தேமுதிக.,வுக்கு ஆதரவு: மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுகவினர் வெளிநடப்பு

சற்றுமுன்

தமிழக சட்ட மன்றத்தில் தேமுதிக பற்றி பேச அனுமதிக்கப் படாததால், மு.க. ஸ்டாலின் தலைமையில் திமுகவினர் வெளிநடப்பு செய்தனர். திமுகவினரைத் தொடர்ந்து காங்கிரஸ் உறுப்பினர்களும் வெளிநடப்பில் ஈடுபட்டனர். தமிழக சட்ட மன்றத்தில் இன்று கேள்வி நேரம் முடிந்ததும் மு.க.ஸ்டாலின் எழுந்து தேமுதிக பிரச்னை குறித்து பேசத் தொடங்கினார். ஆனால், அவைத்தலைவர், ‘இதற்கு அனுமதி இல்லை உட்காருங்கள்!’ என்றார். ஆனால் தொடர்ந்து மு.க.ஸ்டாலின் நின்றபடியே பேச அனுமதி கேட்டார். அவருக்கு ஆதரவாக தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் அனைவரும் எழுந்து நின்றனர். அதற்கு அனுமதி மறுக்கப்பட்டதால் அனைவரும் வெளிநடப்பு செய்தனர். இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய மு.க.ஸ்டாலின்… “தேமுதிக.,வை இந்தக் கூட்டத் தொடர் முழுவதும் சஸ்பென்ட் செய்து இருக்கிறார்கள். இதனால் அடுத்து வரும் பட்ஜெட் தொடரிலும் அவர்கள் பங்கேற்ற முடியாத நிலை உள்ளது. ஆகவே தேமுதிக மீது எடுக்கப்பட்ட நடவடிக்கையை மறுபரிசீலனை செய்யக் கோரிக்கை வைப்பதற்காக அனுமதி கேட்டேன். ஆனால் அது குறித்துப் பேசத் தொடங்கியதுமே அது அவைக் குறிப்பில் இடம் பெறாது என்று அவைத் தலைவர் அறிவித்து விட்டார். தொடர்ந்து கோரிக்கை வைத்தும் அது பற்றிப் பேச அனுமதி வழங்காததால் வெளிநடப்பு செய்தோம். கடந்த ஆட்சியின் போது இதுபோன்ற சம்பவங்களில் எதிர்க் கட்சிகளின் கோரிக்கையை ஏற்று அவைத்தலைவர் நடவடிக்கை மறுபரிசீலனை செய்யப்பட்டுள்ளது. இப்போதும் அதுபோன்ற கோரிக்கையைத்தான் நாங்கள் முன்வைத்தோம். ஆனால் ஏற்கவில்லை” என்று கூறினார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.