
ரூ1000 செலுத்தினால் மதுரை மீனாட்சியம்மன் கோவில் குங்குமம் அனுப்பி வைக்கப்படும் என போலியான விளம்பரங்கள் செய்து பணம் வசூலித்த தனியார் அறக்கட்டளை மீது பொதுமக்கள் கடும் அதிருப்தியில் உள்ளனர்.
மதுரை மீனாட்சியம்மன் கோவில் பெயரில் போலி இணையதளம் தொடங்கி, ரூ.1000 அனுப்பினால் அம்மனின் குங்குமம் வீட்டு முகவரிகளுக்கு அனுப்பி வைக்கப்படும் என விளம்பரம் செய்து மோசடி செய்தாக டிரஸ்ட் உரிமையாளர்கள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
உலக பிரசித்தி பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் நாள்தோறும் உள்ளூர் மட்டுமின்றி வெளி நாடுகளில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வருகை தருகின்றனர். மீனாட்சி அம்மன் கோவிலில் அம்மனின் குங்குமம் பிரசாதம் மிகவும் சிறப்பு பெற்றதாகும்.
குங்குமம் நம் மரபில் மங்கலச் சின்னத்தின் அடையாளமாகக் கருதப்படுவது. பெண்கள் மட்டுமல்ல ஆண்களும் அணிந்துகொள்ள விரும்புவார்கள். அதுவும் கோயில்களில் அம்மன் சந்நிதியில் தரும் குங்குமம் என்றால் இன்னும் விசேஷமே. திருநீறு அணிபவர்களும் குங்குமம் அணிந்து கொண்டால் செயல்கள் அனைத்தும் வெற்றியாகும் என்கின்றன ஞானநூல்கள். குங்குமங்களில் பலதரப்பட்ட குங்குமங்கள் காணப்பட்டாலும் மதுரை மீனாட்சி அம்மன் கோயில், சென்னை காளிகாம்பாள் கோயில் ஆகியவற்றில் வழங்கப்படும் தாழம்பூ குங்குமம் மிகவும் சிறப்புடையதாகக் கருதப்படுகிறது. பக்தர்கள் அந்தக் குங்குமத்தை வைத்துக்கொண்டாலும் வீட்டுக்கு எடுத்துச் சென்றாலும் விசேஷம் என்கிறார்கள். தாழம்பூ குங்குமத்தில் சிறப்பு அதிகம் உள்ளது முக்கிய அம்சமாகும்.
இந்நிலையில், கடச்சனேந்தல் பகுதியில் செயல்பட்டு வரும் காவேரி சேவா டிரஸ்ட் எனும் அமைப்பு, ரூ.1000 டிரஸ்ட் வங்கிக் கணக்கிற்கு அனுப்பினால் மாதந்தோறும் முதல் வாரத்தில் சிறப்பு பூஜை செய்யப்பட்ட குங்கும் வீட்டின் முகவரிக்கு அனுப்பி வைக்கப்படும் என மீனாட்சி அம்மன் கோவில் பெயரில் மோசடியான விளம்பரத்தை பதிவு செய்தனர்.
இதனை நம்பி ஏராளமான வெளிநாட்டு பக்தர்கள் டிரஸ் பெயரில் ரூ.1000 செலுத்தியதாக மீனாட்சி அம்மன் கோவில் நிர்வாகத்திற்கு தொடர்ந்து புகார்கள் வந்தது.
இதனையடுத்து மீனாட்சி அம்மன் கோவில் கண்காணிப்பாளர் அளித்த புகாரின் அடிப்படையில், காவேரி சேவா டிரஸ்ட் உரிமையாளர்கள் மீது மீனாட்சி அம்மன் கோவில் காவல்நிலையத்தில் வழக்குப் பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மீனாட்சி அம்மன் கோவில் பெயரில் நடைபெற்ற மோசடி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.





