ராகுல் காந்திக்கு தண்டனை வழங்கியவர் உள்பட 68 நீதிபதிகளின் பதவி உயர்வை உச்ச நீதிமன்றம் நிறுத்தி வைத்த்துள்ளது.
நீதிபதிகளுக்கு மாவட்ட நீதிபதிகளாக பதவி உயர்வு வழங்குவதற்காக குஜராத் மாநில உயர் நீதிமன்றம் பரிந்துரை செய்தது. இந்த வழக்கை தலைமை நீதிபதி அமைக்கும் வேறு ஒரு அமர்வில் விசாரிக்க வேண்டும் என்றும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
அவதூறு வழக்கில் காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்திக்கு 2 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து சூரத் நீதித்துறை நடுவர் எச்.எச்.வர்மா தீர்ப்பளித்தார். அவரது இந்த தீர்ப்பைத் தொடர்ந்து ராகுல் காந்தியின் எம்.பி. பதவி பறிக்கப்பட்டது. இந்த தீர்ப்பை எதிர்த்து ராகுல் காந்தி மேல்முறையீடு செய்துள்ளார். இந்த நிலையில், ராகுல் காந்தி வழக்கில் தீர்ப்பளித்த சூரத் நீதிபதி எச்.எச்.வர்மா உள்ளிட்ட 68 நீதித்துறை நடுவர்களுக்கு மாவட்ட நீதிபதிகளாக பதவி உயர்வு வழங்குவதற்காக குஜராத் மாநில உயர் நீதிமன்றம் பரிந்துரை செய்தது.
எச்.எச்.வர்மாவுக்கு ராஜ்கோட் மாவட்ட நீதிபதியாக பதவி உயர்வு வழங்கப்பட்டிருந்தது. இந்த பரிந்துரையை அமல்படுத்துவது தொடர்பாக அரசு அறிவிப்பு வெளியிட்டது. இதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. நீதிபதிகள் எம்.ஆர்.ஷா, சி.டி.ரவிக்குமார் ஆகியோர் கொண்ட அமர்வில் இந்த மனு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. மனுவை பரிசீலித்த நீதிபதிகள், குஜராத் மாநிலத்தில் 68 நீதித்துறை நடுவர்களுக்கு மாவட்ட நீதிபதிகளாக பதவி உயர்வு வழங்குவதை நிறுத்தி வைப்பதாக அறிவித்தனர்.
மேலும் நீதிபதி ஷா மே 15-ம் தேதி ஓய்வு பெறுவதால், இந்த வழக்கை தலைமை நீதிபதி அமைக்கும் வேறு ஒரு அமர்வில் விசாரிக்க வேண்டும் என்றும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.