அதானி குழுமம் மீதான குற்றச்சாட்டில் உண்மை இல்லை என உச்ச நீதிமன்ற குழு தெரிவித்த நிலையில், அதன் பங்குகள் நேற்று மளமளவென உயர்ந்தன. இதனால் ஒட்டுமொத்த பங்கு மதிப்பு ரூ.10 லட்சம் கோடியைத் தாண்டியது.
அதானி குழுமம் தங்கள் நிறுவன பங்குகளின் விலையை செயற்கையாக உயர்த்தி மோசடியில் ஈடுபட்டதாக அமெரிக்காவின் ஹிண்டன்பர்க் ரிசர்ச் நிறுவனம் குற்றம்சாட்டியது. இது தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இதையடுத்து, ஓய்வுபெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதி ஏ.எம்.சாப்ரே தலைமையில் ஒரு குழு அமைக்கப்பட்டது. ஹிண்டன்பர்க் குற்றச்சாட்டு குறித்து ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிக்குமாறு இக்குழுவுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.
இதுகுறித்து விசாரணை மேற்கொண்ட அக்குழு, கடந்த 19-ம் தேதி உச்ச நீதிமன்றத்தில் தனது அறிக்கையை சமர்ப்பித்தது. அதில், அதானி குழுமம் பங்குகளின் விலையை செயற்கையாக உயர்த்தி மோசடியில் ஈடுபட்டதற்கான எந்தவித முகாந்திரமும் கண்டறியப்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், செபியின் தரப்பிலும் எந்த ஒரு தவறும் நடைபெறவில்லை என்று அதில் கூறப்பட்டுள்ளது.
இந்த அறிக்கை தாக்கல் செய்யப்பட்ட பிறகு, முதல் பங்கு வர்த்தக நாளான நேற்று அதானி குழும பங்குகள் மளமளவென உயர்ந்தன. இதையடுத்து, இக்குழுமத்தின் ஒட்டுமொத்த பங்குகளின் மதிப்பு ரூ.10 லட்சம் கோடியை தாண்டியது. இது கடந்த வெள்ளிக்கிழமை ரூ.9.34 லட்சம் கோடியாக இருந்தது.
குறிப்பாக, அதானி என்டர்பிரைசஸ் பங்கு நேற்று ஒரே நாளில் 19.5 சதவீதம் உயர்ந்தது. இதுபோல அதானி வில்மர் 10%, அதானி போர்ட்ஸ் 6.4% உயர்ந்தன. அதானி கிரீன் எனர்ஜி, அதானி பவர், அதானி டோட்டல் காஸ், அதானி டிரான்ஸ்மிஷன், என்டிடிவி ஆகிய பங்குகளின் விலை தலா 5% உயர்ந்தது.