December 9, 2024, 2:57 AM
26.4 C
Chennai

ஜெயலலிதாவின் முதல் நாயகன் எம்ஜிஆர், கடைசி நாயகன் சரத்பாபு..

images 10

நடிகர் சரத்பாபு உடல்நலக்குறைவால் நேற்று காலமானார் .அவரது உடலுக்கு ஆந்திரா‌ தமிழகத்தில் திரை உலகினர் திரளான மக்கள் அஞ்சலி செலுத்தினர்.அவரது உடல் இன்று சென்னையில் அடக்கம் செய்யப்படுகிறது. ஜெயலலிதாவின் முதல் கதாநாயகன் எம்ஜிஆர், கடைசி கதாநாயகன் சரத்பாபு என்கிற பெருமை சரத்பாபுவுக்கு உண்டு.

நடிகர் சரத்பாபு (71) நீண்ட நாட்களாக நோய்வாய்ப்பட்ட நிலையில் நேற்று ஐதராபாத்தில் காலமானார். அவரது உடல் சென்னை எடுத்துவரப்பட்டு இறுதி அஞ்சலிக்குப் பிறகு மதியம் 2-30 மணிக்கு கிண்டியில் அடக்கம் செய்யப்படுகிறது. சரத்பாபுவின் உடலுக்கு நடிகர் ரஜினிகாந்த நேரில் அஞ்சலி செலுத்தி தனது நண்பர் குறித்த பல தகவல்களை வருத்தத்துடன் பகிர்ந்தார்.

சரத்பாபு ரஜினி, கமல் இருவரது நெருங்கிய நண்பர். கமல் ரஜினி போல இவரும் பாலச்சந்தர் மூலம் அறிமுகமானவர். போலீஸ் அதிகாரியாக ஆகவேண்டும் என கல்லூரி காலங்களில் கனவுகண்ட சரத்பாபு பார்வை பிரச்சினை காரணமாக அது நிறைவேறாமல் போக நடிகரானார். பாலச்சந்தர் பட்டினப்பிரவேசம் படத்தில் அறிமுகப்படுத்தினார். கமல் ரஜினி பிரபலமாகாத காலக்கட்டத்தில் அவர்களுடன் இணையாக நடித்தவர் சரத்பாபு.

ரஜினிக்கு பெரும் திருப்புமுனையாக அமைந்த மகேந்திரனின் முள்ளும் மலரும் படத்தில் ரஜினியின் தங்கையை விரும்பும் இன்ஜினியர் பாத்திரத்தில் ரஜினிக்கு இணையான ரோலில் நடித்திருப்பார். அந்தப் படத்தில் இவருக்கு ஒரு பாடலும் உண்டு. அந்த பாடல் தமிழ் ரசிகர்களின் மனதில் நீங்கா இடம்பெற்ற ”செந்தாழம்பூவில் வந்தாடும் தென்றல்” என்கிற பாடல். அந்தப்பாடலுக்குப்பின் ஒரு சுவாரஸ்ய கதை உண்டு. படம் சரியாக வரவில்லை என தயாரிப்பாளர் இயக்குநர் மகேந்திரன் மீது கோபப்பட, தயாரிப்பாளரின் நண்பர் கமல்ஹாசன் அவரை சமாதானப்படுத்தி சுவாரஸ்யத்தைக்கூட்ட இந்த பாடலை எடுத்து சேர்த்ததாக சொல்வார்கள்.

ரஜினியுடன் முள்ளும் மலரும், வேலைக்காரன், நெற்றிக்கண், அண்ணாமலை, முத்து, பாபா என பல படங்களில் நடித்துள்ளார். 99% படங்கள் சூப்பர் ஹிட். அதேபோல் கமல்ஹாசனுக்கு பெயர் பெற்றுத்தந்த ஆரம்பகால படங்களான நிழல் நிஜமாகிறது, சிப்பிக்குள் முத்து, மரோசரித்ரா, சலங்கை ஒலி, சட்டம் போன்ற படங்களில் சரத்பாபு இணையான ரோலில் நடித்திருக்கிறார். இதில் சட்டம் படம் இந்திப்படமான தோஸ்தானா படத்தின் தழுவல். அமிதாப், சத்ருகன் சின்ஹா நடித்த வெற்றிப்படம். சத்ருகன் சின்ஹா ரோலில் சரத்பாபு சிறப்பாக நடித்திருப்பார்.

ALSO READ:  துணை முதல்வர் பதவிக்கு தகுதியற்றவர் உதயநிதி ஸ்டாலின்!

