
சிதம்பரம் நடராஜர் கோவிலை கையகப்படுத்த துடிக்கும், தமிழக அரசின் செயல்பாட்டை இந்துமுன்னணி வன்மையாக கண்டிக்கிறது; இந்து முன்னணி போராட்டம் நடத்தும் என்று அந்த அமைப்பின் மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் அறிக்கை வெளியிட்டிருக்கிறார். அவரது அறிக்கை:
அனைத்து கோவில்களிலும் திருவிழா காலங்களில் தரிசன நேரங்களில் மாற்றம் ஏற்படுவதும், பக்தர்களின் கூட்டத்திற்கு ஏற்றவாறு தரிசன நிகழ்ச்சிகளை மாற்றியமைப்பதும் வழக்கமாக இருந்து வருகிறது.
இந்த நிலையில் ஆனி திருமஞ்சன தரிசனத்தை முன்னிட்டு கனக சபையிலிருந்து தரிசனம் செய்வதில் மாற்றம் செய்து கோவில் நிர்வாகம் அறிவிப்பு செய்ததை அரசு நிர்வாகம் தவறாக சித்தரித்ததையும் கோவிலில் அத்துமீறி நுழைந்து குழப்பத்தை ஏற்படுத்திய செயலானது
கண்டிக்கத்தக்கதாகும்.
கோவிலில் பிரச்சனைகள் ஏற்படும் போது, தீக்ஷிதர்கள் சட்ட ரீதியாக எதிர்கொள்ள வேண்டுமே தவிர, கோவிலுக்குள் பலத்தை காட்டுவதும் பக்தர்களை தள்ளிவிடும் செயலானது. வன்மையாக கண்டிக்கத்தக்கது. இது போன்ற செயல்களால் கோவிலை புனிதமாக கருதி காப்பாற்றிவந்த தீக்ஷதர் பரம்பரையின் நன்மதிப்பானது கேள்விக் குறியாக்கியுள்ளது.
சிதம்பரம் நடராஜர் கோவிலை தீக்ஷிதர்கள் ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளாக நிர்வகித்து வருகிறார்கள் எனவே சிதம்பரம் நடராஜர் கோவில் நிர்வாகத்தில் அரசு தலையிட முடியாது என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கிய பிறகும் கூட, இந்து சமய அறநிலைத்துறையின் மூலம் சர்ச்சையை ஏற்படுத்துவதும், கோவில் அமைதியின்மையை ஏற்படுத்தி பக்தர்களுக்கு இடையூறு செய்து வருவதையும், தமிழக அரசு நிறுத்திக் கொள்ள வேண்டும்.தொடந்து பக்தர்களுக்கு இடையூறு ஏற்படுத்தினால் இந்து முன்னணி போராட்டம் நடத்தும்..