தை பொங்கலுக்கு ரூ.1000 ரொக்கம்: 27-ந்தேதி முதல் வீடு வீடாக டோக்கன்..

Published:

images 63 1 - 2026

பொங்கலுக்கு ரூ.1000 ரொக்கம்: 27-ந்தேதி முதல் வீடு வீடாக டோக்கன் வினியோகம் செய்யப்படுகிறது.  பொங்கல் ரொக்கப் பணம் வழங்கும் நிகழ்ச்சியினை ஜனவரி2-ந்தேதி முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னையில் தொடங்கி வைக்கிறார். அன்றைய தினமே அனைத்து மாவட்டங்களிலும் அமைச்சர்கள் பொதுமக்களுக்கு பொங்கல் ரொக்கப் பணத்தை வழங்குகிறார்கள்.

தமிழர் திருநாள் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஒவ்வொரு ஆண்டும் ஏழை-எளிய மக்களுக்கு பொங்கல் தொகுப்பு வழங்கப்பட்டு வருகிறது. அரிசி ரேஷன் கார்டு வைத்திருப்பவர்களுக்கு இத்திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. வழக்கமாக பச்சரிசி, வெல்லம், முந்திரி, திராட்சை, கரும்பு உள்ளிட்ட பொருட்கள் ரேஷன் கடைகள் மூலம் வழங்கப்படும். கடந்த ஆண்டு கரும்புடன் 21 பொருட்கள் அடங்கிய பொங்கல் தொகுப்பு அரசு சார்பில் வழங்கப்பட்டன. இந்த வருடம் பொங்கல் பண்டிகையை சிறப்பாக கொண்டாட ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை இவற்றுடன் ரூ.1000 ரொக்கப் பணம் வழங்கப்படும் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார். அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்கள் மற்றும் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பத்தினருக்கு இவை வழங்கப்பட உள்ளது. இதன் மூலம் 2 கோடியே 19 லட்சம் பேர் பயன் அடைவார்கள் என்றும் இதற்காக அரசுக்கு சுமார் ரூ.2,356 கோடி செலவாகும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ALSO READ:  தமிழின் மாண்பை இழிவுபடுத்திய நிதி அமைச்சர் மரியவில்சனுக்கு இந்து முன்னணி கண்டனம்!

பொங்கல் ரொக்கப் பணம் வழங்கும் நிகழ்ச்சியினை அடுத்த மாதம் (ஜனவரி) 2-ந்தேதி முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னையில் தொடங்கி வைக்கிறார். அன்றைய தினமே அனைத்து மாவட்டங்களிலும் அமைச்சர்கள் பொது மக்களுக்கு வழங்குகிறார்கள். பொங்கல் ரொக்கப் பணம் தமிழகத்தில் உள்ள 33,000 ரேஷன் கடைகள் மூலமாக வழங்கப்பட உள்ளது. இதற்கான ஆயத்த பணிகள் நாளை (26-ந்தேதி) முதல் நடைபெறுகிறது. ரேஷன் கடைகளில் தற்போது அத்தியாவசிய பொருட்கள் வாங்குவதற்கு கைவிரல் ரேகை பதிவு செய்யப்படுகிறது. குடும்பத் தலைவர் அல்லது குடும்ப உறுப்பினர்கள் யாராவது ஒருவர் மூலம் ரேஷன் பொருட்களை பெற முடியும். அது போல பொங்கல் பண்டிகைக்கான பச்சரிசி மற்றும் சர்க்கரை பெறவும் ஸ்மார்ட் கார்டுடன் கைரேகையும் பதிவு செய்ய வேண்டும். ரூ.1000 ரொக்கம் பெறவும் கைரேகைப் பதிவு இந்த முறை அவசியமாக்கப்பட்டுள்ளது. குடும்ப அட்டைதாரர்கள் யாராவது ஒருவரின் கைரேகைப் பதிவு செய்தால் மட்டுமே பொங்கல் பரிசு கிடைக்கும். பொங்கல் பரிசு பொருட்கள் மற்றும் ரொக்கம் வழங்குவதில் முறைகேடு நடைபெறாமல் தடுப்பதற்காக இவை கட்டாயமாக்கப்பட்டுள்ளது. எனவே 2-ந்தேதி முதல் சென்னை உள்பட அனைத்து மாவட்டங்களிலும் பொங்கல் பரிசு வழங்கும் பணி தொடங்குகிறது.

ALSO READ:  கம்யூனிஸ்ட்கள் நயவஞ்சகர்கள்; தமிழக அரசை எச்சரிக்கும் இந்து முன்னணி!

13-ந்தேதி போகிப் பண்டிகை தொடங்குவதற்கு முன்பு அனைத்து அரிசி அட்டைதாரர்களுக்கும் இவை வழங்கப்பட வேண்டும் என பொது விநியோகத் திட்ட அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர். பொங்கல் பரிசு மற்றும் ரூ.1000 பெறுவதற்கு ரேஷன் கடைகளில் கூட்ட நெரிசல் ஏற்படுவதை தவிர்க்க வழக்கம் போல டோக்கன் முறை செயல்படுத்தப்படுகிறது. தினமும் 100 முதல் 200 கார்டுகளுக்கு ஒவ்வொரு ரேஷன் கடைகளிலும் வினியோகம் செய்ய திட்டமிடப்படுகிறது. எந்தெந்த தெருவில் உள்ளவர்கள் எந்த தேதியில் பெற வேண்டும் என டோக்கனில் குறிப்பிடப்பட்டு வீடுகளுக்கு வழங்கப்படும். பொங்கல் பரிசு தொகை பெறும் நாள், நேரம் போன்றவற்றை குறிப்பிட்டு ஒவ்வொரு வீடாக இதனை ரேஷன் கடை ஊழியர்கள் வழங்குவார்கள்.

அந்த நாளில் கடைகளில் நெரிசல் இல்லாமல் பணத்தை பெற்றுக்கொள்ள ஏற்பாடு செய்யப்படுகிறது. வருகிற 27, 28-ந்தேதிகளில் வீடுகளுக்கு டோக்கன் வழங்கப்பட உள்ளது. இதுகுறித்து சிவில் சப்ளை அதிகாரி ஒருவர் கூறியதாவது:- பொங்கலுக்குள் அரசு அறிவித்துள்ள ரூ.1000 ரொக்கம் குடும்ப அட்டை உறுப்பினர்கள் கைரேகை பதிவு செய்தால் மட்டுமே பெற முடியும். கையெழுத்து போட்டு பெற இயலாது. இதில் எவ்வித தவறுக்கும் இடம் அளிக்காமல் முறையாக பொதுமக்களுக்கு கிடைக்க ஏற்பாடு செய்யப்படுகிறது. வெளியூர் சென்று இருந்தாலோ, வீடு பூட்டி இருந்தாலோ அவர்கள் ரொக்கப் பணம் பெற அவகாசம் கொடுக்கப்படும். குடும்ப உறுப்பினர் அல்லாதவர்கள் பணம், பொருட்களை பெற முடியாது. ரேஷன் கடை பணியாளர்கள் எவ்வித புகாருக்கும் இடம் அளிக்காமல் பொங்கலுக்கான பச்சரிசி, சர்க்கரை மற்றும் ரொக்கம் வழங்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

ALSO READ:  செல்போனுக்குத் தடை; கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு தண்டனையா?
Sakthi Paramasivan.k
Sakthi Paramasivan.k
Media News Reporter, Rajapalayam

Related articles

Recent articles

spot_img