

குஜராத் மாநிலம், காந்திநகரில் உள்ள மயானத்தில் பிரதமர் நரேந்திர மோடியின் தாயார் ஹீராபென் உடல் தகனம் செய்யப்பட்டது.
குஜராத் மாநிலம், ஆகமதாபாதில் உள்ள யு.என். மேத்தா இதய நோய் சிகிச்சை மற்றும் ஆராய்ச்சி மையத்தில் அவா் புதன்கிழமை அனுமதிக்கப்பட்டாா். ஹீராபென்னுக்கு மருத்துவர்கள் தொடர்ந்து தீவிர சிகிச்சை அளித்து வந்தனர். பிரதமா் மோடி அவரை நேரில் சந்தித்து நலம் விசாரித்தாா்.
சுமாா் ஒரு மணி நேரம் மருத்துவமனையில் இருந்து அவா் மருத்துவா்களிடம் தாயாரின் உடல்நிலை குறித்து கேட்டறிந்தாா்.இந்நிலையில், நரேந்திர மோடியின் தாயார் ஹீராபென்(100) வெள்ளிக்கிழமை அதிகாலை காலை 3.30 மணியளவில் மருத்துவமனையில் காலமானார்.
அதன்பிறகு அவரது உடல் அவர் வசித்த காந்திநகர் அருகே ரேசன் எனும் பகுதியில் உள்ள வீட்டுக்கு கொண்டு வரப்பட்டது. இதையடுத்து ஆகமதாபாத் விரைந்து வந்த நரேந்திர மோடி, காந்தி நகரில் உள்ள இல்லத்தில் தாய் ஹீராபென்னின் உடலை பார்த்து அவர் கண்கலங்கிய மோடி, அவரது உடலுக்கு மலர்வளையம் வைத்து தாயாரின் உடலின் முன்பு விழுந்து கும்பிட்டு கண் கலங்கினார் அஞ்சலி செலுத்தினார்.
இதையடுத்து ஹீராபென் மோடியின் இறுதி ஊர்வலம் தொடங்கியது. தாயார் ஹீராபென் உடலை சோகத்துடன் தோளில் சுமந்து சென்று இறுதிச்சடங்கில் கலந்து கொண்டார் பிரதமர் நரேந்திர மோடி.
தொடர்ந்து நடைபெற்ற இறுதிச்சடங்கு நிகழ்ச்சிக்கு பின்னர் அன்பை பொழிந்த அன்னையின் உடலுக்கு கண்ணீருடன் தீமூட்டினார் பிரதமர் மோடி.
தாயாரின் இறுதிச்சடங்கு நிகழ்ச்சியில் மிகவும் சோகமாக கண்கள் கலங்கிய நிலையில் தாயாரின் உடலை மோடி தோளில் சுமந்து சென்ற விடியோ, புகைப்படங்கள் சமூகவலைத்தளங்களில் வைரலாகி வரும் நிலையில், பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். சமீபத்தில் தனது 100 ஆவது பிறந்தநாளை கொண்டாடிய தாய் ஹீராபென்னை பிரதமர் மோடி சந்தித்து வாழ்த்து தெரிவித்ததோடு, ஆசியும் பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
குடும்பத்தினர் வேண்டுகோள்:
அவரவர் தாங்கள் திட்டமிட்டப்படி தங்களது பணியை செய்யுங்கள். பணிகளை ஒத்துவைத்துவிட்டு வருவதை தவிர்க்கவும். தங்களது பணியை திட்டமிட்டபடி செய்வதே பிரதமரின் தாயாருக்கு செலுத்தும் மரியாதையாகும். மறைந்த ஆன்மாவை மனதில் நிறுத்துவதே போதுமானாது என பிரதமர் மோடியின் குடும்பத்தினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர். மேலும், கடினமான காலங்களில் அனைவரின் பிரார்த்தனைகள், இரங்கலுக்கு நன்றி என தெரிவித்துள்ளனர்.





