
கர்நாடக சட்டசபை தேர்தலில் மனு தாக்கல் இன்று நிறைவு என்பதால் இறுதி கட்ட வேட்புமனு தாக்கல் செய்ய ஆரவாரத்துடன் வேட்பாளர்கள் வந்தனர் .வேட்புமனுக்களை தாக்கல் இன்று (வியாழக்கிழமை) மதியம் 3 மணியுடன் நிறைவடைந்தது.
கர்நாடக சட்டசபைக்கு வருகிற மே 10-ந் தேதி தேர்தல் நடக்கிறது. இதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த 13-ந் தேதி தொடங்கி இன்று வரை நடைபெற்றது. ஆளும் பா.ஜனதா, காங்கிரஸ், ஜனதா தளம்(எஸ்) கட்சிகள் பெரும்பாலான தொகுதிகளுக்கு வேட்பாளர்களை அறிவித்துவிட்டன. மனுதாக்கலின் 5-வது நாளான நேற்று முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை சிக்காவி தொகுதியில் மனு தாக்கல் செய்தார். ஏற்கனவே நல்ல நாள் என கருதி பசவராஜ் பொம்மை கடந்த 15-ந் தேதி மனு தாக்கல் செய்தார்.
நேற்று 2-வது முறையாக மனு தாக்கல் செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இதையும் படியுங்கள்: கர்நாடக சட்டசபை தேர்தலில் போட்டியிடும் நீதிபதி-கைதி சட்டசபை எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா வருணா தொகுதியில், உப்பள்ளி-தார்வார் தொகுதியில் முன்னாள் முதல்-மந்திரி ஜெகதீஷ் ஷெட்டர் ஆகியோரும் நேற்று மனு தாக்கல் செய்தனர்.
நேற்று ஒரே நாளில் 935 பேர் 1,110 மனுக்களை தாக்கல் செய்தனர். வேட்பாளர்களில் ஆண்கள் 873 பேரும், பெண்கள் 62 பேரும் உள்ளனர். ஆம் ஆத்மி கட்சி 91 மனுக்களையும், பா.ஜனதா 164 மனுக்களையும், காங்கிரஸ் 147 மனுக்களையும், ஜனதா தளம்(எஸ்) 108 மனுக்களையும், பகுஜன் சமாஜ் கட்சி 46 மனுக்களையும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி ஒரு மனுவையும் தாக்கல் செய்துள்ளன.
பதிவு செய்த மற்றும் பதிவு செய்யப்படாத கட்சிகள் சார்பில் 193 மனுக்களும், சுயேச்சைகள் 359 மனுக்களையும் தாக்கல் செய்துள்ளனர். மொத்தத்தில் இதுவரை 5 நாட்களில் 2,968 பேர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர். வேட்பு மனுக்களை தாக்கல் இன்று (வியாழக்கிழமை) மதியம் 3 மணியுடன் நிறைவடைந்தது. இதனால் இன்று அதிகம் பேர் மனுக்களை தாக்கல் செய்ய அலுவலகங்களில் குவிந்தனர். பலர் மேள, தாளத்துடன் ஆரவாரமாக வந்ததால் மனுதாக்கல் அலுவலகங்கள் விழா கோலமாக காட்சியளித்தன.




