
வாணியம்பாடி அருகே பட்டாசு கடையில் இன்று பிற்பகலில் திடிரென்று தீ விபத்து ஏற்பட்டதில் தந்தை மகன் பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த புத்து கோவிலில் அம்பலூர் சாலையில் தனியார் பட்டாசு கடை உள்ளது. இதன் அருகே பட்டாசு குடோனும் அமைந்துள்ளது. இந்த பட்டாசு கடைகளில் 10-க்கும் மேற்பட்டோர் பணியாற்றி வருகின்றனர். இந்நிலையில் இன்று மதியம் பட்டாசு கடையில் திடீரென தீ பிடித்தது. தீ மளமள எரிந்து கடையில் இருந்த பட்டாசுகளில் தீ பரவியது.
இதனால் பட்டாசுகள் வெடித்து சிதறின. அருகே இருந்த பட்டாசு குடோன் மீது தீப்பொறி விழுந்தது. குடோனில் இருந்த பட்டாசுகள் திடீரென வெடிக்க தொடங்கின.
அங்கு பணியில் ஈடுபட்டிருந்த பெண்கள் உட்பட குழந்தைகள் உள்ளே சிக்கிக் கொண்டனர். அந்த வழியாக வந்தவர்கள் உடனடியாக வாணியம்பாடி, திருப்பத்தூர், ஜோலார்பேட்டை தீயணைப்பு துறையினருக்கும், அம்பலூர் போலீசாருக்கும் தகவல் தெரிவித்து மீட்கப்பட்டனர்.

இந்த விபத்தில் பலியானது பட்டாசு கடை உரிமையாளர் குமார்(44)அவரது மகன் தயாமூர்த்தி (12)என தெரியவந்துள்ளது.
இன்று காலை 10:00 மணிக்கு குமாரும், அவரது மகன் தயா மூர்த்தியுடன் பட்டாசு கடையில் வியாபாரம் செய்து கொண்டிருந்தனர்.
அப்போது திடிரென பட்டாசு கடை தீ பிடித்தது. கடையில் இருந்த பட்டாசுக்கள் முழுவதும் வெடித்துச்சிதறியுள்ளது.
இதில் சம்பவம் நடந்த இடத்திலேயே உடல் சிதறி குமாரும், அவரது மகன் தயா மூர்த்தியும் இறந்தனர்.மேலும் சிலர் காயமடைந்த நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.வாணியம்பாடி தீயணைக்கும் துறையினர் இரண்டு மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். இந்த விபத்தில் கடையில் இருந்த 5 லட்சம் ரூபாய் மதிப்புள்ள பட்டாசுக்கள் வெடித்து நாசமானது. மின் கசிவால் தீ விபத்து ஏற்பட்டது விசாரணையில் தெரிய வந்தது. அம்பலுார் போலீசார் விசாரிக்கின்றனர்.




