சென்னை நகைக்கடையில் 9 கிலோ நகை கொள்ளை சம்பவத்தில் வெளிமாநில கொள்ளையர்கள் அடையாளம் தெரிந்தது என போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் செய்தியாளர்களிடம் அளித்த பேட்டியில் கூறியுள்ளார்.

சென்னையில் பைக்கில் ஹெல்மெட் அணிந்து பின்னால் உட்கார்ந்து வரும் 5,600 பேருக்கு நற்சான்றிதழ் வழங்கி போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் செய்தியாளர்களிடம் அளித்த பேட்டியில் கூறியுள்ளதாவது,
சென்னை பெரம்பூர் நகைக்கடையில் 9 கிலோ நகைகள் கொள்ளை போன வழக்கில் நல்ல தடயங்கள் கிடைத்துள்ளன. 7 தனிப்படை அமைத்து விசாரணை நடக்கிறது. மேலும் கூடுதலாக 2 தனிப்படை அமைக்கப்பட்டு உள்ளது.
ஒரு இணை கமிஷனர், 2 துணை கமிஷனர்கள் தலைமையில் விசாரணை நடக்கிறது. வெளிமாநில கொள்ளையர்கள் இதில் சம்பந்தப்பட்டு உள்ளனர்.
கர்நாடகம், ஆந்திரா போன்ற மாநிலங்களில் இதுபோன்ற கொள்ளை சம்பவங்கள் நடந்து குற்றவாளிகள் பிடிபட்டு உள்ளனர்.
அந்த வழக்குகளில் பிடிபட்டுள்ள குற்றவாளிகளின் பெயர் பட்டியலை சேகரித்து விசாரித்து வருகிறோம். அதில் சிலரது அடையாளம் தெரிந்துள்ளது. பெயர்களும் கிடைத்துள்ளன. விரைவில் இந்த வழக்கில் குற்றவாளிகள் பிடிபடுவார்கள். 3 உதவி கமிஷனர்கள் தலைமையில் வெளிமாநிலங்களுக்கு தனிப்படையினர் சென்று உள்ளனர்.
கொள்ளையர்கள் பயன்படுத்திய வாகனத்தின் பதிவு எண் போலியானது. தமிழக பதிவு எண் வாகனத்தில் வந்துள்ளனர். வெளிமாநிலத்துக்கு தப்பிச்செல்லும் போது அதை மாற்றி உள்ளனர். வெளிமாநிலத்துக்கு தப்பிச்சென்று விட்டதால், அவர்களை பிடிப்பதில் தாமதம் ஏற்பட்டு உள்ளது.
சவுகார்பேட்டை கொள்ளை வழக்கில் சிலர் கைது செய்யப்பட்டு உள்ளனர். கொள்ளை போன பணத்தில் ரூ.70 லட்சம் அளவுக்கு மீட்கப்பட்டு உள்ளது. கொள்ளை பணத்தில் வாங்கப்பட்ட கார் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது. இந்த வழக்கில் பயங்கரவாதிகள் தொடர்பு இருப்பதாக தகவல் இல்லை.என கூறியுள்ளார்.




