
வைகுண்ட ஏகாதசியையொட்டி திருமலை திருப்பதி, திருவரங்கம் திருவிலியில் நாளை அதிகாலை சொர்க்கவாசல் திறக்கப்படுகிறது.
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் கொரோனா பரவலால் 2 ஆண்டுகளுக்கு பிறகு வைகுண்ட ஏகாதசி வெகு விமரிசையாக கொண்டாடப்படுகிறது. அதன்படி நாளை அதிகாலை 1.45 மணிக்கு சொர்க்கவாசல் திறக்கப்படுகிறது. அதிகாலை 2 மணி முதல் 5 மணி வரை அதிகாரிகள் விஐபி தரிசனத்தில் சுவாமி தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட உள்ளனர். அதன் பிறகு பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள். தொடர்ந்து வரும் 11-ம் தேதி இரவு 12 மணி வரை சொர்க்கவாசல் வழியாக பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்வதற்கான ஏற்பாடுகளை தேவஸ்தான அதிகாரிகள் செய்துள்ளனர். எந்தவித டிக்கெட் இல்லாத பக்தர்கள் திருமலைக்கு அனுமதிக்கப்பட்டாலும் திருமலையில் உள்ள மற்ற பகுதிகளை சுற்றி பார்க்க செல்லலாம். ஆனால் எக்காரணத்தை கொண்டும் ஏழுமலையான் கோயிலில் சொர்க்கவாசல் வழியாக சென்று சுவாமி தரிசனம் செய்வதற்கு அனுமதிக்க முடியாது என தேவஸ்தான அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
வைகுண்ட ஏகாதசி சொர்க்கவாசல் வழியாக சுவாமி தரிசனம் செய்வதற்காக நாளை முதல் 11ம் தேதி வரையிலான பத்து நாட்களுக்கு உண்டான இலவச டோக்கன்கள் திருப்பதியில் பிரத்யேகமாக 9 இடங்களில் அமைக்கப்பட்ட 96 கவுன்டர்களில் 4 லட்சத்து 50 ஆயிரம் டோக்கன்கள் வழங்கப்பட உள்ளது. இந்த டோக்கன்களை பெறும் பக்தர்கள் அவர்களுக்கு வழங்கப்பட்ட தேதியில் குறிப்பிட்ட நேரத்தில் மட்டுமே சுவாமி தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட உள்ளனர். சொர்க்கவாசல் தரிசனத்துக்கு இலவச டோக்கன்களை பெறுவதற்காக வரும் பக்தர்கள் சிரமமின்றி அந்தந்த கவுன்டர்களுக்கு செல்லும் விதமாக திருப்பதி நகரின் பல்வேறு இடங்களில் இலவச டோக்கன்கள் வழங்கும் கவுன்டர்களுக்கு செல்லும் விதமாக கியூஆர் கோடு விளம்பர பலகைகள் வைக்கப்பட்டுள்ளது. பக்தர்கள் அந்த க்யூஆர் கோடு ஸ்கேன் செய்து அருகில் உள்ள இலவச கவுன்டர் மையத்திற்கு சென்று டிக்கெட்டுகளை பெற்றுக் கொள்ளும் விதமாக ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

ஸ்ரீரங்கம் கோயிலில் நாளை வைகுந்த ஏகாதசி பரமபதவாசல் திறப்பு..
ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி கோயில் வைகுந்த ஏகாதசி விழாவில் 10ம் நாளான ஞாயிற்றுக்கிழமை மூலஸ்தானத்தில் இருந்து மோகினி அலங்காரம் என்கிற நாச்சியார் திருக்கோலத்தில் ஸ்ரீ நம்பெருமாள் எழுந்தருளினார்.ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி கோயிலில் நடைபெறும் வைகுந்த ஏகாதசி விழாவின் முக்கிய நிகழ்வான பரமபதவாசல் திறப்பு திங்கள்கிழமை (ஜனவரி 2) நடைபெறவுள்ளது.
ஸ்ரீரங்கம் கோயிலில் நடைபெறும் முக்கிய விழாவான வைகுந்த ஏகாதசி பெருவிழாவானது பகல்பத்து, இராப்பத்து, இயற்பா சாற்றுமுறை என 21 நாள்கள் நடைபெறும். பகல்பத்து விழாவின் 9 ஆம் நாளான சனிக்கிழமை நம்பெருமாள் முத்துப் பாண்டியன் கொண்டை, முத்து கா்ணபத்ரம்,முத்து அபயஹஸ்தம், முத்துச்சரம், முத்து திருவடி, முத்தங்கி அணிந்து முத்துக்குறி அலங்காரத்தில் எழுந்தருளி பக்தா்களுக்கு அருள்பாலித்தாா்.
பகல்பத்தின் 10 ஆம் நாளான ஞாயிற்றுக்கிழமை நம்பெருமாள் மோகினி அலங்காரத்தில் (நாச்சியாா் திருக்கோலம்) பகல்பத்து மண்டபத்தில் எழுந்தருளி பக்தா்களுக்குச் சேவை சாதித்தார்.
பின்னா் இராப்பத்து விழாவின் முதல் நாளான திங்கள்கிழமை வைகுந்த ஏகாதசியின் முக்கிய நிகழ்வான பரமபதவாசல் திறப்பு அதிகாலை 4.45 மணிக்கு நடைபெறுகிறது. விழாவையொட்டி ஸ்ரீரங்கம் மின்னொளியால் விழாக்கோலம் பூண்டுள்ளது.

ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி திருக்கோயில் வைகுந்த ஏகாகதசி பகல் பத்து 8-ம் நாளான வெள்ளிக்கிழமை அர்ச்சுன மண்டபத்தில் முத்து குறி அலங்காரத்தில் பக்தர்களுக்கு ஸ்ரீ நம்பெருமாள் காட்சியளித்தார்.சொர்க்கவாசல் திறப்பை முன்னிட்டு வருகிற 2-ஆம் தேதி திருச்சி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவித்து ஆட்சியர் மா.பிரதீப் குமார் உத்தரவிட்டுள்ளார்.
ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி கோயிலில் கட்டணமில்லா தரிசனம் செய்யும் பக்தா்களுக்காக மேற்கூரை, அமரும் இருக்கைகள், மின் விசிறி, குடிநீா் வசதியுடன் கூடிய நிரந்தர பிரம்மாண்ட கூடாரம் ஆகியவை ரூ. 67.5 லட்சத்தில் அமைக்கப்பட்டுள்ளன.
பக்தர்கள் வரிசையாக அமர மேற்கூரை அமைக்கப்பட்டுள்ளது. இதில் 800 பக்தா்கள் அமரும் வகையில் இருக்கைகள், குடிநீா், மின் விசிறி வசதியும் செய்யப்பட்டுள்ளது.இதுபோல கட்டண தரிசனத்தில் வரும் பக்தா்களுக்கான ரூ. 42 லட்சம் மதிப்புள்ள 350 ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் பெஞ்சுகள் போடப்பட்டுள்ளன.

ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் நாளை ஜன.2ல் சொர்க்கவாசல் திறப்பு..
ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் ஜன. 2ல் சொர்க்கவாசல் திறப்பு , ராப்பத்து உற்ஸவம் துவக்கமும், ஜன. 8 முதல் 15 வரை மார்கழி எண்ணெய் காப்பு திருவிழாவும்
நடக்கிறது.
பகல் பத்து : பகல்பத்து உற்ஸவம் டிச. 23 முதல் துவங்கி நடக்கிறது. இதன் முதல் நாளில் மாலை 5:00 மணிக்கு வேதபிரான் திருமாளிகைக்கு ஆண்டாள், ரெங்க மன்னார் எழுந்தருளி பச்சைபரத்தல் பார்க்கும் நிகழ்ச்சியும் இதனை தொடர்ந்து தினமும் ஆண்டாள், ரெங்க மன்னார் மண்டபம் எழுந்தருளல், அரையர் சேவை, திருவாராதனம் கோஷ்டி, பெரிய பெருமாள் பத்தி உலாவுதல் நிகழ்ந்தது.
சொர்க்கவாசல் திறப்பு: வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு ஜன.2ல் சொர்க்கவாசல் திறப்பு நடக்கிறது. அன்று காலை 6:30 மணிக்கு பெரிய பெருமாள், ஆண்டாள், ரெங்கமன்னார் சொர்க்கவாசல் வழியாக எழுந்தருள, ஆழ்வார்கள் எதிர்கொண்டு சேவித்து, மாடவீதிகள் வழியாக ராப்பத்து மண்டபம் வந்தடைவர். அங்கு ஆழ்வார்கள் மங்களாசாசனம், பத்தி உலாவுதல், திருவாராதனம், அரையர் சேவை, சேவா காலம் நடக்கிறது.
ராப்பத்து: ஜன.2 முதல் 11 வரை ராப்பத்து உற்ஸவம் நடக்கிறது. தினமும் இரவு 7:00 மணிக்கு ஆண்டாள் மூலஸ்தானத்தில் இருந்து புறப்பட்டு மாட வீதியில் சுற்றி பெரிய பெருமாள் சன்னதியில் எழுந்தருள்கிறார். அங்கு திருவாராதனம், அரையர்சேவை, பஞ்சாங்கம் வாசித்தல், சேவா காலம் என மறுநாள் அதிகாலை 5:30 மணி வரை ராப்பத்து உற்ஸவங்கள் நடக்கிறது.
எண்ணெய்காப்பு உற்ஸவம்: ஜன. 8 முதல் 15 வரை நடக்கும் மார்கழி எண்ணெய் காப்பு உற்ஸவத்தில் தினமும் காலை 10:00 மணிக்கு ஆண்டாள் எண்ணெய் காப்பு மண்டபம் எழுந்தருள்கிறார். மதியம் 3:00 மணிக்கு அங்கு எண்ணெய்காப்பு உற்ஸவம் நடக்கிறது. விழா ஏற்பாடுகளை தக்கார் ரவிச்சந்திரன், செயல் அலுவலர் முத்துராஜா தலைமையில் கோயில் பட்டர்கள், அலுவலர்கள் செய்து வருகின்றனர்.





