
திருச்சியில் உள்ள சிறப்பு முகாமில் இருந்து சர்வதேச போதைப்பொருள் கிரிமினல்கள் தொடர்பில் 9 பேரை தேசிய புலனாய்வு முகமை என்.ஐ.ஏ., கைது செய்திருப்பது, தமிழகத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனிடையே, சிறை நிர்வாகம் வேண்டுமென்றே இந்தக் கைது நடவடிக்கையின் போது தாமதத்தை ஏற்படுத்தியது சந்தேகத்தை வரவழைப்பதாக என்.ஐ.ஏ., அதிகாரி குற்றம் சாட்டியுள்ளதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
திருச்சியில் உள்ள சிறப்பு முகாமில் இருந்து செயல்படும் இலங்கையர்கள் கும்பல், ஆப்கானிஸ்தானில் இருந்து ஏராளமான ஹெராயின் போதைப்பொருளை தங்கள் பாகிஸ்தான் ஏஜென்ட் மூலம் கொண்டு வந்து சர்வதேச கடற்பகுதியில் உள்ள மீன்பிடி படகுகளிடம் ஒப்படைத்ததாக தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ.,) வட்டாரங்கள் புதன்கிழமை தெரிவித்தன.
கிரிமினல் குற்றச்சாட்டுகளை எதிர்கொண்டுள்ள இந்த வெளிநாட்டினர் 9 பேரையும், இலங்கையர்களைத் தங்க வைக்கும் சிறப்பு முகாமில் இருந்து என்.ஐ.ஏ., திங்கள்கிழமை புழல் சிறைக்கு மாற்றியது.
போதைப் பொருள் மற்றும் ஆயுதக் கடத்தலில் ஈடுபட்டதாகவும் விடுதலைப் புலிகள் இயக்கத்தை மீண்டும் உருவாக்க முயற்சி செய்ததாகவும் திருச்சி சிறப்பு முகாமில் இருந்த 8 இலங்கையர்கள் உட்பட ஒன்பது பேரை இந்தியாவின் தேசியப் புலனாய்வு முகமை கைதுசெய்தது. இவர்களில் சி. குணசேகரன் என்ற குணாவும், புஷ்பராஜா என்ற பூக்குட்டி கண்ணாவும் சேர்ந்து போதைப் பொருள் கும்பல் ஒன்றை நடத்திவந்ததாக என்.ஐ.ஏ தெரிவித்துள்ளது. இவர்களுக்கான போதைப் பொருளை, பாகிஸ்தானிலிருந்து செயல்படும் ஹாஜி சலீம் என்பவர் அனுப்பிவந்துள்ளார். இந்த போதைப் பொருள் மற்றும் ஆயுதக் கும்பல், இந்தியாவிலும் இலங்கையிலும் செயல்பட்டதாகவும் இரு நாடுகளிலும் புலிகள் இயக்கத்தை மீண்டும் உருவாக்க முயன்றதாகவும் என்.ஐ.ஏ. தெரிவித்துள்ளது.
இது தொடர்பான ஒரு வழக்கை கடந்த 2022 ஜூலை 8ஆம் தேதியன்று தாமாக முன்வந்து என்.ஐ.ஏ. பதிவுசெய்தது. கடந்த 2022 ஜூலை 20 அன்று மத்திய ரிசர்வ் போலீஸ் உதவியுடன் திருச்சி சிறப்பு முகாமில் இலங்கை நாட்டைச் சேர்ந்த 12 முகாம்வாசிகளை சோதனை செய்தனர். என்ஐஏ.,வின் டி.ஐ.ஜி. காளிராஜ் மகேஷ்குமார் தலைமையிலான அணி ஒன்று திருச்சி சிறப்பு முகாமில் நடத்திய சோதனைகளின்போது, மொபைல் போன்கள், சிம் கார்டுகள், ஹார்ட் டிஸ்க்கள், பென் டிரைவ்கள், லேப்டாப் ஆகியவை கைப்பற்றப்பட்டன.
குற்றம் சாட்டப்பட்டவர்கள் மீது இந்திய தண்டனைச் சட்டம், சட்டவிரோத நடவடிக்கைகள் (தடுப்பு) சட்டம், 1967, மற்றும் போதைப்பொருள் மருந்துகள் மற்றும் மனநோய் பொருள்கள் சட்டம், 1985 ஆகியவற்றின் பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
ஒரு மாதத்திற்குப் பிறகு, திருச்சி நகர போலீஸார் முகாமில் சோதனை நடத்தி கைதிகளிடமிருந்து தொலைபேசிகள், மூன்று மடிக்கணினிகள் மற்றும் ஒரு ஸ்மார்ட்வாட்ச், 154 மொபைல்களைப் பறிமுதல் செய்தனர்.
