ஒன்றிணைந்த அதிமுகவாக இருந்தால் மட்டுமே திமுகவை வீழ்த்த முடியும் என ஓபிஎஸ், இபிஎஸிடம் எடுத்துரைத்ததாக அண்ணாமலை செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
ஈரோடு இடைத்தேர்தலில் ஆதரவு யாருக்கு என்பது குறித்து பாஜக மாநில தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களிடம் பேசினார். பாஜக மேலிட பொறுப்பாளர் சி.டி. ரவியும் உடனிருந்து பதிலளித்தார்.
அப்போது சி.டி. ரவி பேசியதை தமிழில் மொழிபெயர்த்து பேசிய அண்ணாமலை தெரிவித்ததாவது, தமிழக நலனுக்காக இணைந்து செயல்பட வேண்டும் என எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வத்தை நேரில் சந்தித்து வலியுறுத்தினோம்.
ஒன்றிணைந்த அதிமுகவாக இருந்தால் மட்டுமே திமுகவை வீழ்த்த முடியும் என ஓபிஎஸ், இபிஎஸிடம் எடுத்துரைத்தோம். ஈரோடு இடைத்தேர்தலில் ஒரே அணியாக, ஒரே வேட்பாளராக நிறுத்த வேண்டும் என்பதே பாரதிய ஜனதாவின் நிலைப்பாடாக உள்ளது.
எனினும், வரும் 7ஆம் தேதி வரை அவகாசம் இருப்பதால், பாஜகவின் நிலைப்பாடு என்ன என்பது குறித்து ஆலோசித்து பின்னர் தெரிவிக்கப்படும். திமுகவை எதிர்க்க அதிமுகவில் உறுதியான, நிலையான வேட்பாளர் வேண்டும். அதனால் அதிமுகவின் இரு அணிகளும் இணைந்து செயல்படுவதே ஆரோக்கியமானதாக இருக்கும் எனக் குறிப்பிட்டார்.
இன்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலை டெல்லியில் இருந்து சென்னை வந்த சூட்டோடு முதலில் இபிஎஸ்யும் பின் ஓபிஎஸ் யையும் சந்தித்து வாழ்த்து தெரிவித்த போது பல்வேறு யூகங்கள் பலரிடம் ஏற்பட்டது.