இதுதவிர சரத்பாபுவுக்கு என்று தமிழ், தெலுங்கு படங்களில் பெரும் ரசிகர் கூட்டமே இருந்தது. தமிழில் உதிரிப்பூக்கள், 47 நாட்கள், உதிரிப்பூக்கள், கண்ணில் தெரியும் கதைகள், விஜயகாந்துடன் அகல்விலக்கு, திசை மாறிய பறவைகள், உச்சக்கட்டம், நதியை தேடி வந்த கடல் என பல படங்களில் நடித்துள்ளார். இதில் உச்சகட்டம் என்கிற சைகோ கொலைகாரன் படம் 80 களில் பிரபலமான படமாக பேசப்பட்டது. டாக்டர் ஒருவர் தன் மனைவியுடன் அமைதியான வாழ்க்கை வாழும் நிலையில் மனைவியின் கல்லூரி நண்பன் மனைவியை பலாதகாரம் செய்ய அதை தவறாக புரிந்துகொண்டு மனைவியை கொலை செய்ய அலைவார் டாக்டர்.

இதனால் கணவனை விட்டு விலகி வேறு திருமணம் செய்ய மனைவி முடிவு செய்திருப்பார். இதற்குள் ஒரு கொலை செய்து போலீஸில் தேடப்படும் குற்றவாளியான டாக்டர், தன் மனைவியை கொலை செய்ய வருவார் என்பதால் அவரை காப்பாற்ற போலீஸ் பாதுகாப்பு கொடுத்திருக்கும், ஆனாலும் அதையும் மீறி மனைவியை கொலை செய்ய முயலும் கிளைமாக்ஸ் காட்சி அந்த காலக்கட்டத்தில் பிரபலமாக பேசப்பட்டது. இந்தப்படத்தில் கொலைகார டாக்டராக கொடூரமானவராக சரத்பாபு நடித்து கலக்கியிருப்பார்.

ALSO READ:  சிலம்பு எக்ஸ்பிரஸ் பயணிகளுக்கு ஒரு நல்ல செய்தி!

இதுவரை சொன்னவைகளைவிட கூடுதல் சுவாரஸ்யம் சரத்பாபு மிகப்பிரபலத்தின் கடைசி படத்தின் கதாநாயகன் என்பதுதான். சரத்பாபு பிரபலமாக இருந்த காலகட்டத்தில் எம்ஜிஆர் படத்தின் பிரபலமான நாயகி ஜெயலலிதா, தனது திரையுலக வாழ்வின் இறுதிக் கட்டத்தில் இருந்தார். பல புதுமுகங்கள் திரைக்கு வந்த நிலையில் தனது திரையுலக பிரவேசத்தின் 15 வது ஆண்டில் 1980 களில் அவர்களுடன் போட்டியிடும் நிலையில் ஜெயலலிதா இருந்தார்.

இயக்குநராக லெனின் முதன் முதலில் அறிமுகமான, மகரிஷியின் கதையை தழுவி எடுக்கப்பட்ட ’நதியைத்தேடி வந்த கடல்’ படத்தில் கதாநாயகியாக இரண்டாவது இன்னிங்க்ஸை ஆரம்பித்தார் ஜெயலலிதா இப்படத்தின் கதாநாயகன் சரத்பாபு. இந்தப்படம் எதிர்பார்த்த அளவுக்கு ஓடாததால் தன் சினிமா வாழ்க்கையை அத்துடன் நிறுத்திக்கொண்டார். அதன் பின்னர் 1982-ல் அதிமுகவில் இணைந்த அவர் எம்ஜிஆர் மறைவுக்குப்பின் கட்சியின் பொதுச் செயலாளர், முதல்வராக இருந்து மறைந்தார். அந்த வகையில் ஜெயலலிதாவின் முதல் கதாநாயகன் எம்ஜிஆர், கடைசி கதாநாயகன் சரத்பாபு என்கிற பெருமை சரத்பாபுவுக்கு உண்டு.

ALSO READ:  செங்கோட்டை: காங்கிரஸ் சார்பில் மகாத்மா காந்தியின் 156வது பிறந்தநாள் விழா!

ஜெயலலிதாவின் கடைசி கதாநாயகன் சரத்பாபு என்கிற தகவல் இன்றைய காலகட்டத்தில் ரசிகர்கள் அறியாத தகவல். சரத்பாபு மறைந்த இந்த நேரத்தில் இதை நினைவு கூர்வது சரியாக இருக்கும் என்பதால் இந்த பதிவு.

author avatar
Sakthi Paramasivan.k
Media News Reporter, Rajapalayam

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week