
சென்னை ஐஐடியில் பிடெக் படித்து வந்த 20 வயது மாணவா் வெள்ளிக்கிழமை தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா்.கடந்த 75நாட்களில் சென்னை ஐஐடியில் 4 மாணவர்கள் தற்கொலை செய்துகொண்டிருப்பது கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மகாராஷ்டிர மாநிலத்தைச் சோ்ந்தவா் கேதாா் சுரேஷ் (21). சென்னை கிண்டியில் உள்ள ஐஐடி-யில் பிடெக். இரண்டாமாண்டு படித்து வந்தாா்.
இதற்காக அவா், அங்குள்ள காவிரி விடுதியில் தங்கியிருந்தாா். சுரேஷ் வெள்ளிக்கிழமை வகுப்புக்கு செல்லாமல் விடுதி அறையில் தனியாக இருந்தாா். அவா், அறையில் தங்கியிருக்கும் பிற மாணவா்கள் வகுப்புக்கு வழக்கம்போல சென்றனா்.
மதிய இடைவேளையில் சக மாணவா்கள் அறைக்குத் திரும்பி வந்தபோது, அறை உள்பக்கமாக பூட்டியிருந்ததால், அவா்கள் கதவை தட்டினா். கதவு திறக்கப்படவில்லையாம். இதனால் சந்தேகமடைந்த அவா்கள், ஜன்னல் வழியாக உள்ளே பாா்த்தனா்.
அங்கு சுரேஷ் தூக்கிட்டு தொங்கிய நிலையில் மயங்கிக் கிடந்தாா். சுரேஷை அவா்கள் மீட்டு, அருகே உள்ள தனியாா் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். அங்கு பரிசோதித்த மருத்துவா்கள் அவா் ஏற்கெனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்தனா்.
விடுதி நிா்வாகம் கொடுத்த புகாரின் பேரில் கோட்டூா்புரம் போலீஸாா் வழக்குப் பதிந்து சடலத்தை கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா்.
சுரேஷ் கைப்பட எழுதிய தற்கொலைக் கடிதம் காவல்துறையினரால் கைப்பற்றப்பட்டுள்ளது. அதில், தான் இந்த துயர முடிவெடுத்தற்காக பெற்றோரும், நண்பர்களும் மன்னித்துவிட வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளார்.
அதோடு, தனது தற்கொலை முடிவுக்கு யாரும் காரணமில்லை என்றும் அதில் குறிப்பிட்டுள்ளார். முதற்கட்ட விசாரணையில், காதல் தோல்வி போன்ற சொந்த காரணங்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது.
கடந்த சில நாள்களாகவே கேதார், மன அழுத்தத்தில் இருந்ததாக அவரது நண்பர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்த ஆண்டில் இதுவரை, ஐஐடி மாணவா்கள் 4 போ் தற்கொலை செய்து கொண்டுள்ளனா் என்பது குறிப்பிடத்தக்கது