லிங்கா பட சர்ச்சையில் ஓயாத ஒன்றாக, இப்போது ராக்லைன் வெங்கடேஷ் பத்திரிகை சுதந்திரத்துக்கு எதிராக செயல்படுவதாகக் கூறி, தமிழ்நாடு திரையரங்கு உரிமையாளர் சங்க, இணைச் செயலாளர் எஸ்.ஸ்ரீதர் கண்டனம் தெரிவித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில்…. ‘லிங்கா’ படம் தொடர்பாக தயாரிப்பாளர் சங்கத் தலைவர் கலைப்புலி எஸ்.தாணு, நடிகர் சங்கத் தலைவர் ஆர்.சரத்குமார் ஆகியோருடன் ‘லிங்கா’ திரைப்பட வினியோகஸ்தர்கள் பிப்ரவரி 19ம் தேதி பேச்சு வார்த்தை நடத்தினர். மொத்த நஷ்டத்தில் 8 கோடி ரூபாய் நஷ்டத்தை நாங்கள் ஏற்றுக் கொள்கிறோம், மீதியைத் தாருங்கள் என்று வினியோகஸ்தர்கள் கோரிக்கை வைத்தனர். இது சம்பந்தமாக தயாரிப்பாளர் ராக்லைன் வெங்கடேஷ், நடிகர் ரஜினிகாந்த் ஆகிய இருவருடன் பேசி ஒரு சுமூகமான முடிவுக்கு ஏற்பாடு செய்வதாக சரத்குமார் உறுதியளித்தார். சுமூகமான சூழலில் இப்பிரச்சனை கையாளப்பட்டுக் கொண்டிருந்த வேளையில் ராக்லைன் வெங்கடேஷ் பெங்களூரு சிட்டி சிவில் கோர்ட்டில் ‘லிங்கா’ படத்தின் 9 வினியோகஸ்தர்களுக்கு எதிராகவும், தமிழகத்தில் இருக்கும் தமிழ், ஆங்கில நாளிதழ், வார இதழ், மாத இதழ், மற்றும் தொலைக்காட்சி ஊடகங்கள், இணையதளங்கள் ஆகியவை ‘லிங்கா’ படம் சம்பந்தமாக செய்திகளை வெளியிடக் கூடாது என நீதிமன்ற தடை உத்தரவை பெற்றார் என்ற செய்தி அறிந்து பெரும் அதிர்ச்சியடைந்தேன். படம் வெளிவருவதற்கு முன்பு ஊடகங்களை தங்களுடைய பட பிரமோஷனிற்காக பயன்படுத்திக் கொண்ட ரஜினிகாந்த், ராக்லைன் வெங்கடேஷ் தரப்பு படம் வெற்றி, தோல்வி சம்பந்தமாக வரும் எதிர்மறையான செய்திகளை ஜனநாயக அடிப்படையில் சந்திக்க வேண்டுமே தவிர, சர்வாதிகார அடிப்படையில் ஜனநாயகத்தின் நான்காவது தூண் என்று சொல்லப்படும் மீடியாக்களுக்கு எதிரான நிலையை எடுப்பது வருத்தத்திற்குரியதும், ஏற்றுக்கொள்ளத்தக்கதும் அல்ல. இது போன்ற ஒரு தடை உத்தரவை ரஜினிகாந்திற்குத் தெரியாமல் ராக்லைன் வெங்கடேஷ் வாங்கியருப்பதற்கு வாய்ப்பேயில்லை என்றே கருதுகிறேன். எனவே, இச்செயலுக்கு ரஜினிகாந்த், ராக்லைன் வெங்கடேஷ் ஆகிய இருவரும் அனைத்து ஊடகங்களிடமும் நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்க வேண்டும். கடந்த 60 நாட்களுக்கு மேலாக நீடித்து வரும் ‘லிங்கா’ பட வினியோகஸ்தர் நஷ்ட ஈட்டுப் பிரச்சனையை சுமூகமான முறையில் தீர்ப்பதற்கு தமிழ்நாடு திரையரங்க உரிமையாளர்கள் சங்கத் தலைவரான ஆர்.எம்.அண்ணாமலை, தமிழ்த் திரைப்பட கூட்டமைப்பு தலைவரான ஆர்.ராமசுப்பு என்கிற பாலாஜி ஆகியோர் தலையிட வேண்டுகிறேன். சென்னை, செங்கல்பட்டு, சேலம், திருச்சி நகரம், ஆகிய பகுதிகளில் தற்போது விகிதாச்சாரா அடிப்டையிலேயே படங்கள் திரையிடப்படுகிறது. இதே போன்று தமிழ்நாடு முழுமையும் விகிதாச்சார அடிப்படையிலேயே இனி வரும் காலங்களில் புதிய படங்களைத் திரையிட தமிழ்நாடு திரையரங்க உரிமையாளர் சங்கம், வினியோகஸ்தர்களுடன் பேச்சு வார்த்தை நடத்தி முடிவெடுக்க உள்ளது. இதன் மூலம் நடிகர்களுடைய சம்பளத்தையும், தயாரிப்புச் செலவையும் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரமுடியும். தொடர்ச்சியாக நஷ்டப்பட்டு வரும், தயாரிப்பாளர்கள், வினியோகஸ்தர்கள், திரையரங்க உரிமையாளர்களின் கஷ்டம் போக்கப்படும். ‘லிங்கா’ படம் திரையிட்டதின் மூலம் தாங்கள் நஷ்டப்பட்டாலும் பரவாயில்லை, தங்களை நம்பி அட்வான்ஸ் கொடுத்த திரையரங்குகளும், எம்ஜி அடிப்படையில் பணத்தைச் செலுத்திய திரையரங்குகளும் நஷ்டமடைந்துவிடக் கூடாது என்பதற்காக அவர்களது பணத்தைத் திருப்பி வாங்கித் தருவதற்குத் தொடர்ச்சியாகப் போராடி வரும் ‘லிங்கா’ பட வினியோகஸ்தர்களது முயற்சி வெற்றியடைய வாழ்த்துகிறேன்.
- என்று கூறியுள்ளார்.