இதற்குப் பின், திருச்சி வெளிநாட்டவர் சிறப்பு முகாமில் 2022 டிச.19 மாலை 6 மணிக்கு என்.ஐ.ஏ., கண்காணிப்பாளர் தர்மராஜ் தலைமையில், துணை கண்காணிப்பாளர் செந்தில் மற்றும் ஆய்வாளர் எபிசன் பிராங்கோ ஆகியோர் தலைமையில் என்.ஐ.ஏ., அதிகாரிகள் எட்டு பேர் சோதனை செய்து, திருச்சி மாவட்ட ஆட்சியர் ஆணையின் பேரில் ஒன்பது பேரைக் கைது செய்து, பூந்தமல்லி நீதிமன்றத்துக்குக் கொண்டு சென்றனர்.
இதன்படி, திருச்சி சிறப்பு முகாமில் தங்க வைக்கப்பட்டிருந்த சி. குணசேகரன், புஷ்பராஜா, முகமது அஸ்மின், அழகப்பெரும சுனில் காமினி பொன்செக, ஸ்டான்லி கென்னடி ஃபெர்ணான்டோ, லாடியா சந்திரசேன, தனுக்க ரோஷன், வெள்ளசுரங்க்க, திலீபன் ஆகிய ஒன்பது பேர் கைதுசெய்யப்பட்டு சென்னைக்குக் கொண்டு செல்லப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.
கைதுசெய்யப்பட்டவர்களில் முகமது அஸ்மின் மட்டும் ராமநாதபுரம் தேவகோட்டையைச் சேர்ந்தவர். மற்றவர்கள் அனைவரும் இலங்கையைச் சேர்ந்தவர்கள். கைதுசெய்யப்பட்டுள்ள அனைவரும் வேறு சில குற்றங்களுக்காக திருச்சி சிறப்பு முகாமில் அடைக்கப் பட்டிருந்தனர்.
2021ஆம் ஆண்டில் இலங்கையைச் சேர்ந்த சுரேஷ் ராஜன் என்பவர் கொச்சிக்கு அருகில் உள்ள அங்கமாலியில் கைது செய்யப்பட்டார். ஹாஜி சலீமுடன் இருந்த தொடர்புக்காக கைதுசெய்யப்பட்ட அவரை விசாரித்த போது, அவரது வங்கிக் கணக்கிலிருந்து பல கோடி ரூபாய் கொடுக்கல் – வாங்கல் நிகழ்ந்திருப்பது தெரியவந்தது. இந்தியாவைத் தளமாகப் பயன்படுத்தி, இலங்கைக்கு போதைப் பொருட்களையும் ஆயுதங்களையும் கடத்துவதில் முக்கியப் புள்ளியாக சுரேஷ் ராஜன் இருந்தது தெரியவந்தது.
இந்நிலையில், கடந்த ஆண்டு மார்ச் மாதம் 25ம் தேதி, விழிஞ்ஞம் துறைமுகத்திற்கு அருகில் ‘ரவிஹன்சி’ என்ற சிறிய ரக கப்பல் ஒன்றை சந்தேகத்தின் பேரில் தடுத்து நிறுத்திய கடலோர பாதுகாப்புப் படையினர், அதனைச் சோதனையிட்டனர். அந்தச் சோதனையில் படகிலிருந்து 301 கிலோ ஹெராயின், ஐந்து ஏகே 47 ரக துப்பாக்கிகள், 1000 9-எம்.எம். தோட்டாக்கள் ஆகியவை கைப்பற்றப்பட்டன. இந்த வழக்கு தொடர்பாகத்தான் கொச்சியைச் சேர்ந்த என்ஐஏ அதிகாரிகள், இந்த ஒன்பது பேரையும் கைது செய்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது.
என்.ஐ.ஏ., திரட்டிய ஆதாரங்களின்படி, போதைப்பொருட்களை இலங்கைக்கு அருகில் உள்ள சர்வதேச கடற்பரப்பிற்கு கொண்டு செல்வதும், பின்னர் மீன்பிடி படகுகளில் சிறிய அளவில் விநியோகிப்பதும்தான் அவர்களின் செயல் முறை. போதைப்பொருள் சரக்குகளில் பெரும்பாலானவை உள்ளூர் நுகர்வுக்காகவோ அல்லது ஐரோப்பா அல்லது தென் அமெரிக்காவில் உள்ள நாடுகளுக்கு (கோகோயின் விஷயத்தில்) மேலும் கடத்துவதற்காகவோ இருந்தபோதும், குறிப்பிட்ட அளவு கடத்தல் பொருட்கள் தமிழகத்திற்கும் அனுப்பப்பட்டன.
