ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக வேட்பாளராக இபிஎஸ் தரப்பில் அறிவிக்கப்பட்ட கே.எஸ்.தென்னரசு தொடர்வார் என அவைத்தலைவர் தமிழ்மகன் உசேன் அறிவித்துள்ளார்.
அதிமுக பொதுக்குழு மூலம் பொதுவான வேட்பாளரைத் தேர்வு செய்ய வேண்டும் என உச்சநீதிமன்றம் அறிவித்திருந்த நிலையில், தற்போது அதிமுக வேட்பாளராக தென்னரசு தொடருவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், தென்னரசுவை வேட்பாளராக நிறுத்துவது தொடர்பாக பொதுக்குழு உறுப்பினர்கள் ஒப்புதல் அளிக்கவும் தமிழ்மகன் உசேன் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக அளிக்கப்படும் ஒப்புதல் கடிதத்தில் பொதுக்குழு உறுப்பினர்கள் தங்களது விருப்பத்தை தெரிவிக்கலாம் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தோ்தலை காரணம் காட்டி இரட்டை இலை சின்னம் ஒதுக்கக்கோரி, எடப்பாடி பழனிசாமி தரப்பில், உச்ச நீதிமன்றத்தில் இடையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு தொடர்பாக தேர்தல் ஆணையம் உச்சநீதிமன்றத்தில் பதிலளித்தது.
அதனைத் தொடர்ந்து இரு தரப்பு வாதங்களையும் கேட்ட உச்சநீதிமன்றம், ஈரோடு இடைத்தேர்தலில் பொதுவான வேட்பாளரை நிறுத்துவது தொடர்பாக எடப்பாடி பழனிசாமியும், ஓ.பன்னீர்செல்வமும் பொதுக்குழு கூட்டி பேசி முடிவெடுக்கலாம் எனக் குறிப்பிட்டிருந்தது.
ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிட வேட்பாளரை அறிவித்த ஓ.பன்னீர்செல்வம் தனது ஆதரவாளர்களுடன் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார்.
பொதுக்குழு உறுப்பினர் மூலம் அதிமுக வேட்பாளரை தேர்வு செய்ய உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ள நிலையில், அறிவிக்கப்பட்ட வேட்பாளரை வாபஸ் பெறுவது குறித்து ஆலோசனை நடைபெற்று வருவதாகத் தெரிகிறது.
ஈரோடு கிழக்குத் தொகுதியில் போட்டியிடுவதற்காக வேல்முருகனை வேட்பாளாராக ஓபிஎஸ் அறிவித்திருந்தார். எனினும் பாஜக போட்டியிடுவதாக இருந்தால் வாபஸ் பெறுவதாக அறிவித்திருந்தார். தற்போது உச்சநீதிமன்ற உத்தரவைத் தொடர்ந்து வேட்பாளரை வாபஸ் பெறுவார் எனத் தெரிகிறது. இது தொடர்பாக வைத்திலிங்கம், பிரபாகர், மனோஜ் பாண்டியன் ஆகியோருடன் ஓபிஎஸ் ஆலோசனையில் ஈடுபட்டு பிரச்சினை பெரிதாகாமல் இருக்க ஒருமித்த முடிவு எடுத்துள்ளதாக கூறப்படுகிறது.