இந்தியாவில் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு நாள்தோறும் அதிகரித்து வருகிறது.
கடந்த 223 நாட்களில் இல்லாத அளவில் நேற்று பாதிப்பு 7.830 ஆக உயர்ந்திருந்தது. இந்நிலையில் இன்று மத்திய சுகாதாரத்துறை வெளியிட்ட அறிக்கையில், காலை 8 மணி வரையிலான கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 10,158 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக கூறப்பட்டு உள்ளது.
நேற்றுடன் ஒப்பிடுகையில் பாதிப்பு ஒரே நாளில் 30 சதவீதம் அதிகரித்துள்ளது. மேலும் தினசரி பாதிப்பு 10 ஆயிரத்தை தாண்டி இருப்பது கடந்த 8 மாதங்களில் இதுவே முதல் முறையாகும். தினசரி பாதிப்பு விகிதம் 4.42 சதவீதமாகவும், வாராந்திர பாதிப்பு விகிதம் 4.02 சதவீதமாகவும் உள்ளது.
நேற்று அதிகபட்சமாக கேரளாவில் 3,416 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது. மகாராஷ்டிராவில் 1,115, டெல்லியில் 1,149, அரியானாவில் 642, இமாச்சலபிரதேசத்தில் 441, தமிழ்நாட்டில் 432, உத்தரபிரதேசத்தில் 442, கர்நாடகாவில் 327, ஒடிசாவில் 200, ராஜஸ்தானில் 355, குஜராத்தில் 397, சத்தீஸ்கரில் 326, பஞ்சாபில் 229, ஜம்மு காஷ்மீரில் 122, கோவாவில் 121 பேருக்கு தொற்று உறுதியாகி உள்ளது. நாடு முழுவதும் இதுவரை பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 4 கோடியே 47 லட்சத்து 86 ஆயிரத்து 160 ஆக உயர்ந்துள்ளது.
தொற்று பாதிப்பில் இருந்து நேற்று 5,356 பேர் நலம் பெற்றுள்ளனர். இதுவரை குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 4 கோடியே 42 லட்சத்து 10 ஆயிரத்து 127 ஆக உயர்ந்துள்ளது. ஆஸ்பத்திரிகளில் தொற்று பாதிப்புடன் சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 44,998 ஆக உயர்ந்துள்ளது.
இது நேற்றை விட 4,783 அதிகமாகும். தொற்று பாதிப்பால் மகாராஷ்டிராவில் 9 பேர், குஜராத்தில் 2 பேர், டெல்லி, கேரளா, ராஜஸ்தான், தமிழ்நாட்டில் தலா ஒருவர் என நேற்று 15 பேர் இறந்துள்ளனர். கேரளாவில் விடுபட்ட இறப்புகளில் 4-ஐ கணக்கில் சேர்த்துள்ளனர். இதுவரை தொற்றுக்கு பலியானவர்களின் மொத்த எண்ணிக்கை 5 லட்சத்து 31 ஆயிரத்து 35 ஆக அதிகரித்துள்ளது.