இந்த நடவடிக்கைகள் குறித்து தெரிவித்த என்.ஐ.ஏ., அதிகாரிகள், ஒன்பது சந்தேக நபர்களை கைது செய்ய 2022 டிச.19 திங்கள்கிழமை திருச்சி சிறப்பு முகாமுக்கு வந்தபோது, குறைந்தது நான்கு மணிநேரம் அந்த வளாகத்திற்குள் என்.ஐ.ஏ., அதிகாரிகள் நுழைய அனுமதி மறுக்கப்பட்டதாக குற்றம் சாட்டுகின்றனர். அவர்களை முகாமுக்குள் நுழைய அனுமதிப்பதற்கும் இலங்கைப் பிரஜைகளை கைது செய்வதற்கும் உரிய மட்டத்தில் அனுமதிக்காக காத்திருப்பதாக காவல்துறை மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் அவர்களிடம் தெரிவித்துள்ளனர்.
“சந்தேக நபர்களுக்கு மொபைல் போன்கள், மடிக்கணினிகள் மற்றும் ஆவணங்கள் போன்ற முக்கிய ஆதாரங்களை மறைக்க அந்த சில மணி நேர அவகாசமே போதுமானதாக இருந்தது. எனவே, சந்தேக நபர்களை விசாரணைக்காக காவலில் எடுத்து விசாரிக்க விரைவில் நீதிமன்றத்தை நாடுவோம்” என்று என்ஐஏ அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். அந்த அதிகாரியின் குற்றச்சாட்டு மிக முக்கியமானதாகவும் பலவித சந்தேகங்களை எழுப்பியுள்ளதாகவும் பார்க்கப்படுகிறது.
ஆயுதங்கள் மற்றும் போதைப்பொருள் கடத்தல்/விற்பனை மூலம் திரட்டப்பட்ட பணம், இலங்கை மற்றும் தமிழகத்தில் தடை செய்யப்பட்ட தமிழீழ விடுதலைப் புலிகளின் செயல்பாடுகளுக்கு புத்துயிர் அளிக்க உதவுவதற்கானது என என்ஐஏ கூறுவதற்கு ஆதாரம் உள்ளதா என்று கேட்டதற்கு, இலங்கை, இந்தியா, ஐரோப்பா, யு.கே.,வை தளமாகக் கொண்ட முன்னாள் விடுதலைப் புலிகள் அல்லது அனுதாபிகளுக்கு ஹவாலா வழிகளில் நிதி பரிவர்த்தனைகள் பற்றிய தெளிவான ஆதாரங்கள் இருந்ததாகக் கூறியுள்ளார்.
“சிறப்பு முகாமை மூடக் கோரி அடிக்கடி போராட்டங்களை நடத்தி, விடுதலைப் புலிகள் அல்லது தமிழ் ஈழத்திற்கு ஆதரவாக அழுத்தமாகக் குரல் கொடுத்த சில குழுக்களுக்கும் அந்தக் கும்பல் நிதியளித்துள்ளது” என்று பெயர் குறிப்பிட விரும்பாத அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
சிறப்பு முகாமில் தங்க வைக்கப்பட்டிருந்த இலங்கையர்களின் பங்கு முதலில் வெளிச்சத்திற்கு வந்தது, விழிஞ்ஞம் போதைப்பொருள் மற்றும் ஆயுத கடத்தல் வழக்கில் தான். அதன் தொடர்ச்சியாக, சிறப்பு முகாமில் ஜூலை 2022 இல் தேடுதல் நடத்தப்பட்டு, அதன் விசாரணையின் தொடர்ச்சியாகத்தான் இந்தக் கைது நடவடிக்கையும் இருந்துள்ளது. மேலும் முகாமில் அடைக்கப்பட்டுள்ள சந்தேக நபர்கள், பாகிஸ்தான் மற்றும் இலங்கையை தளமாகக் கொண்ட போதைப்பொருள் கடத்தல்காரர்களுடன் ஒருங்கிணைத்து தொடர்ந்து செயல்படுவதற்கு, குறிப்பிட்ட தகவல்களின் அடிப்படையில் ஆதாரங்கள் உள்ளன என்று அதிகாரிகள் கூறுகின்றனர்.