ற பெயரில் சிவன் ‘ஸ்டேட்டஸ்’ வைத்து பலருடன் பழகி உள்ளான்.
ஷாரிக் யார்? யாருடன் பேசி உள்ளான் என்பது தொடர்பாக போலீசார் தீவிர விசாரணையில் ஈடுபட்டனர். அப்போது பல பெண்களுடன் அவன் பேசியிருப்பது தெரிய வந்தது. நாகர்கோவிலைச் சேர்ந்த ஒரு பெண்ணுடன் பேசியது குறித்து தகவல் கிடைத்ததும், அந்தப் பெண்ணை குமரி மாவட்ட போலீசார் உதவியுடன் விசாரணை நடத்தினர். ஆனால் அது தவறுதலாக வந்த அழைப்பு என தெரிய வந்தது. அந்தப் பெண் மொழி தெரியாததால், தனது ‘பாஸ்ட் புட்’ கடையில் வேலை பார்த்த அசாம் மாநிலத்தைச் சேர்ந்த அஜிம் ரகுமான் என்பவரை வைத்து போனில் பேசியதாக தெரிவித்தார். எனவே அஜிம் ரகுமானுக்கு, ஷாரிக்குடன் தொடர்பு இருக்கலாமா? என்ற கோணத்தில் விசாரணை நடத்தப்பட்டது.
நாகர்கோவில் கோட்டாரில் தங்கியிருந்த அஜிம் ரகுமானை நள்ளிரவில் பிடித்த போலீசார், ரகசிய இடத்திற்கு கொண்டு சென்று விசாரித்தனர். சுமார் 30 மணி நேரம் அவனிடம் பல்வேறு கேள்விகள் கேட்கப்பட்டு விசாரணை நடத்தப்பட்டது. இதில் அவனுக்கும் ஷாரிக்குக்கும் தொடர்பு இல்லை என தெரிய வந்தது. இதனைத் தொடர்ந்து 30 மணி நேர விசாரணைக்கு பிறகு அஜிம் ரகுமானை போலீசார் விடுவித்தனர். இதற்கிடையில் மங்களூரூ போலீசார் நடத்திய விசாரணையில், தமிழகம் மற்றும் கேரளாவுக்கு ஷாரிக் கடந்த செப்டம்பர் மாதம் வந்து சென்றிருப்பது தெரிய வந்தது. ஏற்கனவே கோவையில் கார் குண்டு வெடிப்பு சம்பவம் நடந்திருப்பதால், அதற்கும் ஷாரிக்குக்கும் தொடர்பு இருக்கலாமா? அவன் தமிழகத்திலும் பல்வேறு தீவிரவாத செயல்களில் ஈடுபட சதி திட்டம் தீட்டினானா? என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தினர்.