
- இந்த ஆண்டு நீட் தேர்வுக்கு 20.8 லட்சம் பேர் விண்ணப்பம் கடந்த ஆண்டை விட 2.57 லட்சம் அதிகமாகும்.ஒவ்வொரு ஆண்டும் நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்கும் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. நீட் தேர்வுக்கு மாணவர்களை விட 2.8 லட்சம் மாணவிகள் கூடுதலாக விண்ணப்பித்துள்ளனர்.
- தேசிய மருத்துவ வாரிய சட்டத்தின் கீழ் நாட்டில் உள்ள அனைத்து மருத்துவக் கல்வி நிறுவனங்களிலும் இளநிலை, முதுநிலை பட்ட மருத்துவப் படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை நீட் தேர்வு மூலம் நடத்தப்படுகிறது. இந்திய அரசின், தேசிய தேர்வு முகமை இத்தேர்வை நடத்தி வருகிறது.
- இந்த ஆண்டு மே 7-ந் தேதி நீட் தேர்வு நடத்தப்படுகிறது. இதுவரை நீட் தேர்வுக்கு 20.8 லட்சம் மாணவ-மாணவிகள் விண்ணப்பித்துள்ளனர். இதில் 11.8 லட்சம் பேர் மாணவிகள். கடந்த ஆண்டை விட இது 2.57 லட்சம் கூடுதலாகும். இது ஒரு சாதனையாக கருதப்படுகிறது. மாணவர்களை விட 2.8 லட்சம் மாணவிகள் கூடுதலாக விண்ணப்பித்துள்ளனர்.
- மகாராஷ்டிராவில் 2.8 லட்சம் பேரும், உத்தரபிரதேசத்தில் 2.7 லட்சம் பேரும் மற்றும் ராஜஸ்தான் , தமிழ்நாடு, கர்நாடக, பீகார், மேற்கு வங்காளம், மத்திய பிரதேசம் ஆகிய மாநிலங்களில் ஒரு லட்சத்திற்கும் அதிகமானோர் விண்ணப்பித்துள்ளனர். ஒவ்வொரு ஆண்டும் நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்கும் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. கொரோனா பாதித்த 2020-ம் ஆண்டை விட தற்போது 11.5 சதவீதம் பேர் அதிகம் விண்ணப்பித்துள்ளனர். ஓ.பி.சி. பிரிவில் 8.9 லட்சம் பேரும், எஸ்.சி. பிரிவில் 3 லட்சம் பேரும், எஸ்.டி. பிரிவில் 1.3 லட்சம் பேரும், பொது பிரிவில் 6 லட்சம் பேரும் விண்ணப்பித்துள்ளனர்.
- எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ்., ஆயுர்வேத மருத்துவம், சித்த மருத்துவம், யுனானி ஹோமியோபதி படிப்புகளுக்கும் நீட் தேர்வு நடத்தப்படுகிறது. நீட் தேர்வுக்கான நாள் நெருங்கி வரும் நிலையில் நாடு முழுவதும் கொரோனா பரவல் அதிகரித்து வருவதை காரணம் காட்டி சமூக ஆர்வலர்கள் பலர் நீட் தேர்வை ஒத்திவைக்க வேண்டும் என்று சமூக வலைதளங்களில் பதிவு செய்து வருகின்றனர். இருப்பினும் கொரோனா நெறிமுறைகளை பின்பற்றி அட்டவணைப்படி தேர்வு நடத்தப்படும் என்று அரசு துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.




