பத்து வெளிநாட்டினர் உள்பட 72 பேருடன் சென்ற நேபாள பயணிகள் விமானம் ஞாயிற்றுக்கிழமை பொக்ரா விமான நிலையத்தில் தரையிறங்கும் போது விழுந்து விபத்துக்குள்ளாகி தீப்பிடித்து எரிந்தது. இதில், குறைந்தது 32 பேரின் உடல்கள் மீட்கப்பட்டள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
நேபாளத்தின் சிவில் விமானப் போக்குவரத்து ஆணையத்தின்படி, எட்டி ஏர்லைன்ஸின் 9என்-ஏஎன்சி ஏடிஆர்-72 விமானம் 10 வெளிநாட்டினர் என 68 பயணிகள் மற்றும் நான்கு விமான ஊழியர்கள் என 72 பேருடன் காத்மாண்டுவின் திரிபுவன் சர்வதேச விமான நிலையத்தில் இருந்து ஞாயிற்றுக்கிழமை காலை 10:33 மணிக்கு புறப்பட்டது.
இமயமலை தேசத்தின் முக்கிய சுற்றுலா தலமான பொக்ரா சென்ற எட்டி ஏர்லைன்ஸ் விமானம், பொக்ரா விமான நிலையத்தில் தரையிறங்கும் போது, பழைய விமான நிலையத்துக்கும் புதிய விமான நிலையத்துக்கும் இடையே உள்ள சேதி ஆற்றின் கரையில் விமானம் விழுந்து நொறுங்கியது. இதில், விமானம் முழுவதும் தீப்பிடித்து தீ கொழுந்துவிட்டு எரிந்து வருகிறது.
விமானத்தில் இருந்த 68 பயணிகள், நான்கு விமான ஊழியர்கள் என 72 பேரின் நிலைமை கவலைக்குரியதாகவும், மீட்புப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருவதாகவும், சர்வதேச விமான நிலையம் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது என்று எட்டி ஏர்லைன்ஸ் செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார். இந்நிலையில், விபத்துக்குள்ளான விமானத்தில் பயணித்த 32 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளதாகவும், மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இயற்கை எழில் சூழ்ந்த பொக்ராவுக்கு பயணித்த பயணிகளில் இந்தியவர் யாராவது இருக்கிறார்களா என்பது உடனடியாகத் தெரியவில்லை.இடிபாடுகள் ஏற்பட்ட இடத்தில் இருந்து குறைந்தது 32 உடல்கள் மீட்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
காஸ்கி மாவட்டத்தின் முதன்மை மாவட்ட அதிகாரி டெக் பகதூர் கேசி கூறுகையில், விமானம் சேதி ஆற்றின் கரையில் விமானம் விழுந்து நொறுங்கியது. தற்போது மீட்புப் பணிகள் நடைபெற்று வருவதாகக் கூறினார். இந்த விபத்தைத் தொடர்ந்து அமைச்சர் புஷ்ப கமல் தஹால் ‘பிரசந்தா’ அவசர அமைச்சரவைக் கூட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளார்.
விபத்து குறித்து வருத்தம் தெரிவித்த அவர், உடனடியாக மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளை மேற்கொள்ள உள்துறை அமைச்சகம், பாதுகாப்புப் பணியாளர்கள் மற்றும் அனைத்து அரசு நிறுவனங்களுக்கும் உத்தரவிட்டுள்ளார்.நேபாளத்தின் மலைப்பகுதியான முஸ்டாங் மாவட்டத்தில் கடந்த மே 29 ஆம் தேதி தாரா ஏர் விமானம் விபத்துக்குள்ளானது. நாட்டின் மிகப்பெரிய இந்த விமான விபத்தில் நேபாளத்தின் இந்திய குடும்பத்தைச் சேர்ந்த நான்கு பேர் உள்பட 22 பேர் பலியானது குறிப்பிடத்தக்கது.